கோத்தபயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? நீதிமன்ற விசாரணை நாளை

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபயா ராஜபக்ஸ,  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், கோத்தபயா ராஜபக்ஸ இலங்கை குடிமகன் அல்ல. அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டிருப்பதாக இலங்கை நீதிமன்றத்தில் மேன்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபயா, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்,  02, 03ஆம் திகதிகளில் மனு விசாரணைக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக  பரபரப்பு நிலவி வருகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தே கோத்தபயா தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தெரியவரும்.