கொரோனா வைரஸ் – 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை  கடந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், “உலகம் முழுவதும் 4,92,53,080 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 12,42,750 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3,51,06,637 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, இந்தியா உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

முதல் கட்டக் கொரோனா அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்டக் கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகக் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு  கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில்  அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கொரோனாவில் 2,41,026 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,25,029 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,61,779 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4.9 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.