Tamil News
Home செய்திகள் குடியுரிமை இல்லாதவர்களை தங்க வைக்க தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன

குடியுரிமை இல்லாதவர்களை தங்க வைக்க தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் அதேவேளை, அசாம் மாநிலத்தில் குடியுரிமை கிடைக்காதவர்களை தங்க வைப்பதற்காக தடுப்புக் காவல் முகாம்களை மத்திய அரசு அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து வந்த சுமார் 20இலட்சம் பேர் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் அசாம் ஒப்பந்தத்தின்படியும் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 19 இலட்சம் பேர் சேர்க்கப்படவில்லை என்று ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. ஆனால் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவியுள்ளவர்களை அடையாளம் காணவே தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கின்றது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க மேல் முறையீடு செய்யலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ், பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்களை இதற்கு ஆதாரமாக அளிக்கலாம். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் 120 நாட்களுக்குள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிடலாம். இதில் தீர்வு கிடைக்கா விட்டால், அசாம் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். கடைசியாக உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் எல்லா நிலைகளிலும் குடியுரிமை கிடைக்கப் பெறாதவர்கள் நிலை என்ன என்பது குறித்து இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அல்லது குடியுரிமை இல்லாதவர்களை தடுப்புக் காவலில் தங்க வைப்பதற்காக அசாம் மாநிலத்தில் மத்திய அரசு முகாம்களைக் கட்டி வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அசாமில் 10 தடுப்பு காவல் முகாம்கள் கட்டப்பட உள்ளதாகவும், அவற்றில் ஒன்று கோல் பாரா பகுதியில் கட்டப்பட்டு வருவதாகவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முகாம் கால்ப்பந்தாட்ட மைதானத்தைப் போல 7 மடங்கு பெரியதாகவும், அங்கு 3000பேர் வரை தங்க வைக்கும் வகையில் கட்டப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பை அவதானித்து அதற்கு பதில் கூற வேண்டும் என மத்திய அரசு நினைக்காது, தனது சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்றே நினைக்கின்றது.

இன்று வட இந்தியாவில் அமுல்ப்படுத்தப்படும் சட்டம், வெகுவிரைவில் தென்னிந்தியாவிலும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கலாம்.

Exit mobile version