Tamil News
Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டுள்ளனர் – மோகன்

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டுள்ளனர் – மோகன்

காத்தான்குடியிலுள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சடலங்கள் பல மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதாகவும், மேற்படி இடங்களை தங்களால் அடையாளப்படுத்த முடியும் எனவும், இவை பற்றி கிழக்கு மாகாண இராணுவத் தளபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

தமிழ் உணர்வாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் குறிப்பிடும் போது, கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 35 பேரின் சடலங்கள் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டக்களப்பு நகர்ப்புறத்தை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காணாமல் போயுள்ளனர். எனவே உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக பலரும் தெரிவித்திருந்தனர். இது பற்றி மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால் இவ்விடயங்கள் அந்த நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.

இஸ்லாமிய அரசியல்வாதிகளின் நடவடிக்கையையும், இஸ்லாமியப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளையும் பார்க்கும் போது, இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி வருகின்றது என்றும், தெரிவித்திருந்தார்.

கிழக்கின் எல்லையாக கருதப்படும் புனானையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கின்றனர், தெற்குப் பகுதியில் புல்லுமலையில் தண்ணீர் தொட்டி அமைக்கின்றனர்.  இந்த விடயங்கள் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

முற்றுமுழுதாக அராபியக் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். என்றும் அந்த நேர்காணலில் மோகன் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

Exit mobile version