கொழும்பில் மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் ; வெள்ளை வான் தொடர்பில் விபரம்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் தொடர்பில் பல்வேறு தகவல்களை விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

54-9238 எனும் இலக்கத்தை கொண்ட குறித்த வெள்ளை வேன்,  கடற்படையின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளரின் கீழ்  வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  இந் நிலையில்  கடத்தல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படை நடவடிக்கை பிரிவு பணிப்பாளராக இருந்த அதிகாரியை விசாரித்து வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சி.ஐ.டி.  கோட்டை நீதிவான்  ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது.

இந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கல் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மேலதிக விசாரணை அறிக்கையுடன் இந்த விடயங்களை  நீதிவானுக்கு அறிவித்தார்.

அத்துடன் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ உள்ளமை தொடர்பில், அவரை விசாரணை செய்ய தேவையான நீதிமன்ற உத்தரவை அவரிடம் கையளித்துள்ளதாகவும்  இன்று (12) அவரை விசாரிக்க நடவடிக்கை  எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டிருந்தன.  குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் – அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.  இவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில்,  அது குறித்து சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரித்து வருகின்ரது. அது குறித்த நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றது.