Home செய்திகள் காணிகள் அபகரிப்பு, காடுகள் அழிப்பு – மக்கள் போராட்டம்

காணிகள் அபகரிப்பு, காடுகள் அழிப்பு – மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை)பிரதேச செயலகத் திற்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காடுகள் அழிக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென் மேற்கு கால்நடை உற்பத்தி பால் பண்ணை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

IMG 2306 காணிகள் அபகரிப்பு, காடுகள் அழிப்பு - மக்கள் போராட்டம்

மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை)பிரதேச சபைக்கு  முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதி,பிரதமருக்கான மகஜர் ஒன்று பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸிடம் வழங்கப்பட்டது.

உழவன் வீட்டு உறவுகள் மாடு ஆளும் வர்க்கமே அடிமைப்படுத்தாதே, பண்ணையாளர்களின் வாழ்க்கையினை சீரழிக்காதே, மாடுகள் மேயவே மேய்ச்சல் தரை அதில் மனிதர்கள் மேய முனைவது ஏன்,வாழ்விடங்களை பிடிக்காதே வயிற்றில் அடிக்காதே, காட்டை வெட்டி நாட்டை அழிக்காதே, வாயில்லா ஜீவன்களை வதைக்காதே போன்ற பல்வேறு பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள்,கால்நடை பண்ணையாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமது மாடுகளை மேய்க்கும் பகுதிகள் அழிக்கப்பட்டு வேலியிடப்படுவதன் காரணமாக மாடுகளை கிராமங்களை நோக்கிகொண்டுவரும் நிலையேற்படுவதாகவும் தற்போது விவசாயம் செய்யப்பட்டு அறுவடை காலம் என்பதனால் மாடுகள் விவசாயத்தினை நாசம் செய்யும்போது அது விவசாயிகளுக்கு பாரிய நஸ்டத்தினை ஏற்படுத்தும் எனவும் இங்கு காலநடை பண்ணையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தாங்கள் மாடுகள் மேய்க்கும்போது சிறிய கம்பு வெட்டினாலும் கைதுசெய்து கொண்டுசென்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பெருமளவான தண்டப்பணம் அறவிடப்படும் நிலையில், வன இலாகாவின் உதவியுடன் பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு வேலியிடப்படுவது தொடர்பில் யாரும் கவனம் செலுத்த வில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியானது வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை அரசகாணியாக விடுவித்து தருமாறு கோரி பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் 2008 ஹெக்டெயர் காணிகள் மேய்ச்சல் தரைக்காக கேட்டு அனுப்பியிருந்ததாகவும் அதனை வனபரிபாலன திணைக்களம் பிரதேச செயலகத்திற்கு வழங்கும்போதுதான் இதற்கான தீர்வினை வழங்கமுடியும் என பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலையில் அந்த காணி விடுவித்து வழங்கப் படவில்லையெனவும் இது தொடர்பில் உரிய திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் உங்கள் கோரிக்கையினை வழங்குகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version