Tamil News
Home உலகச் செய்திகள் கடும் உணவு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஏமன் – ஐ.நா. தகவல்

கடும் உணவு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஏமன் – ஐ.நா. தகவல்

ஏமன் கடும் உணவு நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால் அந்நாட்டுக் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனின் பல பகுதிகளில் உணவு நெருக்கடி அதிகரித்து வருவதால், அந்நாட்டில் உள்ள குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு ஏமனில் இந்த ஆண்டு உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனாவை விட உணவுக் குறைபாடு அங்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ஏமனில் போரை நிறுத்தவில்லை என்றால் நாம் பல இளம் குழந்தைகளின் வாழ்வை ஆபத்தில் தள்ள நேரிடும். நாங்கள் இதனை ஜுலை மாதம் முதலே எச்சரித்து வருகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நிதித் தட்டுப்பாடு நிலவுவதால், ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக் கணக்கான குழந்தைகள் பட்டினிக்குத் தள்ளப்படலாம். ஏமனில் உள்ள சுகாதார அமைப்புகள் கொரோனா வைரஸை சமாளிக்கப் போராடி வரும் சூழலில் அங்கு குழந்தைகளின் நிலைமை மோசமடைந்துள்ளது என முன்னரே தெரிவித்திருந்தது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்பட்டு வருகின்றது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருவதால், ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

Exit mobile version