கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா

கொரோனா என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற நச்சுக் கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கத் தொடங்கி விட்டது. மனித இன வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல தொற்று நோய்கள் வந்திருந்தாலும், கோவிட்-19 உலக நாடுகளுக்கு இடையிலான உறவிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

சுகாதாரப் பிரச்சினையில் இருந்து பொருளாதாரப் பிரச்சினை வரை

சீனாவின் முக்கிய நகரமான வூஹான் தனிமைப்படுத்தப்பட்ட போதும், அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போதும், பெரும் பொருளாதாரப் பிரச்சினை எழுந்தது. சீனாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டு 2020இன் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் தொழிற்றுறை உற்பத்தி 13.5% வீழ்ச்சியடைந்தது. 1979இன் பின்னர் சீனாவின் பொருளாதாரம் குன்றப் போகின்றது எனக் கருதப்படுகின்றது. சீனாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும், உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவில் இருந்து அந்த நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதி இனிக் குறையும் போது சீனாவின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்றது.

சீனாவின் கௌரவப் பிரச்சினை

சீனாவில் இருந்து தான் கோவிட்-19 உருவானது என்பதும் சீனா ஆரம்பத்தில் கோவிட்-19 கிருமிகள் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளிவிடவில்லை என்ற குற்றச்சாட்டும் சீனாவிற்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. சீனா தான் கோவிட்-19 கிருமிப் பரவலை மற்ற நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது எனச் சொல்கின்றது. சீன அரசு மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளால் 7.5மில்லியன் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்ற ஒரு பிரித்தானியப் பல்கலைக் கழகம், சீனா தனது நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால் 95% உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச் சாட்டையும் முன் வைத்தது. உலக சுகாதார நிறுவனம் சீனாவை வாயாரப் புகழ்ந்துள்ளது.

முதற்பலி எரிபொருள் துறை

கோவிட்-19இன் முதற்பலி எரிபொருள் விலையாகும். கோவிட்-19 நச்சுக் கிருமிகள் பரவுவதைத் தடுக்க மக்களின் உள்நாட்டுப் போக்குவரத்தும் பன்னாட்டுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்ட போது எரிபொருள் பாவனை குறைந்ததால் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தது.oil prices coronavirus 001 கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா

அதனால் எரிபொருள் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா விடுத்த வேண்டுகோளை ரஷ்யா நிராகரித்தபோது சவுதி சினம் கொண்டது. இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, எரிபொருள் விலை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது. பின்னர் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச முயற்ச்சி செய்ய முன் வந்துள்ளது.

நாட்டுக்கு நாடு வித்தியாசமாக கையாளப்பட்ட கோவிட்-19

சிறிய நாடென்பதாலும் சிறப்பாக முகாமைப்படுத்தப்படுவதாலும் சிறந்த மருத்துவத் துறையைக் கொண்டிருந்தபடியாலும் சிங்கப்பூர் கோவிட்-19 நச்சுக் கிருமிப் பரவலை சிறப்பாகக் கையாண்டது. சிறப்பான ஒற்றையாட்சியைக் கொண்ட தென் கொரியாவாலும் சிறந்த முகாமையைக் கொண்ட ஜப்பானாலும் கோவிட்-19இன் பரவலை தடுக்க முடிந்தது.

தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மற்ற ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன.

துருக்கிய ஆட்சியாளர்கள் முதலில் தமது நாட்டில் கோவிட்19 நச்சுக்கிருமி பரவவில்லை என்றது. இஸ்ரேல் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை கோவிட்-19இற்கு எதிராக எடுத்தது. இலங்கை அரசு கோவிட்-19இல் அதிக கவனம் எடுத்தது. விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி அதன் அரசமைப்பு யாப்பின் 19வது திருத்தத்தை ஒழிப்பதில் அதிபர் அக்கறையாக உள்ளார். பின்னர் தேர்தல் பின்போடப்பட்டுள்ளது.

பண்டங்கள் அல்ல மனிதப் போக்குவரத்தே பிரச்சனைக்குரியது.

சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கோவிட்-19இன் பாதிப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க குறைந்த அளவில் இருக்கின்றது.

கோவிட்-19 நச்சுக் கிருமியின் ஆரம்ப இடமான வூஹான் நகரில் இருந்து நேரடி விமானச் சேவையைக் கொண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று நோய்ப் பரவல் துரிதமாகவும் அதிக அளைவிலும் இருந்தது. கோவிட்-19 நச்சுக் கிருமி மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதே அதிகம் அது உணவுப் பொருட்களிலோ மற்ற வர்த்தகப் பொருட்களிலோ அதிக மணித்தியாலங்கள் உயிருடன் இருக்காது.

அமெரிக்கப் படையினர் பரப்பினர் என்கின்றது சீனா

சீனாவின் வூஹான் நகரில் நடந்த பல நாடுகளின் படையினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபெற வந்த அமெரிக்க படையினர் அங்கு கோவிட்-19 நச்சுக் கிருமியைப் பரப்பினர் என சீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

5844562 1 கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா
The U.S. Armed Forces Sports team marches during opening ceremonies for the 2019 CISM Military World Games in Wuhan, China Oct. 18, 2019. Teams from more than 100 countries will compete in dozens of sporting events through Oct. 28

சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளரான Zhao Lijian திட்டமிட்டு இப்படி ஒரு கதையைப் புனைந்து சீன சமுகவலைத்தளங்களில் பரவ விட்டார் என அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலங்களில் சீனா எடுத்த பிழையான நடவடிக்கைகளை மறைக்கவே இப்படி ஒரு கதையை சீனா கட்டிவிட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்கர்கள்.

போர் அனுபவமில்லா சீனாவின் போர்க்கால நடவடிக்கை

சீனாவின் படைத்துறையைப் பற்றி விமர்சிக்கும் மேற்கு நாட்டவர்கள் சீனர்களுக்கு போர் அனுபவம் இல்லை என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார்கள். ஆனல் கோவிட்-19 நச்சுக் கிருமியை ஒழிப்பதில் எடுத்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஒரு போர் நடந்தால் அதை சீனா எப்படிக் கையாளும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் சீனா மனித இயந்திரங்களைப் பயன்படுத்தியது. நோயால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருந்துகளையும் உணவையும் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. செயற்கை நுண்ணறிவில் சீனா எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதையும் சீனாவின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.

வித்தியாசமாகக் கையாள முயன்ற பிரித்தானியா

இரண்டு உலகப் போரிலும் பிரித்தானியா தனது மக்களின் உயிர்களின் பாதுகாப்பிலும் பார்க்க எதிரியை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தனது மக்களின் அதிக உயிரிழப்புக்கள் அவர்களை தீவிரமாகப் போரில் ஈடுபடத் தூண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அது போலவே கோவிட்-19 கிருமிகளைப் பரவ விட்டு அதை அழிக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டு சீனாவில் இருந்து வைக்கப்பட்டது. பிரித்தானியா ஆரம்பத்தில் பாடசாலைகளைக் கூட மூடாமல் இருந்தது ஆனால் பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்று அதனால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என எச்சரித்தைத் தொடர்ந்து பிரித்தானியா தன் அணுகுமுறையை மாற்றியது.

அவசர நிலையில் அமெரிக்கா 

இணைப்பாட்சி ஆட்சி முறைமையைக் கொண்ட அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான வகையில் கையாளும் நிலையைத் தவிர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அவர் எடுக்கும் முயற்ச்சிக்கு கோவிட்-19 கிருமிகளையும் பாவிக்க முயன்றார். அதனால் முதலாவதாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகள் வருவதைத் தடை செய்தார். அதே போல் ஐரோப்பிய நாடுகள் செய்யாதபடியால் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதைத் தடை செய்தார். கோவிட்-19 ஆரம்பித்த போது அமெரிக்கத் தொற்று நோய் நிபுணர்கள் சீனா சென்று ஆய்வு நடத்த சீனா மறுத்திருந்தது. இப்போது பல சீன நிபுணர்கள் இத்தாலி உட்பட பல நாடுகளுக்கு உதவச் சென்றுள்ளனர்.

சீனா – அமெரிக்கா இடையிலான முரண்பாடு கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது.