Home நேர்காணல்கள் கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் உயிரோட்டமாக இருந்து வருகின்றது – மட்டு.நகரான்

கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் உயிரோட்டமாக இருந்து வருகின்றது – மட்டு.நகரான்

கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் என்பது உயிரோட்டமாக இங்கு இருந்து வருகின்றது. அதனை  உடைத்து பேரினவாதம் கிழக்கில் ஊன்றுவதற்கான பல திரை மறைவு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தலைமைகளைக் கொலை செய்தல், பிரதேசவாதத்தினை விதைத்தல்,பதவி பண அரசியலை ஊக்குவித்தல், தேர்தல் மோசடிகள் செய்தல் இவ்வாறான சூழ்ச்சிகள் மூலமாக பேரினவாதம் பிரதேசவாதத்துடன் இணைந்து கிழக்கைக்கைப் பற்ற நினைப்பதுடன், தமிழ்த்தேசியவாத அரசியல்லை கிழக்கில் அழிக்க நினைக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து srinehsan கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் உயிரோட்டமாக இருந்து வருகின்றது - மட்டு.நகரான் தெரிவித்தார்.

‘இலக்கு’வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம்:-

கிழக்கின் அரசியல் சூழலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?                            

கிழக்கு மாகாணம் மூவின மக்களுடன் தொடர்புபட்டது. எனவே,இனத்துவம், இனவாதம் பிரதிபலிக்கப்பட்டு வருவது உண்மை.  ஆனால், தமிழ்த்தேசியவாதம் என்பது உயிரோட்டமாகவும் இங்கு இருந்து வருகின்றது. அதனை  உடைத்து பேரினவாதம் கிழக்கில் ஊன்றுவதற்கான பல திரை மறைவு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

அந்த வகையில் தமிழ்த் தேசியத்தலைமைகளைக் கொலை செய்தல், பிரதேசவாதத்தினை விதைத்தல்,பதவி பண அரசியலை ஊக்குவித்தல்,புவனாய்வாளர்களால் குழப்புதல்,தேர்தல் மோசடிகள் செய்தல் இவ்வாறான சூழ்ச்சிகள் மூலமாக பேரினவாதம் பிரதேசவாதத்துடன் இணைந்து கிழக்கைக் கைப்பற்ற நினைப்பதுடன், தமிழத்தேசியவாத அரசியலை கிழக்கில் அழிக்க நினைக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல் 2019 இல்,கோத்தா வென்றவுடன், பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கை, அரசியல் ரீதியாகக் கைப்பற்றுவதற்கு பல மலினமான மோசமான சூழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனால்,மொட்டானது கிழக்கில் தற்காலிக வெற்றியையும் அடைந்தது.கிழக்கில்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குக் கிடைக்க வேண்டிய 2 அல்லது 3 ஆசனங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஆனால்,மொட்டுக் கட்சி வியாழேந்திரன், படகுக்கட்சி சந்திரகாந்தன், மொட்டுத் தோழர் கருணா போன்றவர்களால் தேர்தலின் போது கூறப்பட்ட சிறுவாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.தா ம்  வென்றால் 3 நாட்களுக்குள் கல்முனை வடக்குப்பிரதேச செயலகப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கிழக்கின் இருப்புவாதிகள் கூறினர்.

ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன.எதுவும் நடக்கவில்லை. சாதாரண  மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினை கூட இராசாங்க அமைச்சர்கள் இருவரால் தீர்க்க முடியவில்லை.
பேரினவாத ஒட்டுக்குழு இணக்க அரசியல் கிழக்கை ஆக்கிரமிப்பதற்கு அனுமதி அளிப்பதாக அமைந்துள்ளது.பேரினவாதத்திற்கு அடிவருடும் பிரதேசவாதிகள் பணத்தையும் பதவிகளையும் மட்டுமே அனுபவிக்கின்றனர்.

எனவே,தமிழ் மக்கள் கிழக்கில் இதனை அறிவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே இனிவரும் காலத்தில் மோசடித்தேர்தல் தவிர்க்கப்படுமிடத்து, பேரினவாதமும், தோழமையான பிரதேச வாதமும் தோல்வியடைந்து விடும்.

தற்போதைய தமிழ் தேசிய அரசியல் போக்கு எதிர்காலத்தில் தமிழர்களின் தீர்வுத்திட்டத்தில் எவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்தும்? இந்த அரசியல் போக்கில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்?           

சிங்கள பௌத்த பேரின அடிப்படைவாதம் 76 ஆண்டுகளாக  இந்நாட்டை ஆட்சி செய்கின்றது. அந்த அதிகார வர்க்கம் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்க விரும்பவில்லை என்பதுதான் வரலாறு. அந்த அடிப்படைவாதம் தமது சுயநல தேவைக்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை.  விடுதலைப்புலிகள் மௌனித்த பின்னரும் புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றார்கள் என்று சிங்கள சமூகத்தினை பயங்காட்டி ஆட்சி செய்ய விரும்புகின்றது. இந்நிலையில், உள்நாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதே வரலாறாக உள்ளது.

எனவே,தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் அரசியல்வாதிகள் தீர்வு விடயத்தில் ஒன்றிணைந்து தமது தீர்வினை வடக்கு கிழக்கு மக்களாணை மூலமாகப் பெற்று அதனை சர்வதேச நாடுகள் சர்வதேச அமைப்புகள் மூலமாகப் பெறுவதே ஒரே வழியாகவுள்ளது. அதற்காகப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதும் முதல்வழியாக அமையலாம்.ஆனால் வேட்பாளர் பொருத்தமானவராக அமைய வேண்டும்.

தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளை ஒரு புள்ளிக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு தமிழ்ப்புத்திஜீவிகளின் கையிலும் உள்ளது. மூத்த தலைவர்களின் கைகளிலும் உள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகளிலுள்ள முரண்நிலை வாதிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்த்தேசியக்கட்சிகள் கொள்கை அளவில் இணையும் போது கிழக்கில் பாதிப்பு ஏற்படாது. பேரினவாதிகளுடன் ஒட்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகள், பிரதேசவாதிகள் தமிழர்களுக்கு ஆபத்தானவர்கள் என்பதைத் தமிழர்கள் புரிய வேண்டும்.

பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து தமிழ் தேசிய அரசியலில் பேசப்படும் விடயங்களில் பின்புலமாக மகிந்த குடும்பம் உள்ளது என்ற கருத்தினை நீங்கள் எவ்வாறு
பார்க்கின்றீர்கள்?

மகிந்த தரப்பு தமது  தரப்பில வேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற விடயத்திலே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டைப் பொருளாதார ரீதியில் வங்குரோத்துக்குத் தள்ளிய ராஜபக்சக்கள் அரசியலிலும் வங்குரோத்து அடைந்து விட்டனர். அவர்களிடம் இருந்து பலர் வேறு கட்சிகளுக்குத் பலர் தாவுகின்றனர். இந்நிலையில் தற்காப்பு அரசியலுக்கே திண்டாடும் மகிந்த தரப்பு, தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றிச் சிந்திக்க வாய்ப்புக்குறைவு அல்லது இல்லை.

கடந்த காலத்தில்  தமிழர் ஒருவர் அவ்வாறு நிறுத்தப்பட்டதாக ஸதமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொது வேட்பாளருக்கு எதிரான தனது வாதத்தினை வலியுத்தவே இப்படியான கருத்தினை முன்வைத்துள்ளதாக நான் கருதுகின்றேன்.

பொது வேட்பாளர் தொடர்பில் தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்று கருதுகின்றீர்கள்?      

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக பேரினவாதத் தலைவர்கள் தமிழர்களை ஏமாற்றியுள்ளார்கள். அறவழி,ஆயுத வழி, இராஜதந்திர வழி அனைத்தும் உள்நாட்டில் பேரினவாதிகளிடம் பலிதமாகவில்லை.

தற்போது போட்டியிடவுள்ள ஜனாதித்தேர்தலுக்கான வேட்பாளர்களும் தமிழர்களுக்கான தீர்வினை முன்வைக்கவில்லை. இப்படியிருக்கும் போது சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் வாய்ப்பினை இழக்கும் நிலையில் உள்ளனர்.

எனவேதான் தமிழர்களின் நியாயமான கோரிக்கையினை முன்வைத்து வடக்கு கிழக்கில், மக்களாணையினைப்பெறுவதற்கு தமிழ்ப் பொது வேட்டாளரை நிறுத்த வேண்டிய நிலையினை சிங்கள வேட்பாளர்கள் தோற்றுவித்துள்ளனர். சிங்கள வேட்பாளர்கள் இனியாவது தமிழர்களுக்கான நியாயமான தீர்வினை எழுத்து மூலமாகத் தயாரித்து தமிழர்களின் ஒப்புதலைப் பெற்றால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தாமல் விடுவது பற்றிச் சிந்திக்கலாம்.

தற்போது அன்னை பூபதியின் நினைவு அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.அவரது தியாகத்தினை கிழக்கு மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?                          

அன்னைபூபதி அம்மா தமிழர் உரிமை சார்ந்து அவர்களின் நியாயமான போராட்டத்தினை ஏற்றுக் கொண்டு அறவழியில் உண்ணா  நோன்பு இருந்து தன்னுயிரைத் தியாகம் செய்தார்.அவரது தியாகத்தை கிழக்கு மக்கள் மட்டும் அல்லாமல், ஈழத்திலுள்ள தமிழர்கள்,புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள், தமிழக உறவுகள் அனைவரும் மானசீகமாக மதிக்கின்றனர். துதிக்கின்றனர். அன்னையின் தியாகம் தமிழரின் விடுதலை வேட்கைக்கான அணையாத விடுதலைத் தீபமாகும்.

அவரது தியாகத்தினை தமிழ் தேசிய அரசியல் சரியாக கடைப்பிடிக்கின்றதா?

அன்னை பூபதி அவர்களின் தியாகத்தினை தமிழ்த்தேசியவாதிகள் மதித்தே ஆக வேண்டும். அவர்கள் மதித்தும் வருகின்றார்கள். அவ்வாறு மதிக்கின்றவர்கள் அன்னாரது தியாகத்தினை தமிழ்த் தேசியவாதிகளாக இருந்து கடைப்பிடிக்கிறனர்.  ஆனால்,கிழக்குப் பிரதேசவாதக் கும்பல் அன்னை பூபதி அவர்களின் தியாகத்தினை பேரினவாதிகளின் தேவைக்காக மதிக்கவில்லை. அவர்கள் பேரினவாதிகளின் கைப்பொம்மைகளாக மாறியதால் அன்னை பூபதியாரை மறந்து விட்டனர்.

இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நீங்குவதற்கான சாத்தியமான வழிகள் உள்ளதா?

தன் முனைப்புச் சிந்தனையில் (நுபழ) இருந்தும், தன்னிச்சையான செயற்பாடுகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டு,கட்சியின் கொள்கை கோட்பாட்டுக்கமைய தமிழ் மக்களின் நலன் கருதி, தமிழ்த்தேசியத்திற்காக உழைக்க முற்பட்டால், தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி தீர வாய்ப்புள்ளது.
அவர் விடாக்கண்டனாக மாறினால்,அதற்கான பதிலை மக்கள் தேர்தலின் போது அளிப்பர். சுயநலன்களை விடவும் தமிழர்களின் பொதுநலன் முக்கியமானது என்று அம்மனிதன் உணர வேண்டும்.

அதற்கான முன்னெடுப்புகள் ஏதும் செய்யப்படுகின்றதா?    

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. தனிநபர் பிடிவாதம், தன் முனைப்பான போக்கு நீங்கி கட்சி நலன், தமிழர் நலன் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் போது முன்னெடுப்புகள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கொழும்புச் சிந்தனையை விட வடக்கு கிழக்கு மக்களின் வலிகள், உணர்வுகள், உரிமைகள் சார்ந்து சிந்தித்தால் நெருக்கடிகள் தீரும்.

Exit mobile version