கரை ஒதுங்கிய 31 கடலாமைகள்- இரு கடலாமைகளுக்கு தீவிர சிகிச்சை

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரையில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் சடலங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில்,  நேற்று வரை இவ்வாறு  கரை ஒதுங்கிய 31  கடலாமைகள், 5 டொல்பின் மீன்களின்  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

இதில் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டின.  அத்துடன் மிக கவலைக்கிடமான நிலையில் உள்ள இரு ஆமைகளுக்கு தற்போதும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

இதனைவிட சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்து கரை ஒதுங்கிய 5 டொல்பினகள், பாறை மீன், வேறு சில மீன் வகைகள், கடல் வாழ் பறவைகள் என பல உயிரினங்கலின் உடல்கள்  மீட்கப்பட்டுள்ளதாக  குறித்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பங்குனி ஆமை ( Olive Ridley Turtle),அலுங்காமை ( Hawksbill Turtle), பெருந்தலை ஆமை  (Loggerhead Turtle), ஏழுவரி ஆமை  அல்லது தோனி ஆமை ( Leather back Turtle), ஒங்கில் ஆமை (Green Turtle), கெம்பஸ்ரிட்லி (Kemp’s Ridley), தட்டைமுதுகு ஆமை ( Flat back Turtle)  ஆகிய ஏழு வகையான கடலாமை வகைகளில்  தட்டை முதுகு ஆமை, கெம்ஸ் ரிட்லி ஆமை ஆகிய வகைகளைத் தவிற ஏனைய ஐந்து வகையான ஆமைகளும்  இலங்கை கடற்பரப்பில் அதிகளவு உயிர்வாழ்கின்றன.

இந்நிலையில் தற்போது  இறந்து கரை ஒதுங்கியுள்ள கடலாமைகளில்  மூன்று வகையான ஆமைகள் காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றன.

மன்னார் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன.

வௌ்ளவத்தை, தெஹிவளை, மொறட்டுவை, எகொட உயன, பாணந்துறை, கொஸ்கொட, இந்துருவ, காலி, உனவட்டுன, குடாவெல்ல, மாரவில மற்றும் துடாவெவ உள்ளட்ட கடற் கரைகளில் கரையொதுங்கிய ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரிய முடிகின்றது.

கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  சந்தன சூரிய பண்டார கூறினார்.

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் காணப்படுவதால் அவற்றிற்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நன்றி – வீரகேசரி