சர்வதேசமே தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே…

வணக்கம் உறவுகளே…

அம்பிகை அம்மையே! யார் மீதம்மா உனக்கு நம்பிக்கை…

கொட்டும் மழை போல் கொட்டிய கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் இழந்த எம் உறவுகளை கண்டு மகிழ்ந்த உலகமம்மா இது…

இவர்களிடமே நீதி கேட்டுப் போராடும் இனமொன்றின் தவப்புதல்வியாய் அம்பிகையே – உன் அடையாள அவதாரம் அகிலம்வாழ் தமிழர்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததம்மா…

நீ…

ஆகாரம் விடுத்து நாட்கள் பல உருண்டன தாயே… ஆதாரம் இன்றிய உன் உடம்பு சேதாரம் ஆகிடுமோ…??? விலை மதிப்பற்ற உன் உயிர் அநீதிக்குத் துணை போகும் உலக நாடுகளிடம் தோற்றுப் போய்விடுமோ…???

உலக நீதியின் மன்றமே…!

ஏன்

இன்னும் உனக்கெம்வலி புரியவில்லை…?

அம்பிகைத் தாயை விரைந்து காப்பாற்று…

எம் தாய் மண்ணில் பல இலட்சம் தாய்மாரின் கண்ணீருக்கு நீதி கொடு…

அநீதியாளர்களை நீதியின் முன் நிறுத்து…

சட்டத்தை கையிலெடுத்து இனப் படுகொலை சாட்சியங்களைப் புரட்டிப் பார்…

பரிதவிக்கும் இனத்திற்குப் பாதகம் செய்யாதே…

பிரித்தானியாவில் மெழுகாய் உருகும் உயிரைப் பார்…

எம் மண்ணின் ஊரெங்கும் உணர்வால் ஒன்றான உறவுகளைப் பார்…

உண்மைக்குப் புறம்பாய் நாமேதும் கேட்கவில்லை…

நடந்தவற்றிற்கு நீதி வேண்டும்…

நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு முடிவு வேண்டும்…

2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது கண்ணைகளை மூடியும்…

காதுகளை இறுகப் பொத்தியும்…

ஏதும் அறியாதிருந்த உலக நீதியின் அரங்கமே…

இனியாவது விழித்தெழு…!!!

விடியாத எம் வாழ்வில் விடியலைத் தா…

இனியும் உயிர்களை விடுதலைக்கு விலையாய்க் கேட்காதே…

எம் இனம் கொடுத்த உயிர் விதைகள் அதிகம்…

மலையாக நிற்கும் எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரிமைகளைத் தா…

மெய் வருத்தி எழுதுகிறேன்…

அம்பிகையின் உயிரைக் காத்திட அதிகார வர்க்கமே முன்வாருங்கள்…

உணவு தவிர்ப்புப் போரில் கோரிக்கைகள் நிறைவேறாமல் போக தியாக தீபம் திலீபன் அண்ணாவை நாம் இழந்தோம்…

குடிசனப் பெண்ணாய் தன் இனத்திறகு நீதி கேட்ட தியாகி அன்னை பூபதியை காந்திய தேசம் இரையாக்கிக் கொன்றது…

பிரித்தானிய தேசமே…!

அம்பிகையை காத்திடு…

தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே…

சர்வதேசமே…!

நீதியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துக் கொள்

து. திலக்,

09.03.2021