கோத்தபயா ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் ஒட்டுக் குழுக்களின் அராஜகம் தலைதூக்கும்- மயூரன்

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெறுவாராயின் நாட்டில் ஒட்டுக் குழுக்களின் அராஜகம் தலைதூக்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நேற்று(12) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தோம். அதனால் எம் மக்கள் சுதந்திரமாக எல்லா இடமும் செல்கின்றனர். ஆனால் நாங்கள் இந்த தேர்தலில் கோத்தபயாவிற்கு வாக்களித்தால் மீண்டும் கடத்தல்கள், கொலை, கொள்ளை போன்ற வன்முறைச் சம்பவங்கள் பெருகுவதோடு, ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலைவிரித்தாடும்.

2006ஆம் ஆண்டு ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலே எனது தந்தை என் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டார்.  ஒரு இழப்பை சந்தித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலி. காதர் மஸ்தான், யாழ்.மாவட்ட அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கோத்தபயா ராஜபக்ஸவை ஆதரிக்கின்றனர். அவர்களின் வீடுகளில் இழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.  கோத்தபயா ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால், இப்போது நாம் இருப்பது போன்று இருக்க முடியுமா என்பதை அவர்கள் உறுதிபடக் கூறுவார்களா?

நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருப்பீர்கள் என எமக்குத் தெரியும். இருந்தாலும் எமது கருத்துக்களையும் நாம் கூறியுள்ளோம். இனி நீங்கள் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டுக்களில் குழறுபடிகள் இருக்கலாம். ஆனாலும் நாம் வாக்களிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒரு முடிவெடுத்திருக்கின்றோம். சஜித் பிரேமதாசாவையே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என நாம் அவருக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கின்றோம் என்று கூறினார்.