கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu)  கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழீழம் மற்றும் திபெத் நாடுகளிலிருந்து வந்த பெரும்தொகையான அகதிகள் தமிழ்நாட்டில் அகதிகளாகவே வாழ்கிறார்கள். இருந்தும் ஈழத்தமிழ் அகதிகளே தமிழ்நாட்டின் அகதிகள் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் பேசப்படுகிறார்கள். இவர்களில் பலர் சந்ததிகளாகவே தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்கிறார்கள். ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலேயே செறிவாக இருந்தாலும் கேரளா போன்ற இந்திய நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளிலும் சிறிய தொகையாக உள்ளார்கள்.

ஈழத்தமிழ் அகதிகளை, தனித்து வாழும் அகதிகள், திறந்த முகாம் அகதிகள் மற்றும் சிறப்பு முகாம் அகதிகள் என்று மூன்று வகையினராக பார்க்கிறார்கள். தனித்து வாழும் அகதிகள் தமது சொந்த செலவில் வாடகை இடங்களில் வாழ்கிறார்கள். இவர்களைப் பற்றி ஆர்வலர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் அதிகம் பேசுவதில்லை. திறந்த முகாம்களில் வாழும் அகதிகள் தமிழ்நாடெங்கும் பரவியிருக்கும் ஏறக்குறைய நூறு முகாம்களில் வாழ்கிறார்கள். இத்திறந்த முகாம்களின் போதாக்குறைகள் பற்றியும் ஏனைய மோசமான நிலைமைகள் பற்றியும் ஓரளவு பேசப்படுகிறது. மிகவும் மோசமான ஆனால் அதிகம் பேசப்படாதவையாக உள்ளன சிறப்பு முகாம்கள். இக்கட்டுரை இச்சிறப்பு முகாம்களை பற்றியே பேசுகிறது.

அகதிகளும் இந்திய சட்டமும்

ஐநாவின் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. பிரித்தானிவிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இயற்றப்பட்ட, 1946ம் ஆண்டின் வெளிநாட்டவருக்கான இந்திய சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியா அகதிகளையும் கையாளுறது. இதில் வெளிநாட்டவர் இந்தியாவிற்குள் வருவதையும் இங்கு தங்குவதையும் அவர்கள் வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசு விதிகள் போடலாம் என்று சொல்லப்படுகிறது.

The Foreigners Act, 1946 states:

“[t]he Central Government may by order make provision… for prohibiting, regulating or restricting the entry of foreigners into India or their departure therefrom or their presence or continued presence therein” (India 23 Nov. 1946, para. 3), including “requiring him to reside in a particular place” (ibid., 3 (2) (e) (i)), and “imposing any restrictions on his movements” (ibid., 3 (2) (e) (ii)).”

 மேலே கூறப்பட்ட மூன்று வகையான ஈழத்தமிழ் அகதிகளும் இச்சட்டத்தின் கீழேயே கையாளப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எதிராக அவர்கள் மேல் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் வெவ்வேறு அளவில் உள்ளன. சிறப்பு முகாம் அகதிகளே அதிக கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றனர்.

அகதிகளை கட்டுப்படுத்தும் இந்திய சட்டத்தைப்பற்றி தமிழ்நாட்டு வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன் பேசும் போது, “அகதிகளுக்கான விசேட சட்டம் இந்தியாவிடம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைபாடு. அகதிகளுக்கான ஒரு விசேட சட்டமே இதற்கு தீர்வு. 2000ம் ஆண்டு வழக்கறிஞர் பகவதியின் குழு அகதிகளுக்கு தற்காலின குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. ஆனால் அது இன்னமும் கிடப்பிலேயே உள்ளது” என்று விளக்கினார்.

வரலாறு

1983 கறுப்பு யூலாய் அழிவைத் தொடர்ந்தே ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு செல்லத்தொடங்கினார்கள். அக்காலத்தில் இவர்களை தமிழ்நாட்டு மக்களும் அரசும் அரவணைத்து வரவேற்று கல்வியிலும் ஏனைய வழிகளிலும் இவர்களுக்கு சலூகைகள் வழங்கினார்கள். 1987 இலிருந்து மூன்று ஆண்டுகளாக தமிழீழப்பகுதிகளில் இந்தியப்படைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து, 1990 இல் அது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு கிடைத்த அரவணைப்பு தொலைந்துவிட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, திறந்த முகாம் அகதிகளின் மேல் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன. அதே நேரம் தமிழ்நாட்டிலுள்ள வேலூரில், ஈழத்தமிழர்களுக்கான முதலாவது சிறப்பு முகாம் திறக்கப்பட்டது. இது ஈழத்தமிழ் தீவிரவாதிகளுக்கானது என்றே சொல்லப்பட்டது. இக்கட்டுரையின் ஆரம்பபுள்ளியே இதுதான்.

ஈழத்தமிழ் போராட்டக்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், வேலூர் சிறப்பு முகாமுக்கு முதலில் கொண்டுவரப்பட்ட முறையே வரப்போகும் இவ்வராலாற்றின் போக்கை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. வேலூர் சிறப்பு முகாமுக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டவர்கள் வேலை தருவதாக சொல்லி ஏமாற்றியே அங்கு கூட்டி செல்லப்பட்டார்கள்.tamil refugees in tamilnad கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

இவ்வாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தமது சிறைப்படுத்தலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் செய்தார்கள். இதனால் எதுவித பலனும் கிடைக்காத போது, ஆத்திரமடைந்து அவர்கள் அடைக்கப்பட்ட “சிறை வளாகத்தின்” வாயிற்கதவுக்கு தீயூட்டினார்கள். அங்கு வந்த காவல்துறையினர் மேல் கற்களை வீசினார்கள். காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இரண்டு ஈழத்தமிழர்கள் இறந்தார்கள்.

25 ஆண்டுகளாக தொடரும் சிறப்பு முகாம் ஈழத்தமிழர்களின் ஒரு நீண்ட போராட்டம் இங்கேதான் ஆரம்பிக்கிறது. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல சிறப்பு முகாம்களை, செங்கல்பட்டு, பூந்தமல்லி, புதுக்கோட்டை, மேலூர், திருச்சி, திருவையாறு, அத்திப்பட்டி, பழனி என பல இடங்களில் ஆரம்பித்து ஈழத்தமிழ்களை அடைத்து வைத்தது. இப்போது திருச்சியிலுள்ள ஒரு சிறப்பு முகாமை தவிர ஏனையவை எல்லாம் மூடப்பட்டு விட்டன. இங்பகு 21 ஈழத்தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இச்சிறப்பு முகாம் திருச்சி சிறை வளாகத்தினுள்ளேயே இருக்கிறது.

நீதிமன்றமும் சிறப்பு முகாமும்

இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறப்பு முகாம்களை நடத்துவதற்கான அரச வழிமுறைகள் எதுவும் இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றம் 1991 இல் இதற்கான நிர்வாக வழிமுறைகளை முன்மொழிந்தது.

  • சிறப்பு முகாமுக்கு ஒழுங்காக உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு உதவி தாசில்தார் நியமித்தல்.
  • சிறப்பு முகாம்களில் அடைக்கப்படவோர் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்பதற்கு அப்பால், அவர்களின் ஏனைய இயற்கையான உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகாது.
  • இங்கு அடைக்கப்படும் அகதிகள் விரும்பினால் அவர்களின் குடும்பம் அவர்களுடன் தங்குவதை அனுமதிக்க வேண்டும். இதற்கான செலவை அரசு பொறுப்பேற்க வேண்டும்.
  • அகதிகளை சிறிய அறைகளில் அடைத்து வைக்க கூடாது. சிறப்பு முகாம் வளாகத்தில் அவர்கள் சுதந்திரமாக நடமாட விட வேண்டும்.
  • நேர கட்டுபாடுகள் இல்லாமல் இவர்களை பார்க்க வருவோர் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பார்க்க வருவோர் அகதிகளின் சொந்த தேவைக்கான பொருட்களை அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கலம்.
  • சிறப்பு முகாம் வளாகத்திற்கு வெளியே அதை காவல் காப்பதற்கு காவல்துறை நிறுத்தப்படலாம். ஆனால் ஏனைய விவகாரங்கள் யாவும் தாசில்தாரின் கைகளிலேயே இருக்க வேண்டும்.
  • அகதிகள் தங்கள் தாயகத்திற்கு திரும்ப விரும்பினால் அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும். இதற்கான செலவை அரசு பொறுப்பேற்கலாம்.

சிறப்பு முகாம் அகதிகளுக்காக உழைத்த தமிழ்நாட்டு சட்டவாளர்களும் ஏனைய ஆர்வலர்களும் இந்த வழிமுறைகள் தமிழ்நாட்டு அரசால் மதிக்கப்படவில்லை என்கிறார்கள்.

சிறப்பு முகாம் அகதிகளுக்காக நீதிமன்றத்தில் அவர்களின் வழக்குகள் பலவற்றை முன்னெடுத்தவர் தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான சட்டவாளர் புகழேந்தி. ‘உச்ச நீதிமன்றம் வரை எல்லா நீதிமன்றங்களும் சிறப்பு முகாம்கள் வாழிடங்கள் என்றே சாதிக்கின்றன. இருந்தும் இவை அகதிகளின் குடும்பங்களை அவர்களுடன் வாழ அனுமதிப்பதில்லை.

குடும்ப அங்கத்தவர்களும் முகாம் நிர்வாகத்தின் அனுமதி பெற்றே இவர்களை வந்து பார்க்கலாம். இவ்வாறு அனுமதி பெறுவதற்கு ஒரு முழுநாள் நேரம் தேவைப்படும். பின்னரும் குடும்பத்தவர் பிற்பகல் 5 மணிக்கு முகாமை விட்டு வெளியேற வேண்டும். அகதிகளின் சட்டவாளர்களும் இதே முறையில்தான் அகதிகளை சந்திக்கலாம்.”

பூந்தமல்லி சிறப்பு முகாமும் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடைப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு சிறை வளாகம்தான். பூந்தமல்லி சிறப்பு முகாமின் நிலம் சீமெந்தினால் பூசப்பட்டது. இயற்கையான மண் அங்கு கிடையாது. கூரையும் மிகவும் பதிவாக இருக்கும். அங்கு விளையாடுவது என்பது இயலாது. ஈழத்தமிழர்கள் பலர் இங்கு பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்த பல ஆண்டுகளில், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட அகதிகள் பல தடவைகள் தாம் அடைத்து வைத்திருக்கப்பட்ட நிலைமைகளில் மாற்றங்கள் கோரி உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டன. பதிலாக உண்ணாவிரதம் இருந்த காரணத்திற்காக அகதிகள் மேல் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று வழக்குகள் போடப்பட்டது.

இவ்வாறு 50 மேலான வழக்குககள் போடப்பட்டன என்கிறார் புகழேந்தி. சிறப்பு முகாம்களில் அகதிகள் நடத்தப்படும் நிலைமையை எதிர்த்து இவ்வாறு போராடிய அகதிகள் தண்டிக்கப்பட்ட பல சம்பவங்களை புகழேந்தி சுட்டிக்காட்டினார்.ffff கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

பல தடவைகள் சிறப்பு முகாம் அகதிகள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள். அகதி குற்றமற்றவர், அவரை வெளியே விட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், அவர்கள் சிறப்பு முகாம்களில் தொடர்ந்து பல வருடங்களுக்கு அடைத்து வைக்கப்பட்டார்கள். சிறப்பு முகாமில் இப்போது உள்ள 21 அகதிகளில் இருவர் இவ்வாறு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு எட்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் எதுவித குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்ட பாலசந்திரனின் கதை சிறப்பு முகாம் பற்றி மேலே சொன்னவைகளை உறுதி செய்யும் வகையில் உள்ளது. 2015 இல் பாலசந்திரன் இதுபற்றி ஒரு நூல்[1] வெளியிட்டுள்ளார். இவர் 1990ம் ஆண்டு கனடாவில் வாழும் அவருடைய சகோதரனுடன் இணையும் எண்ணத்துடன் சட்டபடபடி இந்தியா வந்தார். கனடாவில் இருந்து விசாவுக்காக ஒரு வருடம் இந்தியாவில் காத்திருந்தார். அப்போ தமிழ்நாட்டு காவல்துறையின் புலனாய்வுபிரிவான கியூபிரிவால் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கான காரணம் அவருக்கு சொல்லப்படவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சராக அப்போதிருந்த கலைஞர் கருணாநிதியின் மேல் பொய்குற்றச்சாட்டுகள் சொல்லும்படி அவர் வற்புறுத்தப்பட்டார்.526963 132436180232886 1103356867 n கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

இதே தமிழ்நாட்டு அரசு அப்போதைய மத்திய அரசால் கலைக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைக்க பாலசந்திரன் மறுத்தார். பாலசந்திரனின் நண்பர் ஆள்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இப்போது பாலசந்திரன் மேல் சில பொய் வழக்குககள் போடப்பட்டன். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறைக்கும் சிறப்பு முகாமுக்குமாக மாறி மாறி விடப்பட்டார். எட்டு ஆண்டுகளின் பின்னர் எதுவித குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்.

நிலைமைகள்

சிறப்பு முகாம் அகதிகள் 1990களிலிருந்து செய்து வந்த போராட்டங்கள் தமிழ்நாட்டின் சில சிறிய பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கின்றன.

1991 இல் வேலூர் முகாமிலிருந்த அகதிகள், கைதிகள் போல தம்மை சிறிய அறைகளில் பூட்டி வைக்க வேண்டாம், தமக்கு போதிய உணவு கொடுக்கப்பட வேண்டும், தங்கள் குடும்பங்களுடன்  வாழ அனுமதி வேண்டும், தம்மை பார்க்க வருவதற்கு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுமதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்கவில்லை.

1994 இல் 40 ஈழத்தமிழ் அகதிகளை கொண்டிருந்த திருச்சி சிறப்பு முகாம் அகதிகள் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடினார்கள் என்று தமிழ்நாட்டு ஊடக செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. 1996 தமிழ்நாடு ஊடக செய்தி ஒன்றில், ஐந்து பெண்களும் ஐந்து சிறுவர்களும் கொண்ட, 30 மேலூர் சிறப்பு முகாம் அகதிகள், அதே போன்ற கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தினார்கள் என்று தெரிவிக்கிறது.

இவர்களும், முகாம் வளாகத்தினுள் தாம் சுதந்திரமாக திரியவும், குடும்பத்துடன் வாழவும், நண்பர்களும் உறவினர்களும் தம்மை வந்து பாரக்கவும் அனுமதி வேண்டும் என்று கேட்டே போராடினார்கள். பெண் அகதிகளை பெண் காவல்துறையினரே பார்க்க வேண்ம் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.

இவர்களுடன் இருந்த சிறுவர்கள் பள்ளிகூடத்திற்கு போகவும் அனுமதியில்லை. இவர்களை சந்திக்க அதிகாரிகள் வராததால், போராட்டக்காரர்கள் தற்கொலை செய்யப்போவதாக சொன்னார்கள். அவர்களில் நால்வர், உடைந்த போத்திலால் தமது கைகளை வெட்டி மயக்கமடைந்தார்கள். அப்போதும் தொடர்பு கொண்டு கேட்ட போது, சிறப்பு முகாம் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யும் முடிவை அரசுதான் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொன்னார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை சிறப்பு முகாம் அகதிகள் இம்மாதிரியான உண்ணாவிரத போராட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாட்டு அரசு எதுவித நடவடிக்கைகளையும் எடுப்பதாக இல்லை.

2015 இல் நடந்த வேறொரு சம்பவத்தில், இரண்டு ஆண்டுகளே திருமணமான ஈழத்தமிழர் மகேஸ்வரன் சிறைப்பிடிக்கப்பட்டா். நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்தது. நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியே வந்த மகேஸ்வரனை தமிழக காவல்துறை பிடித்துச்சென்று சிறப்பு முகாமில் அடைத்தது. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் விரைவில் வெளியே வருவது சாத்தியமில்லையாதலால், மகேஸ்வரனின் மனைவி பிரசாந்தியின் குடும்பம் பிரசாந்திக்கு வேறொரு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். பிரசாந்தி சிறப்பு முகாமில் மகேஸ்வரனை சந்திக்க சென்றார். அங்கேயே இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டு ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.vvv கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

2010 இல் செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது, 200 காவல்துறையினர் இரவு நேரத்தில் உள்ளே நுழைந்து போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினார்கள். 15 அகதிகள் படுகாயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து இவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்ததாக நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பத்து நாட்களின் பின்னர் இவர்கள் வேலூர் சிறையிலருந்து பிணையில் விடுதலையானதும், பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கபபட்டார்கள். இறுதியில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

2015, 2016 காலகட்டத்திலும் சிறப்பு முகாம் அகதிகள் உண்ணவிரதப் போராட்டம் நடத்தினார்கள். 2015 இல் இடம்பற்ற போராட்டத்தை, முகாம் நிர்வாகிகளும், அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும், ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. 2016 டிசம்பர் மாதம் இவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்புமாறு, மீண்டும் உண்ணாவிரத போராட்டம் செய்தார்கள்.

அவர்களில் சிலர் சுற்றுலா விசாவுடன் இந்தியா வந்தவர்கள். பொய்குற்றசாட்டுகளை இவர்கள் மேல் சுமத்தி இவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளியேற முயற்சித்ததாக வேறு சிலர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதாக உறுதிமொழி கொடுத்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள்.

ஆனால் அவர்கள் இன்றும் அதற்காக காத்திருக்கிறார்கள். 2019 யூன் மாதத்தில் ரைம்ஸ் ஆவ் இந்தியா பத்திரிகையில் வந்த செய்தியில் 30 ஈழத்தமிழ் அகதிகள் திருச்சி சிறப்பு முாமில் இன்றும் உள்ளார்கள் என்று சொல்லப்பட்டது. அவர்களில் பாஸ்கரன் என்பவர் தன்னை விடுவிக்க முடியாவிட்டால் தன்னை இரக்க கொலை செய்யுமாறு கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார் என்றும் சொல்லப்பட்டது.

ஈழத்தமிழ் அகதிகள் மட்டுமே இவ்வாறான கொடிய சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவதாக சட்டவாளர் புகழேந்தி சொல்கிார். இதற்கு ஆதாரமாக திருப்பூர் சிறப்பு முகாமில் இருந்த 12 நைசீரியாவைச் சேர்ந்தவர்களை புகழேந்தி உதாரணமாக காட்டுகிறார். நைசீரயர்களின் போராட்டங்களை தாங்க முடியாமல், அவர்கள் தமிழ்நாட்டு அரசின் செலவில் நைசீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இதே போல தாமும் குடும்பங்களுடன் வாழவும், தமது வழக்கை துரிதப்படுத்துமாறும் போராடிய ஈழத்தமிழ் அகதிகள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுகின்றன. வெவ்வேறு நாட்டு அகதிகளை இந்தியா வெ்வேறு விதமாக கையாளுகிறது என்று சட்டவாளர் ராதகிருஷ்ணனும் சொல்கிறார்.

பாலியல் துன்புறுத்தல்கள்

தம்மேல் இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளை வெளிப்படையாக முறையிடுவது ஈழத்தமிழ் பெண்களுக்கு எப்போதும் கடினமானதாகவே உள்ளது. இதனால் சிறப்பு முகாமில் இருந்த ஏனையவர்கள் சொல்வதை வைத்தே இங்கு நடைபெறும் பாலியல் வனமுறைகள் மேல் ஒரு சிறு வெளிச்சத்தை காட்ட முடிகிறது. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பெண்கள் மேல் காவல்துறையும் மேலதிக சிவில் அதிகாரிகளும் கூட பாலியல் துன்புறுத்தல்கள் இழைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சிறப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக என்று அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள் காவல்துறையினராலும் மேலதிக சிவில் அதிகாரிகளினாலும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தனது சிறப்பு முகாம் பற்றிய நூலில் பாலசந்திரன் இவ்வாறு சிறப்பு முகாமிலிருந்து வெளியே கூட்டிச்செல்லப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பல சம்பவங்களை விபரிக்கிறார்.

ஒரு சம்பவத்தில், ஒரு முகாமுக்கு பொறுப்பாகவிருந்த தாசில்தார் ஒரு பெண்ணை தொடர்ச்சியாக வெளியே கூட்டிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கிறார். வெளியே வாழும், அதாவது முகாம்களில் இல்லாத, ஈழத்தமிழ் அகதிப் பெண்களும் தமிழ்நாட்டு காவல்துறையின் பாலியல் வேட்டைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கியூபிரிவின் ஒரு பெரிய அதிகாரி ஒரு ஈழத்தமிழ் அகதிப்பெண்ணின் கணவர் மேல் பொய்குற்றசசாட்டுகள் சுமத்தி சிறப்பு முகாமில் அடைத்திருக்கிறார். பின் தன்னுடன் அப்பெண் பாலியல் உறவு வைத்தால் மட்டுமே அவர் கணவரை விடுதலை செய்வதாக வற்புறுத்தி இருக்கிறார்.

இதுபற்றி அறிந்த வேறொரு காவல்துறை அதிகாரியும் அப்பெண்ணை இதே போல வற்புறுத்தினார். அப்பெண் இவர்களின் இச்சைகளுக்கு மறுப்பு தெரிவித்தபோது அவரையும் போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வேறொரு சிறப்பு முகாமில் அடைத்திருக்கிறார்கள்.

மக்களின் குரலை மௌனிக்கும் ஆயுதமாக சிறப்பு முகாம்

திறந்த முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்கள் நிலைமை பற்றி போராட்ட குரல் எழுப்பாமல் அடக்குவதற்கும் சிறப்பு முகாம் ஒரு ஆயுதமாக கையாளப்படுகிறது என்பதை சட்டவாளர் புகழேந்தி ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார். முகாமில் இல்லாமல் வெளியே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஈழத்தமிழ் அகதியான ஈழநேரு என்பவர் திறந்த முகாம்களில் இருந்த மாணவர்களின் பல்கலைக்கழக படிப்பிற்காக தமிழ்நாட்டு சினிமா பிரபலங்களிடமும் ஏனைய செல்வந்தர்களிடமும் நிதி திரட்டி உதவி செய்து வந்தார்.

அக்காலத்தில், திறந்த முகாமிலிருந்த நான்கு ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமிற்குள் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் திறந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டார்கள். இச்சம்பவத்தை ஈழநேரு ஊடகங்களுக்கு தெரிவித்தார். அடுத்த நாள் அவரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

வேறொரு உதாரணத்தில், போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிந்த 2009 காலப்பகுதியில், நான்கு ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலிருந்து மருந்தும் இரத்த பைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்து செல்ல முயன்றார்கள். அவர்களும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்த போது, அவர்கள் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து, பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒரு ஈழத்தமிழர் லண்டனிலிருந்து திருமணம் செய்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார். இவர் முன்னரும் இருதடவைகள் தமிழ்நாட்டிற்கு வந்து போயிருக்கிறார். மருந்து கொண்டு செல்ல முயற்சித்து சிறப்பு முகாகமில் அடைக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட நால்வரில் ஒருவரின் நண்பர் இவர். தனது நண்பருக்காக ஒரு மடிக்கணனியை லண்டனிலிருந்து கொண்டுவந்திருக்கிறார். சிறப்பு முகாமிலிருந்த நண்பருக்கு ஊடாக இவரை கண்டிறிந்து இவரும் சிறப்பு முகாமில் அடைப்பா்ாட்டார். இவர்கள் எல்லோருமே ஐந்து வருடங்களின் பின்னர் தான் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஏன்?

சிறப்பு முகம்கள் முற்றிலும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. இதே தமிழ்நாடு அரசுதான் ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு  இந்திய மத்திய அரசுடன்  மோதுவதாக சொல்லப்படுகிறது. இந்த முரண்பாட்டையும் புதிரையும் பற்றி சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், இக்கொடூரமான சிறப்பு முகாம்கள் தொடருகின்றன. சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளின் விடுதலைக்காக உழைத்த தமிழ்நாட்டு சட்டவாளர்களும் ஆர்வலர்களும் சொல்வதில் சில பொதுவான கருத்துக்கள் காணப்படுகின்றன. திறந்த முகாம்களில் உள்ள அகதிகளின் வாயை மூடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஒரு சுலபமான வழியாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மேலுள்ள தடையை தொடருவதற்காக, சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்கள் இருப்பதை காட்டி இந்தியாவில் விடுதலைப்புலிகள் இப்போதும் இயங்குவதாக சொல்லி வருவதும், சிறப்பு முகாம் தொடருவதற்கான ஒரு காரணம் என்று சில ஆர்வலர்கள் சொன்னார்கள்.

உயர்நீதி மன்றத்தில் விடுதலைப்புலிகள் மேலுள்ள தடையை தொடருவதற்கான ஆதாரங்களை கொடுக்க இந்திய அரசால் முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். இதனால் விடுதலைப்புலிகள் மேல் தடையை தொடருவதற்கு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கவில்லை. பதிலாக இந்திய மத்திய அரசு ஒரு விசேட தீர்ப்பாயத்தை உருவாக்கி, அதுவே விடுதலைப்புலிகள் மேல் தடையை தொடர வேண்டும் என்று முடிவு செய்கிறது.

குறிப்பு  – Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் 2017 இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu)  கட்டுரையின் தமிழாக்கம். இதில் சொல்லப்பட்டவை இன்றும் பொருந்தும் என்பதற்கு Times of India பத்திரிகையில் 2019 யூன் மாதம் வந்த ஒரு சிறிய செய்தி ஆதாரமாக இருக்கிறது. இதுவும் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

[1]சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்”, தோழர் பாலன், தோழர்

பதிப்பகம், 2015.

https://www.epw.in/author/n-malathy

https://sangam.org/wp-content/uploads/2017/12/EPW-Shadow-Prisons-by-N.-Malathy-April-2017.pdf