சராவுக்கு நியமனம் வழங்க வேண்டாம் எனச் சொன்னது எதற்காக? சுமந்திரன் விளக்கம்

கட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர்காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக்கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு விரோதமானது அல்ல என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தனிமையில் சந்தித்தஎம்.ஏ.சுமந்திரன், யாழில் ஈ.சரவணபவனிற்கு வேட்புமனு வழங்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தை இணையத்தளம் ஒன்று முதன்முதலில் அம்பலப்படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் எம்.ஏ.சுமந்திரனிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்கமாகப் பேசக்கூடாது. அதனால் மற்றவர்களின் கருத்திற்கு பதிலளிக்கவில்லை. தேர்தல் என்றால் பல விடயங்கள் பேசப்படும். கட்சியின் அரசியல் குழுவில் நான் இந்த விடயங்களைப் பேசியிருந்தேன்.

இதனால்தான், படித்த, இளையவர்களிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென சம்பந்தன் அறிவித்தார். அதைவிட, பெண்களிற்கு 50 வீதம் வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் சொன்னேன். அனுபவம் மிக முக்கியமானது. அவர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எம்மை வழிநடத்த வேண்டும். அதேநேரம், ஏற்கனவே எம்.பியாக இருப்பவர்களிற்கு வாய்ப்பளித்து விட்டு, மிகுதியான இடங்களைமற்றவர்களிற்கு பகிர்ந்தளித்தால், இளையவர்களிற்கு எப்படி வாய்ப்பளிப்பது?

கடந்த தேர்தலில் நான் கண்ட அனுபவம், தோற்கும் வேட்பாளர்களைநிறுத்தும் வழக்கமொன்றுண்டு. அதை எல்லா கட்சிகளும் செய்கின்றன. இருப்பவர்களிற்குத் தானாக நியமனம் வழங்க வேண்டாமென்று நான்கூறினேன். எம்.பியாக இருப்பதால் எனக்கும் தர வேண்டியதில்லை. எனது பெயரையும் மேசையில் வையுங்கள். புதிதாக வருபவர்களின் பெயர்களையும் வையுங்கள். யார் பொருத்தமானவர் என்பதை பார்த்து நியமனம் வழங்குங்கள்.

எவருக்கு கொடுப்பது, எவருக்கு கொடுப்பதில்லையயன்பதை நாங்கள் பேசினோம். அது கட்சிக்குள் நடப்பது. பேசாமல் எப்படி நியமனம் வழங்குவது? ஆனால், கட்சிக்குள் பேசுவதை இணையத்தளத்திற்கு கொடுப்பதுதான் கட்சிக்குவிரோதமானது. கட்சிக்குள், மூடிய அறைக்குள் நான் பேசியவற்றை செய்தியாக்கிக் குளிர் காய்பவர்கள் பற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது” என்றார்