கொரோனா தாக்கம்: வெளிநாட்டுத் தொழிலாளர்களை பாதிக்கப்போகும் நியூசிலாந்து அரசின் புதிய முடிவு 

கொரோனா பெருந்தொற்று சூழலுக்குப் பின்னர் எல்லைகளை மீண்டும் திறக்கும் பொழுது குடியேறிகளை கட்டுப்படுத்தும் விதமாக குடியேற்ற கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில் குறிப்பாக குறைவான திறனுடைய வெளிநாட்டுத் தொழிலாளர்களை (Low-skilled migrants) குறைக்கும் திட்டத்தை நியூசிலாந்து அரசு ஆலோசித்து வருகிறது.

அதே சமயம், அதித்திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை (High skilled workers), வசதி படைத்த முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டத்தை நியூசிலாந்து அரசு கொண்டுள்ளதாக நியூசிலாந்து சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சர் Stuart Nash தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று சூழலினால் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஓராண்டில் நியூசிலாந்தின் குடியேற்ற எண்ணிக்கை 6,600 ஆக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதுவே கொரோனாவுக்கு முந்தைய ஆண்டின் குடியேற்ற எண்ணிக்கை 91,900 ஆக இருந்திருக்கிறது.

“நாங்கள் எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கும் பொழுது, முந்தைய குடியேற்ற எண்ணிக்கையை அப்படியே அனுமதிக்க முடியாது,” என  நியூசிலாந்து அமைச்சர் Stuart Nash கூறியிருக்கிறார். சமீப ஆண்டுகளாக கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களை சார்ந்திருக்கும் நிலையைப் பெருந்தொற்று சூழல் எடுத்துக்காட்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய நிலையில், நியூசிலாந்தின் மக்கள் தொகை 50 லட்சமாக உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியில் 1990கள முதல் தற்காலிக புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு உள்ளதாக நியூசிலாந்து அரசு குறிப்பிட்டிருக்கிறது.

“குறைந்த திறன் உடையவர்களாக அரசால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் தான் நியூசிலாந்து ஏற்றுமதி துறை தொடர்ந்து செயல்பட காரணமாக இருப்பவர்கள். அவர்கள் தான் நியூசிலாந்தில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை பராமரிப்பவர்களாக இருக்கின்றனர்,” என Business NZ அமைப்பின் தலைமை நிர்வாகி Kirk Hope தெரிவித்திருக்கிறார்.