கூட்டணி பொதுச் செயலாளர் நியமனத்தில் சர்ச்சை? திங்களன்று ஐ.தே.க. கூடுகின்றது

ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் நேற்று செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என mறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது பிற்போடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கான பொதுச் செயலாளரை நியமிப்பது, புதிய கூட்டணியின் சின்னம், பெயர் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியொருவர் தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் அண்மையில் தீர்மானம் எடுத்திருந்தனர்.

இதன்பிரகாரம் ரஞ்சித் மத்தும பண்டாரவை பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பெயரிட்டார். இந்த முடிவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக்குழு நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கியது.

பொதுச்செயலாளரைப் பெயரிடுவதற்கான அதிகாரம் சஜித்துக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவரின் முடிவுக்கு கட்சியின் மத்திய குழுவின் அனுமதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இவ்விவகாரம் பற்றி மேலும் ஆராயும் நோக்கில் ரணில் தரப்பால் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படவேண்டும் என்பதே ரணில் தரப்பின் கோரிக்கையாக இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.