காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்

அமெரிக்காவில் நடைபெற்ற ஜோர்ஜ் புளொய்ட்டின் மேலான நிறவெறிப் படுகொலைக்கு எதிராக உலகெங்கும் உள்ள மக்கள் திரண்டு எழுந்து காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட அடிமைத்துவ போற்றுதலை எல்லாநிலைகளிலும் அகற்ற வேண்டுமென்ற வேண்டுகோளையும் அதனை வலியுறுத்தும் போராட்டங்களையும் உலகெங்கும் திரள்நிலைப் போராட்டங்களாக (Mass Protest)  வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலகின் பல்கலைக்கழக நகரமெனப் போற்றப்படும் ஒக்ஸஸ்வேர்ட்டிலும், உலக கலாச்சாரங்களின் நகரமெனப் போற்றப்படும் இலண்டனிலும் கொரோனா தொற்று அச்சத்துக்கு நடுவிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு எழுந்த மக்கள் திரள்நிலை பிரித்தானிய காலனித்துவ காலம் உலகில் ஏற்படுத்திய அடிமைத்துவ கட்டமைப்புக்களும் ஆட்சிமுறைமைகளும் மாற்றப்பட்டு சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் போற்றப்பட வேண்டும் என்கிற பிரான்சியப் புரட்சியின் புதிய வருகையாக மக்களின் இறைமை அரசாங்கத்தின் இறைமைசார் முடிவுகளை நெறிப்படுத்துவதே உண்மையான மக்களாட்சி முறைமை என்பதை மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளது.

இந்நேரத்தில் காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவ சிந்தனையில் எடுக்கப்பட்ட காலனித்துவகால முடிவுகளும் மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது.

ஏனெனில் காலனித்துவகாலத்தில் காலனித்துவ அரசுகள் செய்த தன்னிச்சையான அரசியல் தீர்மானங்களும் பொருளாதார முடிவுகளுமே இன்று உலகெங்கும் உள்நாட்டுப் போர்களும் அகதிநிலை வாழ்வுகளும் என்றுமில்லாத அளவுக்கு இந்த அறிவியல் உலகிலும் அதிக அளவில் காணப்படுவதற்கான மூலகாரணங்களாக உள்ளன.

ஈழத்தமிழர்களின் சமகால வரலாறும் 1956 முதல் 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வரை சிறிலங்கா சிறிய அளிவிலும் பெரிய அளிவிலும் தொடர்ச்சியாகச் செய்து வந்த ஈழத்தமிழினஅழிப்புகளும் காலனித்துவம் எடுத்த தவறான முடிவுகளின் விளைவுக்கு நடைமுறை உதாரணங்களாகவே திகழ்கின்றன.

காலனித்துவம் எடுத்த தவறான முடிவுகள் கொடுத்த ஒற்றையாடசிச் சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற மேலாண்மையைக் கொண்டே 2009 முதல் இன்று வரை ஈழத்தமிழின அழிப்பையும் ஈழத்தமிழின கலாச்சாரஇனஅழிப்பையுமே தமது நோக்காகவும் போக்காகவும் கொண்டு அனைத்துலகச் சட்டங்களுக்கோ அனைத்துலக அமைப்புக்களின் நெறிப்படுத்தல்களுக்கோ இடந்தர மறுத்துத் தன்னிச்சையாக சிறிலங்கா பாராளுமன்ற கொடுங்கேகான்மை ஆடசியையே இலங்கைத்தீவில் தொடரவும் செய்கிறது.unnamed 4 காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்

எந்த சிறிலங்காப்படையினர் ஈழத்தமிழின அழிப்பினை நடாத்தினரோ அந்தப் படைத்தலைமைகளையே அரசாங்கத்தின் நிர்வாகத்தின் தலைமைகளில் நியமித்து ஈழத்தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்துக்கு உள்ளாக்கும் பணியக ஆட்சியால் அவர்களின் அரசியல் பணிவை ஆயுதமுனையில் சிறிலங்கா தொடர்ந்து பெற்று வருகிறது.

இதன்வழி ஈழத்தமிழரை ஆளும் உரிமையை சோல்பரி அரசியலமைப்பில் இருந்து தான் விலகி சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசைப் பிரகடனப்படுத்திய 22.05.1972 முதலே இழந்து விட்ட ஈழத்தமிழர்களை ஆளும் தனது ஆட்சி சட்டவிரோத ஆட்சியே என்ற உண்மையினை மறைத்து வருகிறது.

அதே வேளை ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுக்குச் சான்றாக உள்ள தொல்லியல், மானிடவியல், வராலற்றியல், இலக்கிய சான்றுகளை வேகமாக அழித்தொழித்துத் தமிழர் தாயகப் பகுதிகளைச் சிங்கள நாடென வரலாற்றுத் திரிபுவாதம் செய்வதில் முழுஅளவில் ஈடுபட்டும் வருகிறது.

இந்த ஈழத்தமிழினக் கலாச்சார அழிப்பு என்னும் தொடர் அரசியல் திட்டத்தின் இவ்வாண்டுக்கான திட்டச் செயற்பாடாக கிழக்கில் தொல்லியல் நிலங்களை இனங்காணவும் சிங்கள பௌத்த வரலாற்றுத் திரிபுவாதங்களை முறிடியக்க கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கென இரண்டு செயலணிகளை தனது படையணிகளால் வழிநடத்தப்படும் முழுவதும் சிங்களவரைக் கொண்டு கொரோனா தொற்றுச் சிக்கலில் உலகிருக்கும் துன்பநியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மேமாதத்தில் இன்றைய அரச அதிபர் கோத்தபாயா அமைத்துள்ளார்.

Kudumbimalai Thoppikkal காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்
Kudumbimalai

இது காலனித்துவம எடுத்த ஈழத்தமிழர்கள் குறித்த தவறான முடிவின் அவர் பெற்றுக் கொண்ட சிங்களபௌத்த பெரும்பான்மைக் கொடுங்கோன்மை ஆட்சி வழியான அவரின் இன்றைய செயற்பாடு.

ஈழத்தமிழர்களின் தாயகமான இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக தங்களுக்கான மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களின் பிரிக்கப்பட முடியாத பிறப்புரிமையான தன்னாட்சி உரிமையுடன் தனியான அரசுக்களை உருவாக்கி பாதுகாப்பான அமைதியுடன் வாழ்ந்து வந்தவர்கள்.

இலங்கைத்தீவு வரலாற்றுக் காலத்தில் கூட தனித்தனியான தமிழ் சிங்கள அரசர்களின் ஆட்சியில் இருந்து வந்ததே தவிர என்றுமே ஒற்றையாட்சியில் இருந்ததாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சி தன் சந்தை மற்றும் இராணுவ நலனுக்காக ஒற்றையாட்சியை அங்கு பிரகடனப்படுத்தும் வரை வரலாறு இல்லை.

1796இல் தமிழர்களின் தேசியத்தன்மையின் தனித்துவத்தை உணர்ந்து சென்னையில் இருந்து தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே ஆட்சி அலகாகக் கொண்டு, ஒரே காசுப் பரிமாற்றத்துடன் ஆளத்தொடங்கிய பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி தமிழர்கள் தனியான அரசியல் அலகு என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர்.
1802இல் இலங்கைத் தீவை “சிலோன்” என்ற பெயரில் பிரித்தானிய முடிக்குரிய அரசாக இணைத்துக்கொண்ட பிரித்தானிய அரசு 1832இல் தமிழர்களின் சிற்றரசாக இருந்து வந்த வன்னிச்சிற்றரசனான பண்டார வன்னியனைத் தோற்கடித்ததின் வழி ஈழத்தமிழர்களின் இறைமையின் மேலாளராக அவர்கள் வந்ததின் பின்னரே இலங்கைத் தீவில் தமது இறைமையை முழுதளவில் நிறுவிக்கொண்டனர்.

பிரித்தானியருக்கு முன்னர் இலங்கைத்தீவில் காலனித்துவ ஆட்சியை முதன்முதலில் ஏற்படுத்திய போர்த்துக்கேயர்கள் 1505 முதல் 1621 வரை இலங்கைத் தமிழர்களின் அரசான யாழ்ப்பாண அரசுடன் 116 ஆண்டுகள் தொடர்ந்து போராடியே ஈழத்தம்pழர்களின் இறைமைக்குத் தாங்கள் மேலாளராக வந்தனர்.
தமிழ் மன்னர்களான சேன (Sena) குந்தக (Guttaka) என்போர் கி.மு 177-155 வரை 22 ஆண்டுகள் அநுராதபுர அரசின் மன்னர்களாக விளங்கியுள்ளனர்.

அன்று முதல் எல்லாளன் ஈறாக அநுராதபுர அரசு தமிழர்களாலும் சிங்களவர்களாலும் மாறி மாறி ஆளப்பட்டுள்ளது. அநுராதபுர அரசிலும் தமிழர்களின் இறைமை அரச உரிமையாகவும் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றாக இவை உள்ளன. எல்லாளன் கி.மு 145-101வரை 44 ஆண்டுகள் அநுராதபுரத்தை செங்கோன்மை தவறாது ஆட்சி புரிந்துள்ளான். இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் அரசு புரிந்த முடிமன்னனும் இவனே.

ஐந்து தமிழர்களான புலகத்தா,பாகியா,பணயமாற, பிளையமாற, தாடிக என்போர் கி.மு 102-87 வரை 14 ஆண்டுகள் 7 மாதங்கள் அநுராதர்ர அரசை ஆட்சி புரிந்துள்ளனர்.

மகாதிஸன் காலத்தில் அரசமரபைச் சாராத சோரநாக என்பவன் தனக்குப் புகலிடம் அளிக்காத புத்தவிகாரங்களை தரைமட்டமாக்கினான் எனவும் இதனால் மகாதிஸனின் மனைவி அனுலாதேவி வடுக என்ற தமிழனை அரசனாக்கினான் எனவும் இவன் 1வருடம் 2மாதங்கள் கி.மு 47 இல் ஆட்சி புரிந்தான் எனவும் இவனை அனுலூதேவி கொன்றுவிட்டு அரண்மனைப் புரோகிதனாகிய நீலிய என்ற தமிழனை அரசனாக்கினான் எனவும் வரலாறு கூறுகிறது.

தமிழாதேவி என்ற தமிழ்ப்பெண்ணின் கணவனான இளநாக கி.பி 38-44 ஆண்டுகளில் ஆறு ஆண்டுகள் அநுராதபுரத்தை ஆட்சி செய்தமை நாகர்களாகத் தமிழர்கள் இருந்த காலம் முதலே அநுராதபுரத்தில் தமிழர்க்கு ஆட்சியுரிமை தொடர்ந்து வந்ததின் வெளிப்பாடு என்பர்.

வங்கநாகதிஸ்ஸ ஆண்ட காலத்திலேயே கரிகாலச் சோழன் படையெடுப்பால் 12000 பேரை திருச்சிக்குக் கொண்டு சென்று காவேரியில் கல்லணை அமைத்தான் என்பது ஈழத்தமிழர்களின் நீர்முகாமைத்துவத் திறன் சோழ அரசால் பயன்படுத்தப்பட்ட வரலாறாக உள்ளது. கி.பி 5ம் நூற்றாண்டில் பண்டு,அவன் மகன் பரிந்த, குட்டபரிந்த, திரிந்தர,தாட்டிக, பிட்டடிய,ஆகிய தமிழ் மன்னர்கள் அநுராதபுரத்தில் 27 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளனர்.

இவர்களுடைய ஆட்சி கதிர்காமம் அறகம உட்படத் தென்னிலங்கை வரை பரவியிருந்துள்ளது. இந்த வரலாற்றுத் தகவல்களை எல்லாம் தரும் தொல்லியல் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் இவர்கள் தென்னிந்தியர்கள் அல்ல இலங்கைத் தமிழர்களே என நாணயங்களை ஆய்வு செய்து நிறுவியும் உள்ளார்.

இவ்வாறாகத் தமிழ் மன்னர்களாலும் சிங்கள மன்னர்களாலும் மாறிமாறி ஆளப்பட்ட அநுராதபுர அரசில் தமிழருக்கு இருந்த இணைஇறைமை காரணமாக அநுராதபுரத்தில் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் கூட நகராண்மையில் தமிழர்களே தலைவர்களாக இருந்தனர்.

1956இல் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா என்ற ஆங்கிலப் பெயரைத் தாங்கி ஆங்கிலப் பல்கலைகழகத்தில் தன் சிந்தனையை உருவாக்கி உலக வல்லாண்மைகளுக்கு வளைந்து கொடுத்து ஆட்சி செய்யும் தந்திரோபாயத்தை தெரிந்து கொண்ட எஸ்டயிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவே ‘எங்கள் நாடு – எங்கள் ஆட்சி – எங்கள் ஆகமம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையை இலங்கைத்தீவின் அரசியல் கொள்கையாக்கி, இலங்கை சிங்கள நாடு சிங்களவரின் ஆட்சிக்கு உரிய நாடு – பௌத்த மதத்தினைப் பேணிடப் புத்தர் தந்த நாடு என்ற மகாவம்ச சிந்தனைக்கு ஏற்ப காலனித்துவ பிரித்தானியா தந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே சிங்கள பௌத்த ஆட்சிநிலையைத் தோற்றுவித்தார்.unnamed 1 1 காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்

இவரே அநுராதபுரத்தில் தமிழ் நகராட்சித்தலைமை தொடர்ந்து வந்த நிலையினை மாற்றக் கூடிய வகையில் புதிய உள்ராட்சி எல்லைகளை வகுத்துத் தமிழர் அதிகமாக வாழ்ந்த பகுதிகளை எல்லாம் மாற்றியமைத்து அநுராதபுரத்தை முழுச் சிங்களப் பிரதேசமாக நிறுவிக்கொண்டவர்.

அவ்வாறே கண்டியின் கடைச நாலு மன்னர்களும் தமிழர்கள் என்பதும் தமிழே கண்டியில் அரசமொழியாக இருந்தது என்பதும் வரலாறு. சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் பாட்டன் பிரித்தானியாவிடம் கண்டி அரசைக் கையளித்த சரணாகதி ஒப்பந்தத்தில் தமிழிலயே ரத்வத்தை எனக் கையொப்பமிட்டமை இதனை மேலும் உறுதி செய்கிறது.

கண்டி அரசின் கடைசி நான்கு தலைமுறை அரசர்களும் தமிழர் என்பதுடன் கண்டியில் தமிழ் அரசமொழியாகவும் இருந்துள்ளது. எனவே சிங்கள அரசுக்களின் உருவாக்கத்தில் கூடத் தமிழர்களின் இறைமைக் கூட்டை இலங்கைத்தீவின் வரலாற்றில் தெளிவாகக் காணலாம்.

காலனித்துவ காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையாக இருந்த டி. எஸ்சேனநாயக்காவே சோல்பரி அரசியலமைப்பில் ஈழத்தமிழர்களின் இறைமை சிங்களர்களின் இறைமையுடன் இணைந்து இலங்கைத்தீவுக்குச் சுதந்திரம் கொடுப்பது தொடர்பான எதிர்ப்பைத் தெரிவிக்க மாட்சிமைக்குரிய மகாராணி அவர்களைச் சந்திக்கச் சென்ற அன்றையத் தமிழ்த்தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலத்தை காலனித்துவ உயர் அதிகாரிகளைக் கூடச் சந்திக்க அனுமதிக்காத சூழ்நிலையை உருவாக்கி தங்கள் விருப்புப்புடி சிங்கள பௌத்த மேலாண்மையிடம் ஈழத்தமிழர்களின் உரிமைகளை காலனித்துவ பிரித்தானியா ஒப்படைக்கச் செய்தவர்.

இதற்காக இலண்டன் ரிசர்வ் வங்கியில் தேயிலை இரப்பர் கொக்கோ கோப்பி போன்ற பெருந்தோட்ட உற்பத்திப் பொருட்களின் உலக விற்பனையால் வைப்பு செய்யப்பட்டிருந்த பெருந்தொகையான பணத்தைத் தங்களுக்குத் தரவேண்டாம் எனப்பேரம் பேசியே ஈழத்தமிழர்கள் விடயத்திலும் மலையகத்தமிழர்கள் விடயத்திலும் பிரித்தானியக் காலனித்துவம் தவறான முடிவுகளை எடுக்கவைத்தார் என்பது வரலாறு.

இலங்கையில் பிரித்தானிய கடற்படையில் வைத்தியராகக் கடமையாற்றிய தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பொன்னையா அவர்கள் 01.09.1944இலே காலனித்துவச் செயலாளராக இருந்த ஒலிவர் பிரெட்ரிக் ஜோர்ஜ் ஸ்டான்லி அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தமிழ் இலங்கைக்கும் மிகுதியாக இருந்த சிலோனுக்கும்  (Tamil Ceylon and the rest of Ceylon ) இடையில் இருந்த வேறுபாடுகளை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

இஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில், நோர்வேக்கும் சுவிடனுக்கும் இடையில்,ஹொலந்துக்கும் பெல்ஜியத்திற்கும் இடையில், ஈக்குடோர்க்கும் பிரசிலுக்கும்,உள்ஸ்டருக்கும் மிகுதியான அயர்லாந்துக்கும் இடையில்,உள்ள வேறுபாடுகளை விட தமிழ் இலஙகையருக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன, ஆகையால் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு தமிழ் இலங்கையை பிரித்தானிய காலனித்துவம் பிரகடனப்படுத்தினாலேயே தமிழ் இலங்கை, இந்தியாவுக்கும் சிங்களநாட்டிற்கும் இடையிலான பாலமாகவும் அந்நாடு திகழும் என வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் இக்காலகட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் சோல்பரி ஆணைக்குழுவுக்கு அனுப்பிய மனுவில் இலங்கைத் தமிழர்கள் சிங்கள அரசுக்களின் உருவாக்கத்திற்கு அளித்த பங்களிப்புக்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இலங்கை முழுவதும் 50க்கு 50 என்ற வீதத்தில் தமிழ்ச் சிங்கள இறைமை இருப்பதைத் தெளிவாக்கினார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்த சுப்பிரமணியம் அவர்கள் சிறிய தேசியங்களின் தன்னாட்சிக்கு மதிப்பளிக்கும் பிரித்தானிய காலனித்துவம் தமிழர்களின் தன்னாட்சிக்கு மதிப்பளித்து கூட்டாட்சி முறைமையை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டிருந்தார்.

எனவே இலங்கைத்தீவில் தமிழர் பிரச்சினை (Tamil’s Question) என்பது காலனித்துவ பிரித்தானியா அரசின் தவறான முடிவு உருவாக்கிய அனைத்துலகப் பிரச்சினை.

இலங்கையின் இறைமைக்குள் என்றுமே தீர்வு பெற இயலாத பிரச்சினை. ஆதலால் காலனித்துவச் சின்னங்கள் குறித்து மறு ஆய்வு என்பது உலகப் பொதுமையாக வளரும் இக்காலத்தில் காலனித்துவ அரசுகளின் தவறான முடிவுகள் குறித்த மறுஆய்வுகளும் தொடங்கப்பட்டு உலகின் பாதுகாப்பான அமைதி வாழ்வு மீள் உருவாக்கப்படல் அவசியம்.