கூட்டமைப்புக்கு வழங்கிய தேர்தல் நிதியில் குளறுபடி

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பல மில்லியன் பணம் கூட்டமைப்பின் தலைமையிடம் கையளிக்கப்பட்டபோதும் அந்த நிதி வடக்கு கிழக்கில் உள்ள கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கும்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதிலே பாரபட்சமும் குளறுபடிகளும் ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் மூலம்
அறியவருகிறது.

மேலும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 15 லட்சம் ரூபாவும் இன்னும் சிலருக்கு ஒரு கோடி ரூபாவும் மாநகர சபை,நகர சபை பிரதேச சபை தவிசாளர்களுக்கு 5,10,15லட்சம் ரூபாவும் வழங்கப்பட்டும் இந்த நிதியை குறிப்பிட்ட சிலரை தவிர ஏனையவர்கள் இந்த நிதியை முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தாமல் பதுக்கிவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட தேர்தல் பிரச்சார பணத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்புக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது எனவும் அவ்  நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்பட்டது போன்ற கணக்கு விபரங்களை தமிழரசுக்கட்சியின் தலைமையிடம் கேட்டிருப்பதாக பங்காளி கட்சி தலைவர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் செலவளிப்பதற்காக ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட நிதியில் பெருந் தொகையானவற்றை தமிழரசுக் கட்சி பதுக்கிவிட்டதாகவும் இதே போன்றே 2010,2015 ஜனாதிபதி தேர்தல்களிலும் பிரதம மந்திரியிடம் இருந்தும் பிற நாடுகளிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தொகை நிதியை தமிழரசுக்கட்சியினால் பதுக்கப்பட்டு பாராளுமன்ற,மாகாண
சபை,உள்ளுராட்சி தேர்தல்களில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கும்
ஆதரவாளர்களுக்கும் அதிக நிதி வழங்கப்பட்டதாகவும் ஏனைய பங்காளி கட்சிகளுக்கு மிக குறைவான நிதி வழங்கப்பட்டதாகவும் பங்காளி கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் வாக்குகளை விலை பேசி தமது சுயலாப அரசியலுக்காக
பயன்படுத்தப்படுகின்ற நிதிக்கு வாக்களித்த மக்கள்தான் வரியும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கான எத்தனையோ அத்தியாவசிய அடிப்படை தேவைகள் இன்று வரை பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஜனநாயகத்தின் பெயரால் பணநாயகத்தை சுருட்டிக்கொண்டு தொடர்ந்தும் எம் மக்கள் இவ்வாறன ஏமாற்றுபேர் வழி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களிடம் போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்க சென்றபோது சம்பந்தர் அவர்கள் நாங்கள் எங்கிருந்து பணத்தை தருவது எங்களிடம் பணம் இல்லை எனக் கூறி அவரை திருப்பி அனுப்பிவைத்தார். ஆனால் சம்பந்தரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை ஒரு சிங்கள தனவந்தரிடம் அழைத்து சென்று 50000
ரூபா பெற்றுக்கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தார்.

சம்பந்தரின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஒரு சிங்களவருக்கு இருந்த மனிதநேய பண்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று மார்தட்டிக் கூறிக்கொண்டு இருக்கும் கூட்டமைப்பின் தலைமையிடமோ அல்லது கூட்டமைப்பின் அங்கத்தவர்களிடமோ துளியளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழ் மக்களின் வாக்குகளுக்கு விலைபேசி பல மில்லியன் பணத்தை பெற்றுக் கொண்டு ஆளுங்கட்சி பங்காளிகளாகவும் அரசாங்கத்தின் சொகுசு பங்களாக்களிலும் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றவர்களை எம்மக்கள் என்றுதான் புரிந்துகொள்ளப் போகின்றார்களோ.