‘சமர்க்களம் சென்றார் அவர்சாவதற்கோ அஞ்சியதில்லை’ -உஷா சிறீஸ்கந்தராஜா

“இன்று மாவீரரைப் போற்றும் முகமாக 2006, 2010 ம் ஆண்டுகளில் நான் இயற்றிய இரண்டு கவிதைகளை வெளியிட விரும்புகின்றேன். அதற்குப் பிறகு எவ்வளவோ விடயங்கள் நடந்தேறி விட்டன. எமது மக்களுக்கான நீதியை அடைகின்ற பயணத்தையும் குறிப்பாக பரிகார நீதியினூடாக தமிழ் ஈழத்தை அடையும் பயணத்தையும் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.

அந்த இலக்கை நாம் அடைவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது கவிதைகள் காலத்துக்கு முந்தியவையாக இருப்பினும் அவை இக்காலத்துக்குப் பொருத்தமானவை. ஏனென்றால் கடந்து போன காலத்தை நாம் மறந்துவிட முடியாது. கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டு, அவற்றிலிருந்து உரிய பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் தான் எமது பயணத்தில் நாம் தொடர்ந்து முன்னேறிச்செல்ல முடியும். வன்முறையற்ற வழிகளையும் இராஜீய வழிகளையும் பயன்படுத்தி எமது தாயகத்தை நாம் அடைந்துகொள்ள வேண்டும் என்றே நாம் அதிகமாக நேசிக்கின்ற எமது மாவீரர்கள் விரும்புவார்கள்.

அமைதி நிறைந்த, இராஜீய வழிகளைக் கைக்கொள்வதற்காகவே நாடுகடந்த தமிழீழ அரசு தன்னை அர்ப்பணித்திருக்கிறது. இருப்பினும் எமது தலைவர் மட்டிலும் எமது தாயகமான தமிழீழத்தைப் பாதுகாப்பதற்காக மிக உயரிய ஈகத்தைச் செய்து தங்களது இன்னுயிர்களை ஈந்த இந்த உயரிய மனிதர்கள் மட்டிலும் மிகவும் அதிகமான மதிப்பை நான் கொண்டிருக்கிறேன்.

ஒரே தீவில் வாழுகின்ற தேசியங்களைச் சேர்ந்த சிங்கள மக்களையும் இன்றைய நாளில் கருத்தில் எடுப்பது பொருத்தமான ஒரு விடயமாகும்.”

 சமர்க்களம் சென்றார் அவர்
சாவதற்கோ அஞ்சியதில்லை
துணிவுக்கு என்றும் குறைவில்லை – அது
உனக்காகவும் எனக்காகவுமே

தமிழ் ஈழத்தின் மாண்பே
அவர்தம் தனித்த உறுதியான இலக்கு
தாயகத்தைக் காப்பது என்பது
அவர்களது ஆன்மாவின் இருப்பு

பிரிக்க முடியாத சொல்லுக்கும் செயலுக்கும் உரியவர்கள்
ஒழுக்கத்தை அணிகலனாக அணிந்தவர்கள்
உள்ளத்தையும் ஆற்றலையும் ஒருசேர வென்றவர்கள்
ஒப்பற்ற, உண்மைத் தலைவனால் பயிற்றப்பட்டவர்கள்
உலகில் எங்குமே காணமுடியாத உயர்தர விடுதலைப் போராளிகள்

எமது கண்ணீரிலிருந்து எம்மை மீட்க
புனிதம் நிறைந்த தமது இரத்தத்தைச் சிந்தியவர்கள்
தமிழ் ஈழத்தின் எதிர்காலத்துக்கென்று
நாங்கள் உயிர் வாழ்ந்து உழைக்க வேண்டும் என்பதற்காக.
எதிர்ப்பைக் கண்டு இம்மியளவும் கலங்காதவர்கள்
என்றுமே தடுமாறாதவர்கள் அதனால் வெல்லப்படமுடியாதவர்கள்
வீரம் செறிந்த ஆண்கள், பெண்கள்
புறமுதுகு காட்டி ஒருபோதும் ஓடி ஒழிக்காதவர்கள்

ஒரு உறுதி எடுத்து இறுதி மட்டும் அதனை வாழ்ந்தவர்கள்
கொல்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கூலிப்படைகள் அல்ல இவர்கள்
உடைக்க முயன்ற எதிரியையும் ஊடுருவ விடாதவர்கள்

தன்னலம் இல்லாக் கனவுகள் கண்டவர்கள்
ஒன்றாய் நாம் எழவேண்டும் என்பதற்காக அன்றே வீழ்ந்தவர்கள்
அடிமையிலிருந்து விடுதலைக்கு
எதுவுமற்ற வாழ்விலிருந்து வளம்கொழிக்கும் வாழ்க்கைக்கு

உன்னதமான இந்த இனத்திலே உதிக்க
தகுதியுள்ள தமிழன் நீ என்றால்
இவர்கள் தாம் எமது மீட்பர் என்பதை
ஐயமின்றி நீ அறிந்திருப்பாய்

தீரம் மிக்க ஒவ்வொரு சண்டைக்குப் பின்னும் – எம்மை
நிலைநிறுத்துகிறது அவர்களது ஆன்மா
அவர்கள் எமக்களிக்கும் பலம் ஈற்றில் எமக்கேயுரியதாகும்
விடுதலைப் பயணத்தில் அதுவே எமக்கு வழிகாட்டியும் ஆகும்

18,743 ஆகச் சிறந்த அந்த உள்ளங்களை எண்ணுகிறோம் இன்னும்
என்றுமே காணாத துணிச்சல், வையகம் காணாத தைரியம்
அவர்கள் நினைவாலயங்களை வணங்குவதல்ல
அவர்க்கு நாம் செய்யும் அஞ்சலி
எரியட்டும் அவர்கள் ஏற்றிய சுடர் – தொடர்ந்து
நிலைக்கட்டும் காலமெலாம் அவர் விடுத்த கட்டளை

தமது மக்களின் விடிவுக்காய் தன்னலமின்றித்
தம்மையே அர்ப்பணம் செய்தவர்கள்
தங்கள் இன்னுயிரை அதற்காக ஆகுதியாக்கியவர்கள்
அவர்கள் சாகவில்லை. சாவையே கடந்துவிட்டவர்கள்
மக்களின் இதயங்களில் மாவீரர் எனக் கோயில் கொண்டவர்கள்

எம் விடுதலை ஒரு நாள் வெல்லப்படும் – தமிழ்
ஈழம் பிறந்ததென்றுரைக்கப்படும்
அன்று மீட்போம் எமது நினைவுகளை
எமது வெற்றியின் தூண்கள் மாவீரரே – என்று
விண்ணதிர நாம் பறைசாற்றுவோம்.

நன்றி – colombo telegraph