காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் – தமிழில்: ஜெயந்திரன்

காஸாப் பிரதேசத்தில் போர் நிறுத்தம்  தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பயப்பீதி, நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை, உயிர் பிழைத்தல் போன்ற விடயங்களைக் கூறும் பல்வேறு கதைகள் முற்றுகையிடப்பட்ட இந்தப் பிரதேசத்தில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 காஸாப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது என்றுமில்லாத வகையில் பதினொரு நாட்கள் தொடர்ச்சியாக இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களின் காரணமாக, தாங்கள் இறக்கப் போகின்றோம் என்று நினைத்த பொது மக்கள் பலர்  தமது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் தமது இறுதிச் செய்தியைப் பகிரத் தொடங்கினார்கள்.

பதினேழு வயது நிரம்பிய இப்ராஹீம் அல்-ராலா (Ibrahim al-Talaa) காஸா ஓடையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள முகாஸி (Mughazi) முகாமில் வசித்து வருகிறார். குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் முகநூல் வழியாக இறுதிச் செய்தியைப் பகிர்ந்து கொண்டவர்களில் இவரும் ஒருவர்.

தனது இல்லத்தை அண்டிய பகுதிகளில் இஸ்ரேலின் போர் விமானங்கள் மிகக் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்ட மோசமான ஒரு நாள் பற்றி அவர் எங்களுக்கு எடுத்துக் கூறினார். தனக்கும் தன்னைச் சுற்றியிருந்த தனது உறவுகளுக்கும் அது தான் கடைசி நேரம் என்று தான் உணர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

“கடந்த மூன்று போர்களிலும் செய்ததைப் போன்று எந்த விதமான முன்னெச்சரிக்கையையும் கொடுக்காது, 40 ஏவுகணைகளைப் பயன்படுத்தி எங்கள் பிரதேசத்தில் இருக்கின்ற பல இடங்களைத் தொடர்ச்சியாக இஸ்ரேல் குண்டு வீசித் தாக்கியது. விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பவற்றின் சத்தம் எவ்வளவு மோசமாக இருந்ததென்றால் அதனை விபரிப்பதே எனக்குக் கடினமாக இருக்கிறது”  என்று இப்ராஹிம் கூறினார்.

“குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மிகக் கடுமையான விதத்திலும் எமக்கு அண்மையாகவும் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் எங்கள் வீடு அதிகமாக அதிர்ந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் வீடு இடிந்து எங்கள் மேல் விழுந்து விடப் போகின்றது என்று கூட நாங்கள் பயப்பட்டோம். ஒரு கட்டத்தில் இவற்றை மேலும் தாங்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. அக்கணம் பெரிய சத்தமாக அழவேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால் எனது குடும்பத்தவர்களுக்குத் தைரியத்தைக் கொடுப்பதற்காக நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். பதின்மூன்று வயது நிரம்பிய எனது தங்கை சத்தம் போடாமலே தனக்குள் அழுது கொண்டிருப்பதை அவ்வேளையில் நான் அவதானித்தேன். அவளுக்குத் தைரியமூட்டுவதற்காக சிறிது நேரம் அவளை அணைத்து வைத்திருந்தேன். நானே பயந்திருந்தும் கூட அவளது பயத்தைத் குறைப்பதற்காக ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தேன்.”

இறந்தால் எல்லோரும் ஒன்றாகவே இறப்போம்

Gaza 3 காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் - தமிழில்: ஜெயந்திரன்

இறுதியாகப் பெறப்பட்ட புள்ளி விபரங்களின் படி, 66 சிறுபிள்ளைகள் உட்பட 248 பாலஸ்தீனர்கள் இத்தாக்குதலில் இறந்திருக்கிறார்கள். அதே வேளையில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆட்டிலறி எறிகணை வீச்சுக்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக 1900 பேர் காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். காஸாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கெட்டுகளின் காரணமாக இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் இஸ்ரேலில் இறந்திருக்கிறார்கள்.

காஸாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் இஸ்ரேலினால் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, உயிர் பிழைத்தால் ஒன்றாக உயிர் பிழைப்போம் அல்லது இறந்தால் ஒன்றாகவே இறப்போம் என்ற எண்ணத்துடன் பெற்றோர், நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் என்று இப்ராஹீமின் குடும்பத்தவர் அனைவரும் ஒரு அறையில் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.

இஸ்ரேலின் ஜெட் விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்த போது, அல்-ராலா குடும்பம் தங்களது இறுதிப் பிரியாவிடைச் செய்திகளைப் பகிரத் தொடங்கியது.

“படிப்படியாக குண்டு வீச்சுத் தாக்குதல்கள் எமக்கு மிகவும் நெருக்கமாக வரத் தொடங்கியதோடு நோயாளர் காவு வண்டிகள் வருகின்ற சத்தமும் கேட்கத் தொடங்கிய போது, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நாங்கள் எல்லோரும் இறக்கப் போகிறோம் எண்ணத்தில் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டித் தழுவினோம்.”

அதற்குப் பிறகு இந்த இளைஞன் தனது முகநூலில் ஒரு இறுதிச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அந்தச் செய்தியைப் பதிவேற்றம் செய்த போது, “நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிவதற்காக எனது நண்பன் எனக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி என்னோடு உரையாடினான். அவனை எவ்வளவு அதிகமாக நான் அன்பு செய்கிறேன் என்று அந்த நேரத்தில் அவனுக்கு நான் தெரிவித்துக் கொண்டேன்.”

“காஸாவில் வாழுகின்ற ஒரு பாலஸ்தீனப் பிரஜை என்ற வகையில, பாதுகாப்பாக வாழ்வதற்கு எனக்கு இருக்கின்ற எனது உரிமை எனக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்ற அல்லது அவர்களோடு இயல்பான உறவைக் கொண்டுள்ளவர்கள் அல்லது இவைபற்றி எதுவும் பேசாது அமைதி காக்கின்ற எந்த மனிதரையோ அல்லது எந்த அதிபரையோ நான் மன்னிக்கப் போவதில்லை என்ற எனது செய்தியைப் பரப்பும் படி எனது நண்பனை அவ்வேளையில் நான் கேட்டுக் கொண்டேன்.”

உயிரைக் காக்க அவசர அவசரமாக வெளியேறினோம்

இருபத்தைந்து வயது நிரம்பிய றீம் ஹானி (Reem Hani) தனது பெற்றோரோடும் ஐந்து சகோதரங்களோடும் சுஜாஈயாப் பகுதியில் (Shuja’iyya) வசித்து வருகிறார். அவர்களது இல்லத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்ற காஸா நகரத்தின் கிழக்கு எல்லையைக் குறிவைத்து 14ம் திகதி இஸ்ரேல் இராணுவம் எறிகணைகளை வீசத் தொடங்கியது.

gaza 1 காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் - தமிழில்: ஜெயந்திரன்

“நான்கு மணித்தியாலங்களுக்குப் பின்னர், எறிகணைகள் மிகக் கடுமையாகவும் எமக்கு அண்மையிலும் அதே நேரத்தில் எல்லாத்திசைகளிலும் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின என்று அவர் அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார். அக்கணத்தில் உடனே ஓடிப்போய் மகிழுந்துக்குள் ஏறுமாறு எனது அண்ணா எங்களைப் பார்த்துக் கத்தினார். எங்கள் ஆவணங்கள் உட்பட எமது உடைமைகளை ஒரு பையில் நாங்கள் எடுத்துக் கொண்டுவந்தோம்.”

இஸ்ரேல் 2014ம் ஆண்டிலும் ஜெட் விமானங்களாலும் தாங்கிகளாலும் சுஜாஈயாப் (Shuja’iyya)  பிரதேசத்தைத் தாக்கி, அங்குள்ள அதிகமான வீடுகளைத் தரைமட்டமாக்கி இருந்தது. பாதுகாப்புக்காக தமது தந்தையின் மகிழுந்தில் வீட்டை விட்டுத் தப்பியோடிய போது, ஆறு வருடங்களுக்கு முன்னர் தான் கண்ட அதே காட்சியைத் தான், றீமாவால் இம்முறையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. வெறுங் காலுடனும் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் காஸா ஓடையின் மேற்குப் பகுதியை நாடி ஓடிக் கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

Gaza 2 காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் - தமிழில்: ஜெயந்திரன்

ஏனையோர் உந்துருளிகள், டாக்ஸிகள், கழுதைகள் என்பவற்றின் உதவியோடு தமது வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

“கடைசியாக 2014ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உயிர் தப்பியிருந்தோம், ஆனால் நாங்கள் மகிழுந்தில் இருந்த வேளையில் எங்களைச் சுற்றிவர கிட்டத்தட்ட 50 தாக்குதல்கள் வரை நடத்தப்பட்டதன் காரணத்தால் இம்முறையும் உயிர்தப்புவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கண்ணீர் விட்டு அழுது கொண்டும், நாம் போய்ச்சேர வேண்டிய இடத்தை அடைய முன்னரே இறந்து விடுவேன் என்று பயந்து கொண்டும் இருந்த நான், எனது தம்பிமாரை என்னோடு கட்டியணைத்து வைத்திருந்தேன்” என்று றீம் கூறினார்.

“நான் இறந்த பின்னர் என்னை மறந்து விடாமல் எனக்காக இறைவனை வேண்டுங்கள் என்று எனது நெருங்கிய நண்பர்களுக்கு எனது இறுதிச் செய்தியை நானும் அனுப்பியிருந்தேன்.”

நாங்கள் எல்லோருமே குறிவைக்கப்பட்டோம்

Gaza 5 காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் - தமிழில்: ஜெயந்திரன்

அல்-சேய்த்தூண் (al-Zaytoun) பகுதியைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய மாஹா சாஹெர் (Maha Saher) நாலு வயதான சாரா, ஐந்து மாதங்கள் நிரம்பிய றாமா ஆகிய இரு பெண்பிள்ளைகளினதும் தாய். அவரது கணவர் ஊடகங்களுக்கு ஒளிப்படங்கள் எடுப்பவர் என்ற வகையில் தாக்குதல்கள் தொடங்கிய நேரத்தில் தனது வேலையைச் செய்வதற்காக அவர் குடும்பத்தை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது.

“எனது கணவர் இல்லாதவிடத்து, இந்தக் கொடூரமான போரின் போது எந்தவொரு சிறு தீங்கும் எனது குழந்தைகளுக்கு நேராமல் காப்பது முற்று முழுதாக என்னிலேயே தங்கியிருந்தது.”

 “தனது ஒளிப்படங்கள் மூலமாக நடைபெறுகின்ற உண்மைகளை மேற்குலகத்துக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் எனது கணவரை நினைந்தும் எனது இரு பெண் பிள்ளைகளை நினைந்தும் நான் மிகவும் பயப்படுகிறேன். ஏனென்றால் –  சிறுபிள்ளைகள், பெண்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் என்று பொது மக்களாகிய நாங்கள் எல்லோருமே குறிவைக்கப்பட்டிருக்கிறோம்”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 “கடந்த ஞாயிற்றுக்கிழமை, அல் வேஹ்டா (al-Wehda) வீதியில் அமைந்திருந்த மூன்று வீடுகளை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கி அழித்திருந்தன. அதிமாகப் பெண்களையும் சிறுவர்களையும் உள்ளடக்கிய 42 பொதுமக்கள், இத்தாக்குதலின் காரணமாக இடிபாடுகளுக்குள் அகப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அதன் பின்னர் நோயாளர் காவு வண்டிகளும் தீயணைப்பு வண்டிகளும் அழிக்கப்பட்ட கட்டடங்களையும் காயப்பட்ட பொது மக்களையும் நெருங்குவதைத் தடுப்பதற்காக அங்கேயிருந்த வீதியும் தாக்கி அழிக்கப்பட்டிருந்தது” என்று மாஹா மேலும் கூறினார்.

“அல்-வேஹ்டாப் படுகொலையில் மேற்கொள்ளப்பட்டது போல நாங்கள் தூக்கத்தில் இருக்கும் போதே எமது வீடு அமைந்திருந்த கட்டடத்தை அவர்கள் குறிவைப்பார்கள் என்று நான் பயந்தேன். சாவதற்கு எனக்குப் பயமில்லை. ஆனால் எனது பிள்ளைகளை இழப்பதையோ அல்லது எனது பிள்ளைகள் தனது தாயை இழப்பதையோ நினைத்து நான் பயப்படுகிறேன். தனது பிள்ளைகளைக் கவனமாகப் பார்ப்பதற்காக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நாட்களில் இரவு பூராகவும் தான் விழித்திருந்தாகவும் தினமும் சூரிய உதயத்துக்குப் பின்னர் 30 நிமிடங்கள் மட்டும் தூங்கியதாகவும் அவர் தெரிவித்தார். தாக்குதல்கள் மிகவும் கடுமையாக மேற்கொள்ளப்பட்ட நேரங்களில் அவரது மகள் சாரா தனது தந்தையை வீடு திரும்புமாறு கேட்டு கட்டுப்படுத்த முடியாதவாறு அழுது கொண்டிருந்தாள்.”

“நான் எனது கணவரை அலைபேசியில் அழைத்து, எனது கணவரை அவளுடன் கதைக்கச் செய்தேன். தனது தந்தை இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் வீட்டுக்குத் திரும்பி வந்து தன்னோடு விளையாடும் படியும் அவள் அவருக்குச் சொன்னாள். அவராலே அவளுக்கு எந்தவிதமான பதிலும் சொல்ல முடியவில்லை. அமைதி மட்டுமே அவரது பதிலாக இருந்தது.”

ஆண்டவனின் இரக்கத்தினால் மாஹாவும் அவளது குடும்பமும் உயிர் பிழைத்தது என்றும் ஆளில்லா விமானத்தாக்குதலின் காரணமாக ஏற்கனவே தனது வீட்டை இழந்துவிட்ட தங்களது மாமனாருடன் ஒரு வாடகை வீட்டில் அவர்கள் தற்போது தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

நன்றி: அல்ஜசீரா