கொலைப்படைக்கு தடைவிதித்து ஐநா; சர்வேந்திர சில்வா காரணமாம்

ஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்துவதை தடை செய்வதற்கு ஐநா தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் இனங்காணப்பட்ட போர்க்குற்றவாளியான லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்ததற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தனது முதலாவது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான பர்ஹான் ஹன் இதனை தெரிவித்துள்ளார்.

ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினரை ஈடுபடுத்துவதை ஐநா தடை செய்யும் என தெரிவித்துள்ள அவர் மிகவும் அவசியம் என்றால் மாத்திரமே அவர்களை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஐநா அமைதிப்படையில் தற்போது படையாற்றும் இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவினரையும் அதிகாரிகளையும் அடுத்தமாதம் முதல் திருப்பி அனுப்புவோம்,சுழற்சி நடவடிக்கைகள் குறித்த திகதியின் அடிப்படையில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் புதிய இலங்கை படையினரை இணைத்துக் கொள்ளமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக இலங்கைக்கு ஐநா நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் அதேவேளை சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி உயர்வினால்  ஐநா கவலையடைந்துள்ளது எனவும், சில்வாவின் பதவி உயர்வே எமது இந்த நடவடிக்கைக்கு காரணம். இது தொடர்பில் எமது கவலையை நாம் சிறீலங்கா அரசுக்கு தெரிவித்திருந்தோம். அனைத்துலக சட்டங்களுக்கு எதிராக போர்க் குற்றங்களில் சில்வா ஈடுபட்டதற்குரிய பெருமளவான ஆதாரங்கள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில்வாவின் நியமனத்திற்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்திருந்தன.

போரின் இறுதி நாட்களில் 58 ஆவது படையணியை வழிநடத்திய சில்வா சரணடைந்த பெருமளவான அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததுடன், வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீதும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டு பெருமளவான தமிழ் மக்களப் படுகொலை செய்திருந்தார்.

சில்வாவின் நியமனத்திற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் தனது எதிர்ப்பைத் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.