‘கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான்

தமிழ் தேசிய போராட்டத்தில் இழப்புகள் என்பது எண்ணிலடங்காது. கடந்த 35வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். வடகிழக்கு இந்த இழப்புகளில் மீள்வதற்கான வழிவகைகள் இன்றி இன்றும் தடுமாறி வருவதை நாங்கள் உணர முடிகின்றது.

இந்த இழப்புகளில் அதிகமான இழப்புகளை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், சிங்களவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறையிலும் தமிழர்கள் பல இழப்புகளை எதிர்கொண்டனர்.

கிழக்கு மாகாணம் என்பது, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம். இன்று இலங்கையில் ஆதிக்குடிகளாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான பல ஆதாரங்கள் வெளிப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணம் முற்றுமுழுதான தமிழர்களின் ஆளுகைக்குள் இருந்த மாகாணமாக இருந்தபோதும், இன்று தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியான மாகாணமாக இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் பாரம்பரிய பூமியான கிழக்கு மாகாணத்தினை நன்கு திட்டமிட்ட வகையில் காலங்காலமாக அபகரிப்பதற்கு சிங்கள,முஸ்லிம்கள் எதற்காக இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றார்கள் என்பதை தமிழர்கள் சரியாக கவனிக்கத் தவறி விட்டனர் என்பதே உண்மையாகும். இதன் காரணமாகவே இன்று தமிழர் நிலங்களின் பெரும்பகுதிகள் அபகரிக்கப்பட்டு விட்டன. இதுவரைக்கும் தமிழர்கள் தங்களது பகுதிகளை பாதுகாப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்த அபகரிப்புகள் எதற்காக முன்னெடுக்கப்பட்டன, அவற்றினை தடுப்பதற்காக நாங்கள் என்ன நடவடிக்கைகள் முன்னெடுத்தோம் என்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் என்பது கடல்வளம் ஒரு பகுதியாகவும், நீர்வளங்கள் கொண்ட குளங்களை ஒரு பகுதியாகவும்; நிலங்கள், காடுகள் என அனைத்து வளங்களைக் கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தினை தமிழர்கள் வளமிக்க ஆட்சியை நடாத்தக் கூடியதாகயிருந்தது. அதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை கண்டியை ஆட்சி செய்த பல மன்னர்கள் தங்களது ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இந்த நாட்டுக்கு வந்த வெள்ளைக்காரர்களும் கிழக்கினை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்து, ஆட்சி செய்துள்ளனர்.

இத்தனை வளங்கள் கொண்ட கிழக்கு மாகாணத்தின் எஞ்சியுள்ள தமிழர்களின் நிலங்களையும் தமிழர்கள் பாதுகாக்க தவறினால், எதிர்காலத்தில் தமிழர்கள் அடையாளமிழந்த நிலையில் செல்வது மட்டுமன்றி எதிர்கால சமூகம் வெறும் அடையாளத்தினை தொலைத்த வறுமையில் உள்ள சமூகமாக மாறும் நிலையுருவாகும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாகவுள்ள பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே காணப்படுகின்றது. திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வளமிக்க காணிகள், வளமிக்க பகுதிகள் சிங்கள-முஸ்லிம்களினால் அபகரிக்கப்பட்டு விட்டன. இன்று ஓரு சில ஆலயங்களுக்கு மன்னர்களினால் பட்டயம் வழங்கப்பட்ட காணிகளே மீதமாகவுள்ளன. தமிழர்களின் இருப்பாக இருந்த காணிகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட வகையில் அபகரிக்கப்பட்டு விட்டன.

நாங்கள் எமது வளங்களையும், எமது காணிகளையும் முறையாக பயன்படுத்தப்படாது விட்டமையாலேயே எமது வளங்களை ஏனைய சமூகங்கள் இலகுவில் அபகரிக்க முடிந்தது. தமிழர்கள் தங்களது வளங்களை முறையாக பேணாத காரணத்தினாலேயே இவ்வாறான நிலையேற்பட்டது. யுத்தத்தினை ஒரு காரணமாக கொண்டாலும், யுத்ததிற்கு பின்னரான காலத்தில் எமது வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கையெடுத்தோம் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இன்று இந்தியாவும், சீனாவும் திருகோணமலையில் காணிகளை கோருகின்றது என்றால், அவர்கள் பெருமளவான பணத்தினை இங்கு கொண்டுவந்து வீணாக்க அவ்வாறு கோரவில்லை. அவர்களுக்கு தெரியும் இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தமது நாட்டுக்கு கொண்டுசெல்ல முடியும் என்று; ஆனால் அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்த நாங்கள் அது தொடர்பில் சிந்திக்க தவறும் நிலையே காணப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் வளங்களை இழந்து கிழக்கு மாகாணத்தினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் கொழும்பில் அடுக்குமாடி வீடுகளையும், சொத்துகளையும் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தினை கிழக்கில் முதலிடுவதில் காட்டுவதில்லையென்ற கவலை நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இன்று கிழக்கு மாகாணத்தில் பணம் படைத்த சிங்களவர்களும், முஸ்லிம்களில் உள்ள பணம் படைத்தவர்களும் தமது பணத்தினைக் கொண்டு காணிகளை கொள்வனவு செய்து, தொழிற்சாலைகளையும் சுற்றுலா விடுதிகளையும் அமைக்கும் நிலையினை மாற்றுவதற்கு எந்த தமிழரும் முயற்சிக்கவில்லையென்ற கவலை நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் அறுவடை செய்யும் நெல்லும், பெறப்படும் பாலும் தெற்கிற்கும் முஸ்லிம்களிடமும் செல்கின்றது. அதன் காரணமாக அவர்கள் தனவந்தர்களாகி காலப்போக்கில் தமிழர்களின் விவசாய நிலங்களையும் சொத்துகளையும் தங்கள் வசமாக்கும் நிலையே இருந்து வருகின்றது. விவசாயிகளின் கஸ்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்களது கைங்கரியத்தினை மிகவும் சூட்சுமமான முறையில் செயற்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினை எதிர்வரும் காலங்களில் பாதுகாத்து எஞ்சியுள்ள தமிழர்களின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க வேண்டுமானால், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவான முதலீடுகளை செய்ய வேண்டும். வடக்கில் இன்று அதிகளவான தமிழர்கள் பல்வேறு முதலீடுகளை முன்னெடுத்துள்ள நிலையிலும் கிழக்கில் அந்த நிலை மிகவும் குறைவானதாகவே உள்ளது.

இன்று பல வளங்கள் தமிழர்களிடம் உள்ளது. அவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் வறுமையினை நீக்க முடியும். வேலைவாய்ப்பினை ஏற்படுத்த முடியும், தமிழர்களின் இருப்பினை பாதுகாக்க முடியும். எதிர்வரும் காலங்களில் அவற்றினை தமிழர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்றும் கிழக்கு தமிழர்கள் உள்ளார்கள்.