கச்சதீவுக்கு படையெடுக்கவுள்ள 9000 இந்திய மற்றும் இலங்கையர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக இந்த முறை 9000 இலங்கை – இந்திய யாத்திரிகர்கள் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இதை தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி திருவிழாவிற்கு முதல் நாளான 6 ஆம் திகதி அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணிவரை யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான படகு சேவையும் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.