Tamil News
Home செய்திகள் ‘கினிமினி’ கூலிப்படை இலங்கையில் போர்க் குற்றம் புரிந்ததா? ஆவணங்களை வழங்க மறுக்கும் பிரிட்டன்

‘கினிமினி’ கூலிப்படை இலங்கையில் போர்க் குற்றம் புரிந்ததா? ஆவணங்களை வழங்க மறுக்கும் பிரிட்டன்

இலங்கை இராணுவத்தினரிற்கு ஆதரவாக 1980களில் செயற்பட்ட கூலிப்படையினருக்கு பிரிட்டன் இராஜதந்திர உதவிகளை வழங்கியமை குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு மறுத்து வருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கூலிப்படையினர் யுத்த குற்றங்கள் உட்பட பல வகை குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைனகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் வெளிவிவகார அமைச்சு அவர்களிற்கு அவசியமான ஆவணங்களை வழங்க மறுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.

இலங்கைகையில் கினிமினி கூலிப்படையினரின் நடவடிக்கை குறித்த விபரங்களை -வெளியிடுமாறு புலனாய்வு செய்தியாளர் பில் மில்லர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினரிற்கு கினிமினி கூலிப்படை பயிற்சிகளை வழங்குவதற்காக, பிரிட்டன் அவர்களுக்கு வழங்கிய இராஜதந்திர உதவிகள் குறித்த விபரங்களையே மில்லர் கோரியுள்ளார்.

கினிமினி யுத்தகுற்றங்களை இழைத்ததா என்ற அடிப்படையில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தற்போது முழுமையான விசாரணைகளாக மாறியுள்ளன.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரிட்டனின் ஈடுபாடுகள் குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளதுடன் வீடியோவையும் வெளியிட்டுள்ள மில்லர் தான் தகவல்களை அறிவதற்கும் கோப்புகளை பெறுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் போது பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கினிமினியின் நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தினை சென்றடைவதை ஏன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு விரும்பவில்லை என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திர ஆவணங்களை 20 வருடங்களுக்கு பின்னர் பகிரங்கப்படுத்தவேண்டும் என்பதே அரசாங்க விதிமுறை என தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட கோப்புகள் இலங்கை படையினருக்கு கினிமினி பயிற்சி வழங்குவதற்கு பிரிட்டன் வழங்கிய உதவிகள் குறித்தவை என கார்டியன் தெரிவித்துள்ளது.

Exit mobile version