கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றாதாம் – சஜித்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சிறீநேசன்

காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி ஓருவரை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏமாளிகளாக தமிழ் மக்கள் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

முன்னாள் ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்ட காணாமல்ஆக்கப்பட்டவர்களை கோத்தபாயவுக்கு ஆதரவாக செயற்படும் தமிழ் கட்சிகளினால் மீட்டு வழங்கமுடியுமா என்றும் இதன்போது கேள்வியெழுப்பினார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். சாப்பாடு பார்சல்களை விநியோகிக்கும் அலுவலகங்களாக பொதுஜன பெரமுன அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் வாக்களிக்கின்றார்களோ இல்லையோ கூட்டங்களில் சனத்தொகையினை அதிகரித்துகாட்டவேண்டும் என்பதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ஸ தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டிருக்கின்றார். இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் என்ன இருக்கின்றது என்பது குறித்து அறிவுள்ள மக்கள் சிந்தித்துவருகின்றனர்.

அவரிடம் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வாக இருப்பது மரணச்சான்றிதழ் வழங்குவது மட்டுமேயாகும்.மரணச்சான்றிதழ் இல்லாமல்தான் ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர்?.

மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முடிந்துவிடும் என்று கூறுபவர்களுக்கு சார்பாக வாக்கு சேகரிப்பவர்களிடம் கேட்டுக்கொள்ளும் விடயம் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று நீங்கள் கூறினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடுத்திருக்கும் முக்கியமான கோரிக்கையான அவர்களின் ஆட்சிக்காலத்தில் காணாமல்ஆக்கப்பட்டவர்களை தேர்தலுக்கு முன்பாக ஆலயங்கள்,தேவாலயங்களுக்கு முன்பாக கண்டுபிடித்து ஒப்படையுங்கள்.அதன் பின்னர் உங்களுக்கு வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்த தமிழ் மக்கள் பரிசீலனை செய்வார்கள்.மாறாக மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக ஒரு ஜனாதிபதி வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அளவில் தமிழ் மக்கள் ஏமாளிகள் இல்லை.

2005ஆம் ஆண்டு வடகிழக்கு மக்கள் வாக்களிக்காத காரணத்தினால் வெற்றிபெற்றவர்கள் தமிழர்களுக்கு வழங்கியது எல்லாம் தண்டனைகளாகும். காணாமல் ஆக்கப்படுதல், கைதிகளாக்கப்படுதல், யுத்ததினை மனித உரிமைகள் மீறக்கூடிய வகையில் வழிநடாத்தியமை,பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டமை உடபட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதனை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.

எனவே கடந்த ஆட்சிக்காலத்தில் உங்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதிகளாக்கப்பட்டவர்கள் இவர்களின் விடுவிப்பு என்ன, நிவாரணம் என்ன, இவர்களை கொண்டுதரமுடியுமா என்பதை அவர்களுக்கு பின்னால் திரியும் கட்சிகளிடமும் கேட்கின்றோம். உறவுகளை அழித்துவிட்டு புதைத்துவிட்டு தமிழ் மக்களிடம் வந்து வாக்குகளை கேட்பதற்கான யோக்கியதையினை இழந்துவிடுகின்றீர்கள்.

துற்போது பட்டிமன்றம் போன்று தேர்தல் மேடைகள் காணப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு பட்டிமன்ற மேடைகளில் வியாழேந்திரன் போன்றவர்கள் கோத்தபாயவின் காலத்தில் அநேகமானவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், கொத்துக்கொத்தாக குண்டுகளைப் போட்டு அழித்துள்ளார்கள், வெள்ளைவான்களில் கடத்தியுள்ளார்கள் என்று அன்றைய மேடைகளில் பேசிய வியாழேந்திரன் இன்று கோத்தபாய நல்லவர் என்று மாற்றுக்கருத்துகளை தெரிவிக்கின்றார்.

இன்று நாங்கள் பட்டிமன்றம் நடாத்துவதற்கான காலம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் இருக்கும்போது அவர்களின் கண்ணீரை புறந்தள்ளி நாங்கள் யாரை திட்டி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றோமோ இன்று அவர்கள் உத்தமர்களாக சித்திரிக்கும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

தமிழ் மக்கள் மறதியுள்ளவர்கள் அல்ல.தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், கஸ்டங்கள் தொடர்பில் ஆழமாக சிந்தித்துவருகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னசொல்லப்போகின்றது என்பது தொடர்பில் சிந்தித்துக் கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆளமாக பரிசீலித்து வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்களுக்கு சார்பான கருத்துகளை சொல்லுமேயொழிய விலைபோய் தமிழர்களை ஏமாற்றமாட்டார்கள். பொதுஜன பெரமுனவின் அலுவலகங்களுக்கு சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துதருமாறு கோரிக்கை விடுக்கவேண்டும்.

இன்று பொதுஜன பெரமுனவின் பக்கத்தில் நிற்ககூடிய அதாவுல்லா, முஸ்ஸமில், ஹிஸ்புல்லா போன்றவர்கள் ஒரு அணியிலும் அதே அணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், கருணா, வியாழேந்திரன் போன்றவர்கள் உள்ளனர். இந்த நிலையில் அதாவுல்லா அவர்கள் கோத்தபாய வெல்லுவார் கிழக்கிஸ்தான் உருவாகும் என்று சொல்கின்றார்.அப்படியினால் கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறும் வியாழேந்திரன் போன்றவர்களும் அதே அணியில்தான் உள்ளனர்.

ஹிஸ்புல்லா சிறுபிள்ளைத்தனமாக கருத்துகளை மக்களிடம் கூறி மக்களை ஏமாற்றவேண்டாம். பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படும் அவர் பல கதைகளை கூறிவருகின்றார். ஹிஸ்புல்லாவின் சுயநல அரசியலுக்காக முஸ்லிம் மக்களை பலிகொடுப்பதற்கு அவர் தயாராகயிருக்கின்றார். இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மக்கள் மத்தியில் வியாழேந்திரன், ஹிஸ்புல்லா,அதாவுல்லா போன்றவர்கள் நடாத்தும் நடாகங்கள் ஒரே பாணியிலேயே சென்றுகொண்டிருக்கின்றது. காணாமல்ஆக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டவர்களை கதாநாயகர்களாக மாற்றுவதற்கான சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை
முன்னெடுத்துவருகின்றனர்.

அன்று தமிழ் தேசியவாதிபோன்று உரக்கப்பேசிய வியாழேந்திரன் இன்று தமிழ்தேசியத்தினை தலைகீழாக தூக்கியெறிந்துவிட்டு பேரினவாதத்திற்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கு எடுபிடியாக நின்று அரசியல்செய்யும் பாங்கினை காணமுடிகின்றது.

தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.அலுவலகங்கள் திறப்பதற்கான பணம் தாராளமாக இறைக்கப்பட்டுள்ளது.கூட்டங்களை நடாத்துவதற்கான பணமும் வழங்கப்பட்டுள்ளது.மக்களை எவ்வாறு எல்லாம் ஏமாற்றலாமோ அவற்றுக்கு எல்லாம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். ஒரு தவறினை செய்தால் ஐந்து வருடங்கள் அல்லது பத்து வருடங்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் சூழ்நிலையேற்படும்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இராணுவத்தினை பலப்படுத்துவதாக கூறியுள்ளார்.புலனாய்வுத்துறையினை பலப்படுத்தல்,குற்றத்திற்காக சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுவித்தல் என இவற்றினையெல்லாம் பார்க்கும்போது கெடுபிடியான ஒரு பயங்கரமான ஆட்சிக்கு ஆரம்பமாகவே இவை தெரிகின்றது.

கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட சாதாரண விடயங்களே தெரிவிக்கப்பட்டுள்ளன தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.தமிழ் மக்களை பரிகாசப்படுத்துகின்ற விடயமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.