கடந்த 10 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – சம்பிக்க

நாட்டிலுள்ள 25 லட்சம் இளைஞர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான 10 வருட காலத்தில் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் நாட்டுக்கு வருகை தராமல் இருப்பதாகவும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஹல் ஒழுவயில் நிர்மாணிக்கப்பட்ட 320 லட்சம் ரூபா செலவிலான பஸ் தரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எந்தவித யுத்த அச்சமும் இல்லாத நிலையில் கடந்த 10 வருடத்துக்குள் 25 லட்சம் இளைஞர்கள் நாட்டை விட்டும் வெளியே சென்றுள்ளனர். இவர்களில் தொழில் தகைமையுள்ளவர்கள் 10 லட்சம் பேர்.

யார் என்ன சொன்னாலும், இந்நாட்டில் இன்று பணியாட்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. அதிலும் துறை சார்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக தலைதூக்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வைத்தியத்துறை, பொறியியல் துறை, கணக்காய்வுத் துறை போன்றவற்றில் தற்பொழுது நாட்டில் 52 ஆயிரம் பேரே சேவையில் உள்ளனர். கடந்த 10 வருடங்களில் இந்த துறைசார்ந்தவர்கள் மாத்திரம் 52 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது கற்றவர்கள் வெளியேறிச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.