“சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்!, கூட்டமைப்பின் தந்திரோபாயம் வெற்றி” அத்தனையும் வெறும் புனைவு என்கிறார் ஹரிஸ எம்பி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாமலிருக்கும் போது நிரந்தர கணக்காளரை நியமித்ததாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது போன்று அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பணிபுரியும் கணக்காளரை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தராக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததில் எந்தவித மாற்றமும் நடைபெற வில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மேலும்  எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வெளியான செய்தி முற்றிலும் சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். அதில் உண்மைகள் எதுவுமில்லை என மறுக்கிறேன் என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

கல்முனை உப செயலக விவகாரம் சூடு பிடித்திருக்கும் இந்த நிலையில் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்து பிரேரணை தொடர்பில் வாக்களிக்கும் தினமாக இருந்தது. கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் குழுவொன்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில் பிரதமர் ரணிலை சந்தித்து கல்முனை பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் உப பிரதேச செயலக தரமுயர்த்தலினால் முஸ்லிம் சமூகத்துக்கு நடைபெற உள்ள அநீதிகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்ட போது பிரதமரினால் முஸ்லிங்களுக்கு அநீதி ஏற்படாவண்ணம் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முஸ்லிம் தூதுக்குழுவுக்கு திருப்தியாக அமைந்தது.

சட்டமுதுமானியும்,அரசியல் ஆய்வாளரும் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வரும் வை.எல்.எஸ்.ஹமீட், சட்டத்தரணி ஹாலித், தொழிலதிபர் ஜிப்ரி (கம்பளை ஜிப்ரி), கல்முனை வர்த்தகசங்க தலைவர் கே.எம்.சித்திக், சட்டத்தரணி யூசுப், போன்ற கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் குழு கலந்துகொண்டிருந்த பிரதமருக்கும் முஸ்லிம் தரப்புக்குமான சந்திப்பின் போது அங்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை விவகாரத்தில் சில விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதாகவும் அது சம்பந்தமாக பேச விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் தரப்புடன் பேச விரும்புவதாக தெரிவித்த சுமந்திரன் அவர்கள் கணக்காளர் விவகாரத்தை தெரிவித்த போது ஓரிரு வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்க இருக்கும் இவ்வேளையிள் இது தேவையில்லாத ஒன்றாகும் என முஸ்லிம் தூதுக்குழு கடுமையாக எதிர்த்தவுடன் பிரதமரும் கணக்காளர் நியமனம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என அங்கு தெரிவித்தார். நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து நிரந்தர கணக்காளரை நியமிக்க உடன்படாமல் இருந்தோம்.

பின்னர் பிரதமரின் சந்திப்பில் நடைபெற்ற விடயங்களை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் அடங்கலாக அங்கிருந்த எங்கள் 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தெரிவித்தவுடன் மாலை ஆறு மணிமுதல் பிரதமரை நாங்கள் எல்லோரும் சந்தித்து எங்களுடைய பிரச்சினைகளை தெளிவாக விளக்கினோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எவ்வித முன்னெடுப்புக்களுக்கும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்பதை தெளிவாக வலியுறுத்தி பேசினோம். வாக்களிப்பு நடைபெற சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் கணக்காளர் விவகாரத்தில் எவ்வித முடிவும் செய்யவில்லை என்பதை உறுதிபட கூறினார்.

பிரதமரின் சந்திப்பில் என்ன நடைபெற்றது, அங்கு என்ன விடயங்கள் பேசப்பட்டது என்பதை கலந்து கொண்டிருந்த கொழும்பு வாழ் முஸ்லிம் புத்திஜீவிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்றாக அறிவார்கள் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்