சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்தோர் விரைவில் கைது செய்யப்படுவர் – ஜனாதிபதி!

‘நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய பலர் இந்த மாதத்தினுள் கைதாவர்’ என்றும் அவர் தெரிவித்தார்.

‘தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’. ‘ இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும்’. ‘ஏனென்றால், எம்மிடம் பெரியளவில் டொலர் கையிருப்பு இல்லை’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘5 வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை’.
‘ஒரே தடவையில் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துச் சிக்கல் ஏற்படுமாயின் நாட்டில் மீண்டுமொரு நெருக்கடி ஏற்படும்’. ‘எனவேதான், மேலதிகமாக வாகனங்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘வாகன இறக்குமதிக்குத் தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு மாறாக படிப்படியாக அந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்’. ‘தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விவசாயிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘15,000 ரூபாவாக இருந்த உர மானியம் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்’. ‘உண்மையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளதால் புதிய வேலைத்திட்டங்களில் அவதானம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘அதேநேரம், வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர்’.
‘அவ்வாறான மேலும் சிலர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள்’ என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.