குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக பேரணி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக வினர் இன்று(23) எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்திலிருந்து ஓர் பேரணியை ஆரம்பித்தனர். இந்த பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்தப் பேரணி நடத்துவதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றைய தினம் பேரணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இருந்தும் நேற்றிரவு பேரணியை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூரில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் கட்சி பேதமின்றி அதிமுக கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் பங்கு கொண்டன. பேரணிக்கு காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை. இதனால் பேரணியை முழுமையாக படமெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டது. இதற்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், சிறப்புக் காவல் படையினர், கலவரத் தடுப்பு வாகனங்கள் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ட்ரோன்கள் மூலம் பேரணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

dmk1 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக பேரணிபேரணியில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். ஸ்டாலினைத் தொடர்ந்து சென்ற பேரணியில் கோஷங்கள் பல எழுப்பப்பட்டன. பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் முடிவடைந்தது. அங்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் “இது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணி அல்ல, போர் அணி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படா விட்டால், பேரணி, ஆர்ப்பாட்டம் என்பதுடன் நிற்காமல் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக முன்னெடுப்போம். எங்களின் பேரணிக்கு தடை விதிக்காத நீதிமன்றத்திற்கு நன்றி. பேரணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறையினர்க்கு நன்றி“ என்று கூறி முடித்தார்.

இந்தப் பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஐயப்ப பக்தர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.