கைகொடுக்கும் கைத்தொழில்

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கில்லை   ஒத்துக்கொள்” என்கின்ற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றை சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. எளிய மூலப் பொருட்களைக் கொண்டு, ஒருவரின் செயற் திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழல் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

PHOTO 2021 03 19 20 54 32 கைகொடுக்கும் கைத்தொழில்

நமது நாட்டில் கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலையே செய்கின்றனர். இவர்கள் விளைபொருட்களை நேரடியாக  மக்களிடம் கொண்டு செல்லாது முகவரிடம் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். அதனைப் பெற்ற முகவர் இலாப நோக்கத்தில் அதிக விலையில் மக்களிடம் விற்பனை செய்கின்றனர். இதனால் மக்களும் விவசாயிகளும் பாதிப்படைகின்றனர். மற்றும் கிராமங்களில் வசிக்கும் பலர் மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத் தொழிலுக்குத் தேவையான சில கருவிகளைச் செய்தல், நெரவுத்தொழில், பாய் பின்னுதல், கூடை முடைதல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்ற பலவகைக் கைத்தொழில்களை செய்கின்றனர். தமது வருவாயை கருதி காட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரத் தளபாடங்கள் செய்தல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர்.

கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயற்பாடு. நமது முன்னோர்கள் கூடைகளை முடைந்தும், பாய் பின்னியும் மனதை ஒருமுகப்படுத்தினார்கள். தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழில் நுட்பங்களின் துணையோடு வாழ்கின்றோம். நாம் எதையும் உருவாக்கத் தேவையில்லை என்ற நிலையில் வாழ்கின்றோம். ஆனால் பழங் காலத்தில் கைத்தறியை பெண்கள் அதிகமாக செய்தனர். தற்காலத்தில் கைத்தறியை உயிரூட்டும் ஒரு தொழிலாக பார்ப்பதற்குப் போதுமான நிலை இல்லை. அதை நம்முடைய முக்கிய தொழிலாக மாற்றுவதோடு நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு அதனைப் பற்றி தெரிந்து பயனடையக் கூடியவாறு மாற்ற வேண்டும்.

PHOTO 2021 03 19 20 55 58 கைகொடுக்கும் கைத்தொழில்

கைத்தொழில் வடிவமைப்பு பொருட்களை கவர்ச்சிகரமாக்குகிறது. அதனால் அதன் பெறுமதி அதிகரிக்கின்றது. அவை கைத்தொழில், கைப்பணிப் பொருட்கள் பரவலாக விரிவடைவதை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்கின்றது. மற்றும் அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது. “கைத்தொழிலைக் கற்றிருந்தால் வாழ்க்கையில் கவலை இல்லை” என்பது பழமொழி. கற்பனைத் திறனையும் கைத்தொழிலாக மாற்றிக் கொண்டால், வாழ்க்கையில் வெற்றி வெகு தூரத்தில் இல்லை என கிராம மக்கள் உணர்த்தி வருகின்றனர். இவர்கள் வித்தியாசமாகவும், குறைந்த விலையிலும் விதவிதமான பொருடகளில் அணிகலன்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவ் விற்பனைப் பொருட்களுக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

காலப்போக்கில் கிராப்ட் என்கின்ற கைவினைப் பொருட்களை உருவாக்குதற்கென புனையப்பட்ட மினி கருவிகள், சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கிளிஞ்சல்கள், ஐஸ்குச்சி, வண்ணக் காகிதங்கள், ரிபன், கிளே, மணிகள், துண்டுக் கண்ணாடிகள், தெர்மக்கோல், குளு ஸ்ரிக், ஊசி, கோல்டன், பிளாஸ்ரிக் பூக்கள் என பல வித்தியாசமான பொருட்கள் இந்த கைவினை கலைப் பொருட்களை உருவாக்குவதில் இடம் பிடித்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தைப் பயனுற செலவழிக்க இது ஒரு நல்ல தொழில் மாத்திரம் அல்ல. தங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் அமையும் உத்தியும் கூட. இந்த வகையில் பூந்தொட்டிகள், பலவிதமான பரிசுப் பொருட்கள், அலங்கார தோரணம், ஆபரணங்கள், தலையணை ஆகிய வடிவங்களை உருவாக்குவதில் கைதேர்ந்த திறமைசாலிகளாகக் கூட சிறந்து விளங்குகின்றனர்.

இன்றைய காலத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளதைக் காண முடிகின்றது. அதாவது கைத் தொழிலாளர்கள் இணையம் மற்றும் சமூகவலைத் தளங்களைப் பயன்படுத்தி தம் உற்பத்திப் பொருட்களை இலவசமாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யக் கூடியதாக உள்ளது. அதேசமயம் இடைத் தரகர் மூலம் பொருட்களை விற்பனை செய்யாது, நேரடியாக விற்பனை செய்வதால், முழு இலாபத்தையும் ஈட்டிக் கொள்ள முடிகின்றது. அதேபோல வாடிக்கையாளர்களும் வீட்டிலிருந்தே தமக்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகள் காணப்படுகின்றது.

இக் கைத்தொழில் மூலம் பலர் பயனடைந்தாலும் கூட, இணையவழி விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஏமாறக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. அதாவது ஒரு சிலரின் பண மோகம் காரணமாக தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதனால், ஒழுங்கான முறையில் தரமான கைத்தொழில் பொருட்களை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் அவப்பெயர் கிடைக்கப் பெறும் நிலைமை காணப்படுகின்றது.

தொழில் நுட்ப மாற்றம் கைத்தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பாகக் காணப்பட்டாலும், பலவிதமாக சிந்திக்கும் போது அதுவே அச்சுறுத்தலாகவும் காணப்படுகின்றது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா காரணமாக உள்நாட்டு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு நிலைமை சாதகமாகவே காணப்படுகின்றது. அதாவது வெளிநாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாத காரணத்தினால் உள்நாட்டுக் கைத்தொழில் விற்பனை அதிகரித்ததை கண்கூடாகவே காண முடிகின்றது. மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களும் கூட தமது உற்பத்தி மற்றும் திறன்களை அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படுகின்றது.

PHOTO 2021 03 19 20 54 22 கைகொடுக்கும் கைத்தொழில்

முக்கிய இடத்தை வகிக்கும் ஆடைக் கைத்தொழிலானது மாவத்தகமை, பொல்காவலை, மீரிகமை, கட்டுநாயக்க, பியகம, கொறணை, சீதாவாக்கை, கொக்கலை, மல்வத்தை, வத்துபிடிவெல, கண்டி போன்ற வலயங்களில் அதிகளவு நடைபெறுகின்றது. நம் நாட்டில் ஆடைகள் உற்பத்தி தரமானதாகக் காணப்படுவதால், வெளிநாடுகளில் நம் ஆடை உற்பத்திக்கு கேள்வி அதிகமாக உள்ளது. இதனால் ஆடை ஏற்றுமதி மூலம் நமது நாடு சிறந்த வருவாயை ஈட்டிக் கொள்ள முடிகின்றது. இவ் ஆடை உற்பத்தி மூலம் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கின்ற நிலை காணப்படுகின்றது.

நம் நாட்டு பேரளவு, இடைநிலை, சிற்றளவு போன்றவற்றை அக்காலம் தொடக்கம் இக்காலம் வரையிலும் பேணிப் பாதுகாத்துள்ளனர். அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் கைத் தொழில் உற்பத்தியும் ஒரு முக்கிய பங்கு விக்கின்றது. எனவே உள்நாட்டில் செய்யப்படும் கைத்தொழல் பொருட்களை அந்நாட்டு மக்களும் வாங்குமிடத்து கைத் தொழில் மேலும் வளர்ச்சி அடைவதோடு அது மீண்டும் வீழ்ச்சி அடையாது பாதுகாக்க முடியும்.

உ.பிருந்தகா

BSc Nursing.

University of Jaffna