கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோயின் தாக்கதினால் மிகப்பெரும் பொருளாதார, உயிர் மற்றும் சமூக பாதிப்புக்களை உலகம் சந்தித்த ஆண்டாக 2020 கடந்து செல்கின்றது. இரண்டாம் உலகப்பேருக்கு பின்னர் குறுகிய காலத்தில் அதிக பொருளாதார மற்றும் உயிரிழப்புக்களை உலகம் சந்தித்தது இந்த வருடம் தான்.

இந்த தாக்கத்தின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே தற்போதுள்ள கேள்வி. எதிர்வரும் வருடங்களில் பூகோள அரசியலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுடன் இது உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், அந்த மாற்றத்திற்கு முதலில் பலியானவர் அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ட் தான்.

அதாவது கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு பின்னரான உலக ஒழுங்கு என்பது ஒரு புதிய வடிவத்திற்குள் செல்லும் சாத்தியங்கள் உள்ளதாகவே தென்படுகின்றது. இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் ஒன்றுக்கு ஒப்பான மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி வருகின்றது.

flight covid 2020 கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு -	வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் வருடங்களில் மொத்த உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் சீனாவின் பொருளாதாரம், அமெரிக்காவின் முதலாவது இடத்தை கைப்பற்றிவிடும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது படைத்துறை வியூகம் சார்ந்தது அல்ல என மேற்குலகம் நம்பிவந்த போதும், அதுவும் தவறான கணிப்பு என்பது தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் உள்ளது. ஆனால் அமெரிக்கா தனது முன்னைய கொள்கைகளான பொருளாதார மையம், தொழில்நுட்பத்தில் முதன்மை, படைத்துறை வல்லாதிக்கம் போன்றவற்றையே தக்கவைக்க முற்படும். ஆனால் கோவிட் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அதில் எதிரொலிக்கும்.

எனவே தனது பொருளாதார வளர்ச்சி மற்றும் படைத்துறை கேந்திர உறுதித்தன்மை போன்றவற்றை பாதுகாப்பதற்கு அமெரிக்கா மிகக் கடுமையாக நடந்துகொள்ளும் என்றபோதும், மிகப்பெருமெடுப்பிலான படை நடவடிக்கைகளை அது தவிர்க்கவே முற்படும்.

அதாவது கடந்த இரு தசாப்தங்களாக மறைந்து போன பனிப்போர் நிலையை அமெரிக்க – சீனா மோதல்கள் மீண்டும் உருவாக்கும் நிலையை எட்டியுள்ளது. எனினும் படைத்துறை அஞ்சலோட்டங்களில் ரஸ்யாவும் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகின்றது. அதிஉயர் தெழில்நுட் ஏவுகணைகள் (hypersonic rockets) மற்றும் அணுவாயுதங்களில் அதன் வளர்ச்சி அதிகம். அதன் எரிபொருள் வளமும் உலக பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வகிக்கும். சிரியா மற்றும் கிரைமியா விவகாரங்களில் அதன் மீள்பிரவேசத்தைக் கண்டிருந்தோம். அதாவது மூன்று முனைவாக்கம் உள்ளதாக உலகம் பிளவடையப் போகின்றது.

சீனாவும், ரஸ்யாவும் மோதிக்கொண்டால், அமெரிக்காவுக்கு அனுகூலமாகலாம். ஆனால் தற்போது இரு நாடுகளும் பொருளாதார நலன்களில் தங்கியிருக்கின்றன. எனவே அதற்கான சாத்தியங்கள் அருகில் இல்லை.

இந்த வருடம் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி அமெரிக்க – சீனா உறவை அதிகம் பாதித்துள்ளது. ஏற்றுமதி கட்டுப்பாடுகள், பயணத்தடை, சீன நிறுவனங்கள் மீதான தடை, சீன சமூகவலைத்தள நிறுவனங்கள் மீதான தடை, தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான தடை என்பவற்றை அமெரிக்கா சீனா மீது கொண்டுவந்துள்ளது. அதற்கு சீனாவும் பதிலடிகளை கொடுத்தே வந்துள்ளது.

ட்ரம்ப் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளில் பலவற்றை பைடனும் தொடரவே செய்வார். அதுமட்டுமல்லாது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இந்த போட்டியில் சிக்குண்டு கடுமையான விளைவுகளைச் சந்திக்கலாம். இந்த பிராந்திய ஆதிக்கப்போட்டியில் பிரான்ஸை தொடர்ந்து ஜேர்மனியும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டை இந்து-பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது.

china presi கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு -	வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அதாவது கொரோனாவுக்கு பிந்திய உலகம் முன்று முனைவாக்கம் கொண்டதாக அல்லது, பல முனைவாக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் தோன்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இதில் கனாதியான பாத்திரம் வகிக்கும். பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் தலைவர் அஞ்ஜெலா ஆகியோரின் அண்மைய நடவடிக்கைகள் அதனைத் தான் காட்டுகின்றன.

அதாவது உலகமயமாக்கல் மறைந்து, ஒவ்வொரு நாடும் தன்னையும் தனது நலன்களையும் முன்நிறுத்தும் நிலை ஒன்று உருவாகி வருகின்றது. அதனை தான் அமெரிக்கர்களே முதன்மையானவர்கள் என்ற ட்ரம்பின் கொள்கையும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியாவின் முடிவும் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலைப்பாட்டை கொரோனா வைரஸ் நெருக்கடி மேலும் விரைவுபடுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம், மனித உரிமைகள், குடிவரவு, வர்த்தகம் போன்ற துறைகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஸ்யாவின் நடவடிக்கைகளில் அழுத்தங்களை ஏற்படுத்தம் தகமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உண்டு. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மேற்கூறிய நாடுகளின் கூட்டணியில் இணைந்து தமக்குத் தேவையானவற்றை பெறவே முற்படும். எனினும் அவற்றை ஒருங்கிணைக்கும் வழியை பிரேசில் தேடக்கூடும்.

ஆபிரிக்க நாடுகள் பல விடயங்களில் தமக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்த முற்படும். ஆசிய நாடுகளும் மேற்கூறிய நாடுகளின் கூட்டணியில் இணைந்து தமக்கு தேவையானவற்றை பெறவே முற்படும்.

ஆனால் சீனாவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்துவதில் அமெரிக்கா அதிக அக்கறை செலுத்தும். அண்மையில் கூட பிரேசில், இஸ்ரேல், இந்தியா, அவுஸ்திரேலியா, யப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை அமெரிக்கா ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இதில் பங்கெடுக்கவில்லை.

கோவிட்டுக்கு பின்னரான உலக மாற்றம் என்பது உலக நாடுகளுக்கு இடையிலும், நாட்களுக்குள்ளேயும் இடம்பெறலாம் என்பதே தற்போதைய கணிப்பு. அமெரிக்காவில் ஏற்பட்ட கறுப்பின மக்களின் பேராட்டம் பல நாடுகளிலும் பரவத் தலைப்பட்டுள்ளது. அதாவது காலனித்துவத்தினால் இணைக்கப்பட்ட இனங்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் போராடத் தலைப்பட்டுள்ளனர்.

germany3 கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு -	வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சுகாதார வசதிகள், சலாச்சாரம், மொழி. சமூக மற்றும் பண்பாடு என்ற பல விடயங்களில் இனங்கள் தமது நாட்டுக்குள்ளேயே முரண்படும் ஏது நிலை ஒன்றும் உருவாகியுள்ளது. பொருளாதார முதலாளித்துவம் அல்லது நிறுவனங்களுக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். சிலி, கொலம்பியா மற்றும் ஈகுவாடோர் பகுதிகளில் இடம்பெற்ற பேரணிகளின் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவிலும் விவசாயிகளின் போர் வெடித்துள்ளது. இந்த போராட்டத்திற்கான பிரதான காரணங்களாக வேலைவாய்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, பட்டினி என்பவற்றை குறிப்பிடலாம்.

பல நாடுகளில் ஏற்கனவே உள்ள இன முரண்பாடுகளை கோவிட்டுக்கு பின்னரான நிலை மேலும் விரிவாக்கம் அடையச் செய்வதுடன், ஒடுக்கப்படும் மக்களும் தமக்கான சுதந்திரத்திரத்தை தேடுவர்.

புதிய பேய்களின் கூட்டு என்ற அமெரிக்காவின் கொள்கைக்குள் அடங்கும் ஈரான், வடகொரியா, வெனிசுலா மற்றும் சிரியா போன்ற நாடுகள் கூட முறியடிக்கப்பட முடியாத சக்திகளாக வளர்ந்துள்ளன. அதற்கான காரணம் இந்த உலக முனைவாக்கத்தில் அவை தாம் தப்பிப்பிழைப்பதற்கான வழியை தேடிக்கொண்டுள்ளதே.

அதாவது எதிர்வரும் வருடங்களில் உலகில் உள்ள அமைப்புக்களிலும், உள்நாட்டு அரசியலிலும், உலக பூகோள அரசியல் ஒழுங்கிலும் பல மாற்றங்கள் நிகழலாம். இந்த மாற்றங்களை உள்வாங்கி ஒற்றுமையாகவும், உறுதியுடனும் செயற்படும் இனம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்பதே இயற்கையின் நியதி.