கண் பார்வை பாதிப்பு விவகாரம் :இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு கோரும் இலங்கை

இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும், மருந்தை கொள்வனவு செய்த முகவர்களிடமும் இதனை அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்களின் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், சில சமயங்களில் தர குறைபாடுகள் ஏற்படுகின்றன என்றும் உலக அளவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மருந்தை கொள்வனவு செய்யும் சப்ளையர் கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை விநியோகித்து வருவதாகவும், இது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி மூன்று அரச மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் பலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுமார் 30 நோயாளிகள் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் இழப்பீடும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.