கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) – றோய் சமாதானம்

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்த கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் சிறப்பு பேட்டி

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீங்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்ததாக அறிகின்றோம். தங்கள் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் எப்போது எங்கே இடம்பெற்றது இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று கூறமுடியுமா?

நான் 2007 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கொழும்புக்கு அண்மையிலுள்ள யா-எல என்ற இடத்தில் வைத்து இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டேன். 1990 களில் இலங்கையை விட்டு வெளியேறி கனடாவில் தஞ்சடைந்திருந்த நிலையில் எனக்கு கனடாவில் வதிவிட உரிமை கிடைத்தது.

இதன் பின்னர் எனது திருமணத்திற்காகவும் வியாபாரத் தேவைகருதியும் 2005-2006 ஆண்டுகளில் இலங்கைக்கு சென்று திரும்பிய நிலையில் 2007 இல் இலங்கை சென்றிருந்தபோதே கைது செய்யப்பட்டேன். நான் கையடக்க தொலை பேசிகள் இறக்குமதி செய்ததில் அரசிற்கு வரி செலுத்தவில்லை என்றும் தங்களுக்கு பணம் தந்தால் உடனே விடுவோம் என்றும் கடுமையாக அச்சுறுத்தினார்கள். 25000 ரூபாவில் இல் தொடங்கி 50 இலட்சம் ரூபாவரை தருமாறு அச்சுறுத்தி கேட்டதோடு எனது கண்களைக் கட்டி என்னை பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு இடத்திற்கு கொண்டு சென்று கடுமையான சித்திரவதை செய்து விசாரணைகளைத் தொடர்ந்தார்கள்.

நான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு தான் நான் தொலை பேசிகளை கடத்தியதாகவும் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தான் என்னை 1990 இல் கனடாவிற்கு அனுப்பியதாகவும் அவர்களின் அறிக்கையில் எழுதியிருந்தது.

பொட்டம்மான் சொல்லித்தான் நான் இலங்கைக்கு வந்ததாகவும் நான் சரத் பொன்சேகா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் நோக்குடன் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் உண்மைக்கு புறம்பான பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி அறிக்கையை எழுதி எனக்கு ஒருவருடம் நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பை மறுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் கொழும்பு சையித் வீதியில் உள்ளது பழைய பாஸ்போட் அலுவலகத்தில் உள்ளது. அதில் ஒரு வருடம் அடைத்து வைத்திருந்தனர்.still torture continue 720x4801 கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) - றோய் சமாதானம்

அதற்கு பின்னர் உண்மைக்குப் புறம்பான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் கையப்பம் போட மறுத்ததால் என்னை பூசாவில் கொண்டுபோய் தனியாக அடைத்து வைத்திருந்தார்கள். அங்கு நான் அனுபவித்த துன்பங்களையும் பார்த்த கொடுமைகளையும் வார்த்தைகளால் கூற முடியாது. மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள் அங்கு அரங்கேற்றப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அங்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளையும் பல்வேறு சித்திரவதைகளையும் கண்டேன். நான் பார்த்த இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஆவணப்படுத் தியுள்ளேன்.

எனது மனைவி பிள்ளையையும் கைது செய்யப் போவதாகவும் அவர்களைக் கற்பழிப்புக்கு உள்ளாக்கப் போவதாகவும் கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டதால் எனது மனைவி பிள்ளைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவிலே வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த நேரத்திலே எனது வழக்கறிஞரும் கனடா அரசும் தலையிட்டு நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் கொண்டுவந்த தொழில்நுட்ப சாதனங்களில் நிறிஷி இருந்தது என்று ஒத்துக்கொள்ளுங்கோ என்று அறிவுறுத் தினார்கள் அதன்பின்னர் நான் அதை ஒத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் ஒன்று மற்றும் இரண்டிலும் சகல சார்ச்சும் எடுத்துவிட்டு எனக்கு ஐந்து இலட்சம் பணம் செலுத்துமாறும் தீர்த்தார்கள் உண்மையிலேயே உளவுத்துறை கேட்ட பணத்தை தரவில்லை என்பதற்காகவே என்னை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை என்று பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள்.

தங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட நடவடிக்கைகளுக் கான முனைப்புக்களை கூறமுடியுமா?

இலங்கையில் எனக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக 2013 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு போட்டேன். 2016 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஆறு மாதத்திற்குள் எனக்கு இழப்பீடு வழங்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்க வேண்டும். என்னை துன்புறுத்திய அனைத்து அதிகாரிகளும் பதவி விலக்கப்பட வேண்டும் போன்ற வரையறைகளுடன் ஆறு மாதத்திற்குள் இவற்றை நிறைவேற்ற வேணடும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்றைக்கு 2019 ஆகிறது இதுவரை எனக்கு நீதி கிடைக்க வில்லை. கோத்தபாஐ ராஜபக்ச எப்ப அமெரிக்கா வருவார் என்று 2017 தொடக்கத் திலிருந்தே நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். அவர் சில தடவைகள் வந்து வந்து போனார். ஆனால் சூழ்நிலை சரியாக அமையவில்லை. தற்போது இங்கு வருவதாக அறிந்தேன். ஏற்கனவே தொடர்பில் இருந்த நான், 2013 இல் இருந்தே எனது வழக்கில் உதவிய சட்ட செயற்பாட்டாளர்கள் யஸ்மின் சூக்கா பிரான்சிஸ் கரிசன் உட்பட அமெரிக்காவில் உள்ள எனது வழக்கறிஞர்கள் எல்லோரின் ஆதரவுடனேயே நான் வழக்கை பதிவு செய்துள்ளேன்.Gotae1341974562542 கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) - றோய் சமாதானம்

நான் இழப்பிடு கோரிய போடப்பட்ட ஒரு சிவில் வழக்கு. இது குற்றவியல் வழக்கல்ல. இதில் லசந்த விக்கிரம சிங்கவின் மகள் போட்ட வழக்கு வேறு. எனது வழக்கு வேறு. எனது வழக்குடன் 10 பேரை இணைத்துள்ளேன். என்னுடன் சேர்த்து 11 பேர் இந்த 10 பேரில் 03 பெண்கள் உட்பட 08 பேர் தமிழர்கள் 2 சிங்களவர்கள் உள்ளடங்கலாகவே நான் வழக்கை முன்னெடுத்து செல்கின்றேன்.

இந்த வழக்கிற்கும் கோத்தபாய ராஐபக்சவின் அமெரிக்காவின் பிரசாவுரிமை தொடர்பான வழக்கிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்படவும் முடியாது காரணம் எனது வழக்கு ஒரு சிவில் வழக்கு. அவரின் வழக்கு பிரசாவுரிமை வழக்குடன் தொடர்புடையதால் எந்த விதத்திலும் எமது வழக்குடன் சம்பந்தப் படாது. அவரின் பிரசாவுரிமை இரத்து செய்து அவர்கள் அடுத்த மாதமே தீர்ப்பை கொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கு எமது வழக்கிற்கு அப்பாற் பட்டது. அதேவேளை எமக்கு நீதி கிடைக்கும்வரை கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் போட்ட வழக்கிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் இதில் வெற்றி பெற்றால் இது சட்ட ரீதியாக ஆவணப்படுத்தப்படும்.

மனித உரிமை தளத்திலே நீதிவேண்டி தாங்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு புலம்பெயர் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எந்தளவில் ஆதரவு தருகின்றனர்?

ஐ.நா. தொடக்கம் சர்வதேச மட்டத்தில் நான் முன்னெடுத்த எந்தவொரு வழக்கிற்கும் எந்தவொரு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஆதரவு தரவில்லை. மேலும் ஐ.நா.வில் வழக்கை போடுவதற்கு கனடாவில் உள்ள இலாப நோக்கமற்ற அமைப்பான சில வழக்கறிஞர்கள் உதவினார்கள். நான் வாழும் கனடாவில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் எந்தவொரு ஆதரவையும் தரவில்லை. குறிப்பாக முக்கிய தமிழ் அரசியல் வாதியான கரி ஆனந்தசங்கரியோ கனடா அரசாங்கமோ எனக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கவில்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் எமது முயற்சியை மதித்து கனடாவில் உள்ள சில தமிழ் குடும்பங்கள் ஆட்களை ஒருங்கிணைத்து ஜெனிவா செல்வதற்கு போக்குவரத்து உதவிகளை செய்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ளனர். அதேநேரம் யஸ்மின் சூக்கா பிரான்சிஸ் கரிசன் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் எமது வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவாக இருந்து எம்மை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 13 படையி னரும் கடந்த 03 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலையுடன் படையினர். சம்பந்தப் படவில்லை என்றால் ஏன் இவ்வளவு காலமும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஏன் தற்போது திடீரென்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது நீதிபதி சொல்கிறார் போதிய ஆதாரம் இல்லை என்று. இந்த வழக்கில் மட்டுமல்ல எல்லா வழக்குகளிலும் படையினரையும் இலங்கை அரசையும் பாதுகாக்கும் நோக்குடனேயே இலங்கையின் நீதிப்பொறிமுறை செயற்படுகிறது. இந்த அடிப்படையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.