கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவு நாள்

இன்றைய நாள் ஈழத்தமிழர்ளின் வாழ்வில் மறக்க முடியாததோர் நாளாகும். இன்று கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவு தினமாகும்.

இப்படுகொலை கிழக்கை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் ஓர் உலுக்கு உலுக்கியது.

இப்படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து இன்றுடன் 33 வருடங்கள் ஆகிவிட்டன,

கொக்கட்டிச்சோலை பிரதேசமே குருதியில் நனைந்த இப்படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவு கூறப்படுகின்றது,

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒர் மிகக்கொடூரம் நிறைந்த இனவழிப்பாகும்,

1987ம் ஆண்டு தை மாதம் 28,29,30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை இதுவாகும்,

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்களே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் சுட்டும், வெட்டியும், டயர் போட்டு எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்,

இதில் 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர்.
கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைத்து வான் வழியாகவும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன,

இறால் பண்ணையில் தொடங்கிய இந்த இரத்தவேட்டை முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்து கொக்கட்டிசோலை பிரதேசத்தின் கிராமங்கள் அனைத்தையும் சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதிரில்
வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர் கிராமமே அல்லோல கல்லோலபட்டது.

படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.

1 2 கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவு நாள்பலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமான முறையில் சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்,

இக் கொக்கட்டிச்சோலைப் படுகொலை நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை மூலம் நடாத்தப்பட்டது,

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாததோர் வடுவாக நிலைத்துவிட்டது.