கொரோனாவைச் சாட்டாக வைத்து நீதியையும் மனிதஉரிமையையும் அழிக்கும் சிறிலங்கா

கொரோனா வைரஸ் விளைத்து வரும் மனித அவலங்களால் உலகே அரசியல் வேறுபாடுகளை மறந்து மனிதாயத்துடன் ஒருங்கிணைந்து மனிதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இணைந்து செயற்படுகின்றது.

ஆனால் சிறிலங்கா மட்டும், மனிதாயத்திற்கு எதிரான குற்றமும்,யுத்தக் குற்றமுமான, 5வயதுச் சிறுவரும் இரண்டு இளைஞர்களும் உட்பட எட்டுத்தமிழரை, அவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கொண்டுசெல்லப்பட்ட தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களைத் தேடிச் சென்ற போது, இனஅழிப்புச் செய்தமைக்காகச், சிறிலங்கா நீதிமன்றத்தாலேயே 2015இல் மரணதண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளியான சிறிலங்கா இராணுவச் சிப்பாய் சுனில் ரட்நாயாக்காவை விடுவித்துச், சட்டத்தின் ஆட்சியை கொரோனாவைச் சாட்டாக வைத்து தாங்கள் நினைத்தபடி தங்கள் கையில் எடுத்து நீதியையும் மனித உரிமையையும் அழித்துள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை குற்றவாளியை விடுதலை செய்ததின் வழி சிறிலங்கா அரசுää அங்கு நீதியை நிலைநாட்டுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூபெட் கொல்வில் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பிராந்தியப்பணிப்பாளர் மினாட்சி கங்குலி சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவால் நீதியை நிலைநாட்ட முடியாதென்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

போர்க்குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபையால் அடையாளம் காணப்பட்ட சவீந்திர சில்வாவைப் இராணுவத்தளபதியாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மற்றொரு படைஅதிகாரியான காமால் குணரட்ணாவை பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து இவர்களின் வழிநடத்துதலிலேயே தற்போதைய கொரோனோ வைரஸ் தொடர்பான நடவடிக்கைக் குழுவையும் செயற்பட வைத்துள்ளமை சிறிலங்காவில் நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றின் தேவையைத் தெளிவுபடுத்தியுள்ளது எனவும் அவர் விளக்கியுள்ளார்.

அனைத்துலக நீதியாளர் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக்பிராந்தியப் பணிப்பாளர் பிரடெறிக் றவ்ஸ்கி அவர்களும் இத்தகைய மன்னிப்பு என்பது அனைத்துலக நீதி விதிகளுக்கு முரணானது. எவ்வளவு பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் படையினர் நீதிக்கு விதிவிலக்கானவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. மக்கள் கொரோனா வைரஸ் இன் தாக்கம் தொடர்பான அச்சத்தில் உள்ளபோது அவர்களின் மனங்களை மேலும் பாதிக்கும் வண்ணம் இவ்விடுதலை அமைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடவே தான் அரசத்தலைவராகப் பதவியேற்றால் படையினர் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற தனது உறுதிமொழியைத் தற்போதைய அரசதலைவர் நிறைவேற்றியுள்ளார் எனக் குறிப்பிட்ட அவர் சிறிலங்காவின் இந்த நடவடிக்கையைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறாக உலகு சிறிலங்காவுக்கு தனது அதிருப்பதியைத் தெரிவிக்கும் இந்நேரத்தில் இலங்கையின் நீதியரசராகவும், வடமாகாணசபையின் முதலமைச்சராகவும் அனுபவமுடைய சட்டஅறிஞரான விக்கினேஸ்வரன் அவர்கள் அனைத்துலகத் தூதரகங்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பிய ஊடக அறிக்கையில் சிறிலங்கா ஐக்கியநாடுகள் சபையின் உறுப்பு நாடாக இருக்கும் தகுதியைக் கொண்டுள்ளதா என ஐக்கியநாடுகள் சபை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் போர்க்குற்றவாளிகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்கள். தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்தவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்போ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்படக் கூடிய இதையொத்த நீதிவிசாரணை ஒன்றிலோ நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அர்த்தமுள்ள இந்தச் சட்டவழிகாட்டலை அனைத்துலகத் தமிழர்களும் இணைந்து முன் எடுத்து சிறிலங்காவை நீதியின் முன் நிறுத்த வேண்டிய பெரும்பொறுப்பைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பதை ‘இலக்கு’ நினைவுறுத்த விரும்புகிறது.

-இலக்கு மின்னிதழ்-