கோத்தபயாவிற்கு கண்டனம் தெரிவித்த வைகோ

தமிழர் பகுதியில் இராணுவம் ரோந்து செல்வதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவில், ஈழத் தமிழினம் கோரப் படுகொலைக்கு ஆளான பின்னர், மேலும் ஒரு பேரபாயம் இப்போது உருவாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஸ அதிபராக இருந்த போது, பாதுகாப்பு அமைச்சராக இருந்து, இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபயா ராஜபக்ஸ, இந்தமுறை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதோடு, தான் சிங்களவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என பகிரங்கமாகவும் ஆணவத்துடனும் கூறியுள்ளார்.

பதவி ஏற்ற பின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதியில், ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று ஆணையிட்டுள்ளார்.

தமிழினத்தைக் கூண்டோடு கரு அறுப்பதே கோத்தபயா ராஜபக்ஸவின் நோக்கமாகும். இவருக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் என்று அந்தக் கண்டனப் பதிவில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.