குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராஜ சுவிஸ் அதிகாரிக்கு உத்தரவு

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியாபெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான்மன்று நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸ், நவம்பர் 25 ஆம் திகதி அடையாளம் தெரியாத குழு வினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார் எனத் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சுவிஸ் தூதரகமும் அதிருப்தி வெளியிட்டது. அதனை அடுத்து, பொலிஸார் மற்றும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு, சுவிஸ் தூதரக அதிகாரியிடமும் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளின் முடிவில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொய்ச் சாட்சியங்களை முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் கடந்த டிசெம்பர்மாதம் 30ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.