கொரோனா: இந்தியாவைப் போல் இலங்கையும் மாறலாம் – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கை இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பி.சி.ஆர் மற்றும் துரிதஅன்டிஜென் சோதனையை நாளாந்தம் பத்தாயிரம் என்ற அளவிற்கு அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலைமை போன்ற ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்படலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஸ்பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

புத்தாண்டு கொண்டாட்டங்களிறகு முன்னர் சுகாதார விதிமுறைகளை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.  ஆபத்தான நிலையில் காணப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததன் காரணமாக அடுத்த 14 நாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

தற்போது நாளாந்தம் 5000 பிசிஆர் அல்லது அன்டிஜென் சோதனைகளே இடம்பெறுகின்றன.  இதனை பத்தாயிரமாக அதிகரிக்கவேண்டும் .

குருநால் புத்தளம் கொழும்பு கம்பஹா திருகோணமலை யாழ்ப்பாணம் போன்றவையே அதிகளவு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக காணப்படுகின்றன.   கடந்த சில வாரங்களில் இந்த பகுதிகளில் இருந்து அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மே முதலாம் திகதி முதல் அதிகளவு பிசிஆர் அன்டிஜென் சோதனைகளை முன்னெடுத்தால் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கருதுகின்றோம்.   நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சோதனைகளை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் நடப்பது இங்கும் நடக்கலாம்” என்றார்.

இந்நிலையில்,இலங்கையில் அதிகரித்து வரும்  கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மே தினத்தில் நடைபெறவிருக்கும் அனைத்து பேரணிகளையும் நிறுத்தி வைக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.