கொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

சீனாவில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது

இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், ”இந்த அவசரநிலை அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் நடந்து வரும் சம்பவங்கள் அல்ல, உலகின் மற்ற நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான்” என்று குறிப்பிட்டார்.

சரியான சுகாதார வசதிகள் இல்லாத நாடுகளில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற கவலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிடுவது இது ஆறாவது முறையாகும்.

இதற்கு முன்பு 2016இல் ஜிகா வைரஸ் தாக்குதல், 2014 மற்றும் 2019இல் இபோலா தொற்று உள்ளிட்ட 5 முறைகள் மட்டுமே உலக அளவில் சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் குறைந்தது 213 பேர் இறந்துள்ளனர்.11901266 3x2 கொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

மேலும் 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், மற்ற நாடுகளில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளது

மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பயணம் செய்தவர்கள் ஆவர்.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.

அதேவேளையில், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவி வரும் முறையில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவு பரவி வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவு அதற்கு சீனா நடவடிக்கைள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சீன அதிகாரிகள் எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டுவதாக தெரிவித்த டெட்ரோஸ், சீனாவுக்கு பயணம் செய்வதை தடுக்க வேறெந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.

”ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த அவசரநிலை அறிவிப்பு சீனா மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு அல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி-பிபிசி தமிழ்