கோத்தபயாவிற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

நேற்று நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்ஸவிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ருவற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

“இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்திருக்கின்றேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வாழ்த்திற்கு கோத்தபயா ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் “இரு நாடுகளும் வரலாறு ரீதியாகவும், பொதுவான நம்பிக்கையினாலும் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நட்பை பலப்படுத்த எதிர்காலத்தில் உங்களை நான் சந்திக்க விரும்புகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

இதேவேளை ராஜபக்ஸ குடும்பத்தினருடன் இந்தியப் பிரதமர் மோடி நல்லுறவைப் பேணி வந்துள்ளார். மகிந்த ராஜபக்ஸவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்வில் மோடி கலந்து கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.