Tamil News
Home ஆய்வுகள் சாத்வீகப் போராட்டம் பயங்கரவாதம் ஆகுமா?

சாத்வீகப் போராட்டம் பயங்கரவாதம் ஆகுமா?

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்று சொல்வார்கள். தன்மைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியம். அரசியலைப் பொறுத்தமட்டில் இந்த உத்தி மிகமிக முக்கியமானதாகும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்கின்றது. போராட்டங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் தோற்றுப் போயிருக்கின்றன.

முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. சாத்வீகப் போராட்டம் நடத்தப்பட்டது. அது தோல்வியைத் தழுவியது. சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை இழப்பதற்கு அரச அடக்குமுறையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கடினப்போக்கும் காரணமாகின. இதனால் ஆயுதப் போராட்டம் தலைதூக்கியது.

ஆயுதப் போராட்டம் இரு நாடுகளுக்கிடையிலான பெரும் யுத்தமாக மாறியது. யுத்த நிலைமைகள் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆயினும் அந்தப் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தி நாட்டில் நிரந்தரமான அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இருதரப்பிலும் விட்டுக் கொடுப்புடனான அணுகுமுறைகள் கையாளப்படவில்லை.

இதற்கான முன் முயற்சிகள் அரச தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை இனப்பிரச்சினையாகப் பரிமாணம் பெற்று அரச தரப்பினாலேயே இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் அது மேற்கொள்ளப்படவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், உரிய கடப்பாட்டுடன் அது செயற்படத் தவறியது. இறுக்கமான நடைமுறைகளின் மூலம் ஆயுதப் போராட்டத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்திருந்த விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதிலேயே கவனம் செலுத்தியது. அரசியல் ரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டு, நீதியானதோர் அரசியல் தீர்வை முன்வைத்து அவர்களைச் செயலிழக்க வைப்பதற்கு அரச தரப்பினரால் முடியாமல் போனது. இந்த அரசியல் தந்திரோபாயத்தைப் பயன்படுத்துவதற்குப் பேரின அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் முன்வரவே இல்லை. அந்த அணுகுமுறையைக் கையாள்வதற்கு அவர்கள் தவறி விட்டார்கள்.

அவர்களின் கடும்போக்கும், விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்தமையும், சிறுபான்மை இன மக்களை இந்த நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தமையும் மோசமான யுத்த அழிவுகளுக்கே வழிசமைத்திருந்தன. பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதாக சர்வதேசத்திற்குப் போக்குக் காட்டி இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்று, விடுதலைப்புலிகளை ஆயுத வழியில் தோற்கடித்து 2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ அரசு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இல்லாமல் செய்யப்பட்டதேயொழிய யுத்தம் மூள்வதற்கு மூலகாரணமாகிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு காண்பதற்கு அந்த அரசு முற்படவில்லை. இந்தியாவின் அழுத்தம் காரணமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமே ஒருதலைப்பட்சமாக முறியடித்தது.

சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களை இன ரீதியாக அடக்கி ஒடுக்கி அவர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதிலேயே ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டனர். செயற்பட்டும் வருகின்றனர்.

ஒற்றையாட்சி என்ற அச்சாணியில் சிங்கள பௌத்த தேசியத்தை முழுமையாக நிலைநாட்டுவதிலேயே மாறிமாறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற பேரின அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர். பல மதங்களைப் பின்பற்றுகின்ற பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் பன்மைத்தன்மையைக் கொண்டதோர் ஆட்சி முறையை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை.

பன்மைத்தன்மைக்கு இடமளித்தால் நாடு இரண்டாகப் பிளவுபடும். சிங்கள பௌத்த தேசியத்திற்கு இடமில்லாமல் போகும். சிங்கள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற போலி அரசியல் பிரசாரத்திலேயே அவர்களின் அரசியல் செயற்பாடுகள் மையம் கொண்டிருக்கின்றன. இதற்கு அடிநாதமாக சிங்கள பௌத்த தேசியக் கொள்கையை அவர்கள் கைக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் நாட்டில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் வழிமுறையே இந்த நாட்டின் அரசியல் வழித்தடமாக மாறியிருக்கின்றது.

இந்த இனவாத அரசியல் நெறிமுறையின் அப்பட்டமான விளைவை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2020 பொதுத் தேர்தலும் இந்த கடும்போக்கு அரசியல் செயற்பாடுகளில் ராஜபக்ஷ குடும்பத்தினரான அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளுமே முன்னணியில் திகழ்கின்றனர். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அவர்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து உண்மையான சுதந்திரத்தை சிங்கள மக்களுக்குப் பெற்றுக்கொடுத்ததாகப் பிரசாரம் செய்து அதனையே தமது அரசியல் முன்னேற்றத்திற்கான முதலீடாகப் பயன்படுத்தினர்.

அந்த அரசியல் போக்கின் தொடர்ச்சியிலேயே ஐந்து ஆண்டுகளின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் ஊடாகக் கைப்பற்றி 2020 இல் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட முழுமையான ஆட்சி ஒன்றை அவர்கள் அமைத்திருக்கின்றனர்.

ஆயுத ரீதியில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து 11 வருடங்கள் கழிந்த பின்னரும், புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருப்பதாகவும், அவர்கள் மீண்டும் நாட்டில் காலூன்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டு தென்னிலங்கை அரசியல் வெளியில் ‘புலிப்பயப் பிராந்தியை’ ஏற்படுத்தி இருக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வதையும், போராளிகளான மறைந்த விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதையும் அவர்கள் தடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தியாகதீபம் என தமிழ் மக்களால் போற்றப்படுகின்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தனது உயிரை ஈர்ந்த திலீபனை நினைவுகூர்வதற்கும் இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

தடைசெய்யப்பட்ட இயக்கமாகிய விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகிய திலீபனை நினைவுகூர்வது பயங்கரவாதி ஒருவரை நினைவுகூர்வதாகவும், அது பயங்கரவாதத்தை மீண்டும் தோற்றுவிக்கவும், அமைதியின்மையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என்ற காரணத்தைக் காட்டி சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் பொலிசார் தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள விடுதலை செய்ய வேண்டும். இரணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள், பொதுக் கட்டிடங்கள் பாடசாலைகள் என்பவற்றில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து திலீபன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

நீர்கூட அருந்தாமல் இரண்டு வாரங்கள் போராடிய திலீபன் தியாக தீபமாகத் தன்னை அர்ப்பணம் செய்தார். அவருடைய கோரிக்கைகளை ஏற்க இந்திய அரசு மறுத்து விட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அரச படைகளுடனான தமிழ் இளைஞர்களின் ஆயுத மோதல்கள் நிறுத்தப்பட்டு, ஆயுதக் கையளிப்பு நடைபெற்று, போராளிகளுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கி இருந்த தருணத்திலேயே திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் இடம் பெற்றிருந்தது.

இதனால் திலீபன் உண்ணநோன்பிருந்தபோது யுத்த மோதல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அந்த வகையில் அரசாங்கம் குறிப்பிடுகின்ற பயங்கரவாதம் இருக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காணுகின்ற ஒரு நடவடிக்கையாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாணசபை ஆட்சி முறைமைக்கு வழிகோலப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் திலீபன் முன்வைத்திருந்த கோரிக்கைகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சாரம்சத்தையும் அதன் நிறைவேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததே தவிர ஆயுதப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. பயங்கரவாதத்தை அது எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை.

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும். தனிநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திலீபன் கோரவில்லை. சிங்களப் பேரினவாதிகளுக்கு அரசியல் ரீதியாக வயிற்றைக் கலக்குகின்ற ஈழம் என்ற சொல்லும் அங்கு பயன்படுத்தப்படவில்லை. ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

உலகின் அஹிம்சா மூர்த்தி என்றழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தி பிரித்தானிய சாம்பராச்சியத்தை மண்டியிட வைப்பதற்காகப் பயன்படுத்திய சாத்வீகப் போராட்டமாகிய உண்ணாவிரதப் போராட்டத்தையே திலீபன் மேற்கொண்டிருந்தார்.

தியாகி திலீபனை நினைவுகூர்வது தடை செய்யப்பட வேண்டும் என்ற பொலிசாரின் கோரிக்கையில் திலீபனுடைய வாழ்க்கை வரலாற்றையே அவர் ஒரு பயங்கரவாதி என்பதற்கான சான்றாதாரமாக பொலிசார் முன்வைத்திருக்கின்றனர். ஆனால் திலீபனுடைய போராட்டத்தின் அடிப்படை நிலைமைகள், அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய காலச் சூழல் அரசியல் கள நிலைமைகள் என்பவற்றைக் கவனத்திற் கொள்ள பொலிசார் தவறிவிட்டார்கள்.

பொலிசார் தமது வாதத்திற்காகப் பல காரணங்களைக் கூறினாலும்கூட சாத்வீகப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கணிக்க முடியாது. அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி தனது கோரிக்கைகள் கடும்போக்கு கொண்ட ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்படாத நிலையில் தனது உயிரையே அர்ப்பணித்த அவரை நினைவுகூர்வதன் மூலம் பயங்கரவாதம் உருவாகிவிடும் என்று கூறுவதும் ஏற்புடையதல்ல.

ஒரு ஜனநாயக நாட்டில் அஹிம்சை வழியில் போராடிய ஒரு தியாகியை நினைவுகூர்வதைத் தடுப்பதென்பதை நியாயமான ஒரு செயற்பாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஜனநாயகத்திற்கும், ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானதாகவே அமையும்.

இத்தகைய நிலையில் தியாகி திலீபனை நினைவுகூர்வதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை விலக்கிக் கொள்ளக் கோரி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்குக் கடிதம் அனுப்புவதற்காக தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும். ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவதுடன் நிற்காமல் திலீபனை நினைவுகூர்கின்ற உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

ஆனாலும் தமிழ் அரசியல் கட்சிகளின் வழமையான அரசியல்பாணியாகிய அறிக்கை வெளியிடுவதும் காரசாரமான கருத்துக்களை வெளியிடுவதுடன் நின்றுவிடுவதை அடியொட்டியதாகவே இந்த ஒன்றிணைவும் மேலோட்டமான பார்வையில் தெரிகின்றது.

திலீபனுடைய தியாகம் போற்றப்பட வேண்டியது. அந்த போற்றுதலைத் தடை செய்வதற்கான உத்தரவை எதிர்த்துப் போராட வேண்டியதும் அவசியமானதே. ஆனால் கடும் போக்கைக் கொண்டுள்ள அரசாங்கத்திடம் நியாயம் கேட்பதற்கு உரிய வழிமுறைகள் கையாளப்பட வேண்டியது அவசியம். கடிதம் மூலமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்ற அரசாங்கம் ஆட்சியில் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது.

சட்டரீதியாகத் தடையுத்தரவைப் பிறப்பித்து இறந்தவர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்வதைத் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இந்தத் தடை உத்தரவும் பொதுவான தடை உத்தரவல்ல. யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பேருக்கும் வேறு இடங்களில் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டப்பட்டிருப்பவர்களுக்குமே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அப்படியென்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத இடங்களில் திலீபனை நினைவுகூரலாம் அல்லவா? பெயர் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த எவரும் திலீபனை நினைவுகூர முடியும்தானே?

தடை உத்தரவை விலக்கி தியாகி திலீபனை நினைவுகூர்வதற்கு அனுமதிக்குமாறு கோரி கடிதம் எழுதுவதற்கு ஒன்றுகூடிய தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் இந்த விடயங்கள் குறித்து சிந்தித்தார்களா அல்லது கூடிப் பேசினார்களா என்பது தெரியவில்லை.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவின் அரசியல் ரீதியான தீர்மானத்திற்கு அமைவாகவே பொலிசார் நீதிமன்றத்தில் நினைவுகூர்வதற்கு எதிரான தடை உத்தரவைப் பெற்றுள்ளார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை, அந்த அரசியல் தீர்மானத்தை மாற்றுவதன் ஊடாக தடை உத்தரவை நீக்க முடியும் என்ற அபிப்பிராயமும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் அரசியல் ரீதியான ஒரு தீர்மானத்தின் ஊடாக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருக்கலாம். அத்தகைய தடை உத்தரவை அதே நீதிமன்றத்தில் சட்டரீதியான காரணங்களையும் வலுவான வாதங்களையும் முன்வைத்து ஏன் எதிர்கொள்ளக் கூடாது? அவ்வாறு செய்வதன் மூலம் அந்தத் தடை உத்தரவை எதிர்கொள்ளலாம் அல்லவா?

தியாகி திலீபனுடைய நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது பாராட்டுக்கு உரியது. ஆனால் இந்த ஒன்றிணைவு வெறுமனே உட்கட்சி அரசியல் விருப்பு வெறுப்புகளுக்குக் களம் அமைப்பதாக அமைந்துவிடக் கூடாது. அரசியல் ரீதியாக இந்த விடயத்தை எதிர்கொள்கின்ற அதேவேளை, சட்டரீதியான வழிமுறைகளிலும் இதனைக் கையாள முயற்சிக்க வேண்டும்.

அதேவேளை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குப் பின்னர் என்ன செய்வது எவ்வாறு போராட்டத்தை நகர்த்திச் செல்வது என்பது பற்றிய அரசியல் வழித்தடம் குறித்து சிந்திக்கப்பட்டிருக்கின்றதா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் தியாகி திலீபனுடைய நினைவேந்தலைத் தடுப்பதற்கான தடை உத்தரவை எதிர்த்துப் போராடுவதற்கும் அப்பால் பல பிரச்சினைகளுக்கும் பல விடயங்களுக்கும் தீர்வு காண்பதற்காகப் போரட வேண்டிய பொறுப்பு இப்போது ஒன்றிணைந்துள்ள தமிழ்த்தேசிய கட்சிகளைச் சார்ந்திருக்கின்றது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்னும் கூறப்போனால், தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கு இந்தத் தேர்தல் மிகக் கசப்பான பாடம் ஒன்றைப் போதித்திருக்கின்றது. அந்த படிப்பினையின் அடிப்படையில் தங்களுடைய கட்சி அரசியல் நலன்கள், தனிப்பட்ட அரசியல் நிலைமைகள் என்பவற்றைப் புறந்தள்ளி தமிழ் மக்களின் நலன்களையும் தமிழ் அரசியலின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு இந்தக் கட்சிகள் தமது ஒன்றிணைவை மேலும் பலப்படுத்த வேண்டும். அதனை நிரந்தரமான ஒன்றிணைவாக மாற்ற வேண்டும்.

அத்துடன் தமிழ் மக்களின் முன்னால் உள்ள பிரச்சினைகளை காய்தல் உவத்தலின்றியும், அரசியல் நலன்களைக் கடந்த நிலையிலும் சீர்தூக்கி சிந்தனைக்கு உட்படுத்தி செயலாற்ற முன்வர வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஒரே கொள்கைகளையும் ஒரே குறிக்கோளையும் கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களின் அரசியல் கட்சி நிலைப்பாட்டினதும், தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டினதும் இருப்பை மையமாகக் கொண்ட அரசியல் ஈகோ அவர்களை ஒன்றிணைந்து அர்த்தமுள்ள வகையில் செயற்படுவதற்குத் தடையாக அமைந்துள்ளது.

இந்த அகநிலைத் தடைகளைக் கடந்து பிரச்சினைகளின் தன்மைகளையும் அவற்றை அரச தரப்பினர் கையாள்கின்ற வழிமுறைகளையும் சீர்தூக்கிச் சிந்தித்து அதற்கேற்ற வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட முன்வர வேண்டும். பொதுத்தேர்தலில் பெற்றுள்ள கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் எதிர்கொள்ளவுள்ள மாகாண சபைக்கான தேர்தலை மனதில்  நிறுத்திச் செயற்படுவதற்கு முனைய வேண்டும். இது இன்றைய அரசியல் களநிலையில் காலத்தின் தேவையாகும்.

-பி.மாணிக்கவாசகம்-

Exit mobile version