Home செய்திகள் கொரோனா பயணத் தடை – வாழ்வாதார நெருக்கடிக்குள் கிழக்கு மாகாணம்

கொரோனா பயணத் தடை – வாழ்வாதார நெருக்கடிக்குள் கிழக்கு மாகாணம்

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வடக்கு கிழக்கில் பின்தங்கிய பகுதிகள் மக்கள் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் வாழும் தமிழ் மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித வருமானமும் இன்றியும் வெளியேற முடியாத நிலையிலும் மிக மோசமான கஸ்ட நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

IMG 20210616 WA0097 1 கொரோனா பயணத் தடை – வாழ்வாதார நெருக்கடிக்குள் கிழக்கு மாகாணம்

இதன் காரணமாக அன்றாடம் கூலித்தொழில்செய்வோரும், குடிசை கைத்தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள தமிழ் மக்கள் யுத்ததிற்கு பின்னர் ஓரளவு தங்களது வாழ்க்கையினை கொண்டு நடாத்திய நிலையில் பயணத்தடை காரணமாக பெரும்  நெருக்கடிகளை  எதிர்நோக்கி வருகின்றனர்.

வாகரை,கிரான்,ஏறாவூர்ப்பற்று,வவுணதீவு,பட்டிப்பளை,போரதீவுப்பற்று ஆகிய பகுதிகளின் எல்லைக்கிராம மக்களே பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி  வருகின்றனர்.

அதிலும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் காடுகளுக்குள் இருப்பதனால் உதவிசெய்வோரும் அங்கு செல்லாத நிலையில் ஒருவேளை உணவுக்கே பெரும் நெருக்கடிகளை  எதிர்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மினுமினுத்தவெளி, அக்குரானை ஆகிய பகுதிகளுக்கு புலம்பெயர் மக்களின் உதவியுடன் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவதே மிகவும்  கடினமாக இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.சுமார் 40கிலோமீற்றர் காடுகளை தாண்டி தொழிலுக்கு சென்றுவந்து தமது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை நடாத்திய இவர்கள், பயணத்தடை காரணமாக அதனையும் இழந்து நிற்கின்றனர்.

புலத்தில் இருக்கும் உறவுகள் இந்த மக்களின் நிலைமையினையறிந்து உதவுவதற்கு முன்வரவேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version