கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை – துரைராஜசிங்கம்

நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயமாகும். கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் சம்பந்தமாக அவரிடம்  கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் என எதுவும் இடம்பெறவில்லை.

சாதாரண சந்திப்புக்கள் இடம்பெறுகின்ற போது இது தொடர்பாக அவ்வப்போது உத்தியோகபூர்வமற்ற விதத்தில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

அவற்றை ஊடகங்கள் பேச்சுக்களாகக் கருதுகின்றனவே தவிர கட்சியின் நிலைப்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பட்டாசு கொளுத்தப்பட்டது என்கின்ற விடயம்  அவர்களால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்மக்கள் பட்டாசு கொளுத்த விரும்பவில்லை. தமிழர்களை வைத்து பட்டாசு கொளுத்தினார்கள். கோத்தபாய ராஜபக்ஷ என்றாளே தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள்.

இது தொடர்பில் தமிழ்ப் பகுதிகளில் இருந்து வந்த அபிப்பிராயங்களைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் விமர்சனத்தோடு வைத்திருக்கின்ற சில அரசியல்வாதிகள் தவிர ஏனைய அரசியல்வாதிகள் எல்லோரும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.