Tamil News
Home செய்திகள் கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகியது எப்படி?

கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகியது எப்படி?

கோத்தபயா ராஜபக்ஸ, இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டிய என்னும் பிரதேசத்தில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி பிறந்தார். இவரின் தந்தையார் அரசியல்வாதியான டி.ஏ.ராஜபக்ஸ ஆவார். இவரின் முழுப் பெயர் நந்தசேன கோத்தபயா ராஜபக்ஸ என்பதாகும்.

சிறிலங்கா அரசியலில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோர் இவரின் சகோதரர்களாவர்.

தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் பயின்றார்.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தில் கடேற் அதிகாரியாக இணைந்து தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தார். 1972 மே 25ஆம் திகதி இரண்டாவது லெப்டினன்ட் ஆக பதவியுயர்வு பெற்றார்.

ஆரம்பத்தில் சிங்க படைப்பிரிவில் கடமையாற்றிய இவர், 1983இல் கஜபா படைப்பிரிவில் இணைந்து கொண்டார். அவரின் 20 வருட இராணுவ சேவையைப் பாராட்டி சிறிலங்காவின் 3 ஜனாதிபதிகள் அவருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிறேமதாசா, டி.பி விஜேதுங்க ஆகியோரே இவருக்கு விருதுகளை வழங்கினர்.

1990இல் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் முன்னின்று போராடியவர். பின்னர் 1992இல் ஓய்வு பெற்றார். இராணுவ சேவையில் இருந்தபோது, பல படைப்பிரிவுகளிலும் அதிகாரியாக இருந்துள்ளார்.

1992இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் அமெரிக்காவிற்கு சென்று அங்கு குடியேறி, அமெரிக்கப் பிரஜாவுரிமையையும் பெற்றுக் கொண்டார். 2005 ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரனான மகிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியதை அடுத்து அவர் அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவிற்கு வருகை தந்தார்.  இவரை மகிந்த ராஜபக்ஸ, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார்.

இவ்வேளையில் உள்நாட்டு யுத்தம் வலுவடைந்திருந்தது. 2006 டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு,  கொள்ளுப்பிட்டியில் கோத்தபயா சென்றிருந்த வாகனத் தொடரணி மீது விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தும், 14பேர் காயங்களுக்கும் உள்ளாகினர். ஆனால் கோத்தபயா உயிர் தப்பியிருந்தார்.

உள்நாட்டு யுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளை கொலை செய்யுமாறு கட்டளையிட்டது, மற்றும் வெள்ளை வானில் மக்களை கடத்திச் செல்வது போன்ற செயல்களில் கோத்தபயா ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது,

கோத்தபயா ராஜபக்ஸ மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் இரு  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என கோரி லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அம்சா விக்கிரமதுங்கவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மற்றொரு வழக்கு ஒரு தமிழ் இளைஞரால் தாக்கல் செய்யப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு அறிவித்திருந்தது.

அத்துடன் கோத்தபயாவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் வழக்கொன்று தற்போது கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருந்து வருகின்றது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றொரு சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. இதற்கமைவாக கோத்தபயா தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் பத்திரமொன்றை கடந்த மே மாதம் 3ஆம் திகதி அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜாவுரிமை சேவை திணைக்களத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்நாட்டு முத்திரையுடன் இந்த ஆவணம் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கோத்தபயாவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனவே இவர் சிறிலங்கா தேர்தலில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version