Tamil News
Home செய்திகள் கீழடி அகழாய்வு ஆறாம் கட்டப்பணி நிறைவடைந்து ஆவணப்படுத்தல் தொடங்குகின்றது

கீழடி அகழாய்வு ஆறாம் கட்டப்பணி நிறைவடைந்து ஆவணப்படுத்தல் தொடங்குகின்றது

கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடையவுள்ளதுடன், அங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 40 இலட்சம் ரூபா செலவில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா பரவலையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் இடைநிறுத்தப்பட்ட பணிகள், மீண்டும் மே மாத இறுதியில் ஆரம்பமாகின.

இதேவேளை இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதுடன், கீழடியில் 18 குழிகளும், கொந்தகையில் 7 குழிகளும், மணலூரில் 5 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயங்கள், உறைகிணறு, உலைகலன், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், கறுப்பு, சிவப்பு பானைகள், இணைப்புக் குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்கள், பொருட்கள் குறித்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த இடங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version