கூட்டமைப்பில் உள்ள சிலரே அதனைப் பலவீனப்படுத்த முயற்சி: செல்வம் கடும் சீற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துகின்ற, நம்பிக்கை அற்ற நிலைப்பாட்டை உருவாக்குகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே யாரை தெரிவு செய்யவேண்டும், யாரைத் தெரிவு செய்யக்கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது மக்களாகிய உங்கள் கைகளில் உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிச்சயமாகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்று சுமார் 400 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்கள் சுயேச்சைக் குழுக்களிலும், அரசோடு மறைமுகமாகச் சொந்தம் கொண்டாடுகின்றவர்களும் கள மிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இந்தச் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் மறைமுகமாக அரசோடு செயற்படுகின்றவர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.”