Home செய்திகள் ஒரு போர்க்கால சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகத்தின் “வாழத்துடிக்கும் வன்னி” ஒரு பார்வை

ஒரு போர்க்கால சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகத்தின் “வாழத்துடிக்கும் வன்னி” ஒரு பார்வை

‘வாழத்துடிக்கும் வன்னி’ என்ற சமூகவியல்  கட்டுரைகள் “எமது சமுதாயத்திற்கும் அரசிற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும்  வன்னி மக்களின் அவலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்ற வீரகேசரி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகரன் அவர்களின் அணிந்துரையுடன்  இந்நூல்வெளிவந்திருக்கிறது.

இங்கு எமது சமுதாயத்திற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் உண்மையில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை இக்கட்டுரைகளை  வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில்  ஐயமில்லை.

வன்னி மக்கள் போரினால் அனுபவித்த துன்பங்களையும் அதிலிருந்து மீட்சி பெறத் துடிக்கும் இதயங்களையும் அவர்களின் ஏக்கத்தையும் போரின் முன்னரான வன்னியின் வளத்தையும் வனப்பையும் இப்போதிருக்கின்ற (யுத்தத்தின் பின்னர்) அழிவையும் ஆற்றாமையையும் பதினெட்டுத் (18) தலைப்புகளில் ‘வாழத்துடிக்கும் வன்னி’ என்ற பொருத்தமான தலைப்பில்; ஒவ்வொரு கட்டுரையும் வாழத்துடிக்கும் வன்னி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும்  படம்பிடித்துக் காட்டுகின்றன.

Vaalathudikkum Vanni 01 ஒரு போர்க்கால சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகத்தின் "வாழத்துடிக்கும் வன்னி" ஒரு பார்வை

யுத்தம் முடிவடைந்ததையடுத்து,

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகிய வன்னிப்பிரதேசம் இரும்புத்திரைகொண்டு மறைத்த ஒரு பகுதியாகவே  திகழ்ந்தது.சுதந்திரமாகவோ தன்னிச்சையாகவோ வன்னிக்கு எவரும் செல்ல முடியாத நிலைமை, பாதுகாப்பு அமைச்சினால் அரிதாக வழங்கப்பட்ட முன் அனுமதியுடன் இராணுவத்தின்வழித்துணையுடன்

அங்கு அழைத்துச் செல்லப்பட்ட முக்கியஸ்தர்களுக்கே இடங்கள் சுற்றிக்  காட்டப்பட்டன. புதுக்குடியிருப்பு வரை மட்டுமே தொடர்ந்து செல்லலாம். அதற்கு அப்பால் செல்ல முடியாது என இராணுவத்தினர் கூறினர்.

அரச சார்பு ஊடகங்கள் மாத்திரமே அவ்வப்போது அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து  அங்குள்ள நிலைமைகள் குறித்து உற்சாகமான முறையில் செய்திகள் வெளியாகின. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் (எதைத் தெரிவிப்பது என்பதை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். அவற்றுக்குள் மட்டும் நின்று நாங்கள் தீர்மானிக்கச் சுதந்திரம் தரப்பட்டது) என்ற வகையில் செய்திகள் உற்சாகமாக வெளிவந்தன.

அக்காலத்தில் ஏனைய வடமாகாணப் பிரதேசங்களுக்குச் சென்றவர்களுக்கு, மூடி அடைக்கப்பட்ட  பஸ்களில் சென்றமை ஞாபகத்துக்கு வரும்.அதுவும் அரச வேலைகளுக்குப் போகின்றவர்களுக்கே (தமிழ்த்தினப் போட்டி போன்ற…) அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அத்தகைய ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வன்னிப் பிரதேசத்திற்குச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு 2010 ஆம் ஆண்டளவிலேயே அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.அந்த நாடாளுமன்றக் குழுவில் இணைவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தின் மூலம் (வன்னிப் பிரதேசத்திற்குள் செய்தியாளர்களை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. குறிப்பாக பிபிசி செய்தியாளர் என்ற ஒரே காரணத்திற்காக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்து எல்லையாகிய ஓமந்தைச் சோதனைச்சாவடியின் தென்புறமாக, வவுனியா நகரில் இருந்த போதிலும் எனக்கும் வன்னிப் பிரதேசத்திற்குள் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டியிருக்கவில்லை என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்) பதினெட்டுத் தலைப்புக்களில் பதிவு செய்துள்ளார்.

முதலாவது கட்டுரையான மரத்தில பாம்பு பிள்ளைகள் சொல்லத்தான் தெரிஞ்சதுஎன்பதில், இது 2010 ஆம் ஆண்டு காணப்பட்ட வன்னிப் பிரதேசத்தின் ஒரு காட்சி.ஒரு பானை

 சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் என்று கூறி ஒவ்வொரு கட்டுரையையும் பதச்சோறாகப் பார்க்க, படிக்க, சிந்திக்க வைத்துள்ளார்.

இந்தப் புவியில் வலிந்து பறிக்கப்பட்ட வாழ்வுரிமைக்காகப்  போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு வாழத்துடிக்கும் வன்னி தொடர்பான சமூகவியல் கட்டுரைகளைச் சமர்ப்பணம் செய்துள்ளார் ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப்  பெற்ற கலாபூஷணம் பி.மாணிக்கவாசகம் அவர்கள்.

“நவீன கலிங்கப் போரில் வன்னி மக்களின் அவலங்களைக் கண்டு அகம் குமுறும் கோளரியாய் (எழுத்தாளராய்) எழுத்தென்னும் ஆயுதமேந்தியுள்ளார்  இந்த நூலாசிரியர்”என்று அணிந்துரை வழங்கிய ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் பொருத்தமானதே.

“தேசிய இனப்பிரச்சினை காரணமாக எழுந்த தனிநாட்டுக்கான யுத்தம் வன்னிப் பிரதேச மக்களுடைய வாழ்க்கையில் உச்சக்கட்டப் பேரவலமாகப் பதிவாகியுள்ளது.” என்று என்னுரையில் குறிப்பிடும் நூலாசிரியர் அந்தப் பேரவலங்களை ‘வாழத்துடிக்கும் வன்னி’ எனப்  பூடகமான தலைப்பிட்டு… ‘மரத்தில் பாம்பு பிள்ளைகள் சொல்லத்தான் தெரிந்தது’, ‘சராசரியாக எட்டு மாணவர்கள் உயிரிழந்து போனார்கள்’, ‘உழைப்புத் திறனை உணர்த்தியது’, ‘ஓடி ஓடிப் படம் எடுத்தனர்’, ‘சனமெல்லாம் நடையில தான் திரியுது’, ‘வாழ்க்கையின் உயிர்ப்பும் துடிப்பும்’, ‘சமூகங்கள் ஒரே குடும்பமாக வாழும் சிறப்பு’, ‘இடிந்த வீட்டில் ஆண்டுத் திவசம்’, ‘ஜோசப் ரிச்சர்ட்சன் பிராங்கோ’, ‘உக்கிர சண்டையில் உடைந்த தண்ணீர்த் தாங்கி’, ‘தேடாத இடமில்லை சொல்லாத ஆளில்லை’, ‘பிடித்துப் போன மிதிவெடி’, ‘நெல்லும் மில்லும் கூடவே வந்தன’, ‘அச்சம்- அவமானம் வெளியில் சொல்ல முடியாத நிலை’, ‘தரைமட்டமாகியும் தன்னம்பிக்கை இழக்காத தர்மபுரம்’, ‘பொன்னம்மாவின் பிள்ளைகள் போனதெங்கே’, ‘அடுத்தகட்ட அரசியல் செயற்பாடு என்ன?’ ஆகிய கட்டுரைகள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

“2010 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 24ஆம் திகதி வரையில் செல்வரட்ணம் சிறிதரன் என்ற புனை பெயரில் தொடர்ச்சியாகத் தினசரி வெளியாகியது” என்றும் “அப்போதைய இராணுவ அரசியல் சூழல் இந்தக்  கட்டுரைகளைச் சொந்தப் பெயரில் எழுதுவதற்கு உசிதமானதல்ல என்ற காரணத்தினாலேயே புனைபெயர் ஒன்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருந்தது” என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், இந்தக்  கட்டுரைத்  தலைப்புகளிலும்   இவற்றை மனங்கொண்டு… இறுதித் தலைப்பான ‘அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன?’ என்பதுதான் அரசியல் கட்டுரை போல அமைத்தும்  இருக்கிறார்.

இக்கட்டுரைத்  தலைப்புகளில் ‘ஜோசப் ரிச்சர்ட்சன் பிராங்கோ’ முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது என நினைத்து முதலில் வாசித்தபோது நூலிலுள்ள, யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய பாதுகாப்பும் அமைதியும் வன்னி மக்களுக்கு எட்டாக் கனியானது என்பதையும் இந்தத் தேசத்து மக்களின் மனக் கொதிப்புக்கள்,  உள்ளக் குமுறல்கள் இழப்புகளினால் ஏற்பட்ட ஏக்கங்கள் யாவற்றையும் அச்சிறுவனின் “நினைக்க நினைக்க வருத்தமாக இருக்குது” கூற்று..   ‘”பிராங்கோவின் கண்கள் குளமாகியிருந்தன. அந்தப்  பிஞ்சு உள்ளத்தின் வெதும்பல் மனதை என்னவோ செய்தது” என்று கட்டுரையாசிரியர் குறிப்பிடுவதிலிருந்து வாசகர்களும் வெதும்புவார்கள் என்றே கூறலாம்.

ஓரிரண்டு வருசத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லாம் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவது… என்று கூறி, எளிய பதங்கள்,எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய விடயம் என..எளிமையைப் பாரதி வலியுறுத்தியது போல  இந்த நூலிலுள்ள கட்டுரைகள் எளிமையாகவும் இயல்பாகவும் சான்றுகளுடனும் வந்துள்ளன.குறிப்பாக கட்டுரைகள் யாவும் அந்த மக்களோடு நடத்திய சம்பாசனைகளாகவும் அவர்களுடைய கூற்றுக்களாகவும் ஆசிரியர் எடுத்துரைப்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக:

1.சண்டை நேரத்தில் இருக்க

இடமில்லை.பாதுகாப்பில்லை.

இடத்துக்கு இடம்

இடம்பெயர்ந்தனாங்கள். இப்போ சண்டையில்லை.சமாதானம்  வந்துவிட்டது என்கிறார்கள்.

அப்படியென்றால் எங்களை ஏன் இங்கு அடைத்து வைத்திருக்க வேண்டும்?– மக்கள் கூற்று.

2.ஆதிகாலத்து மனிதர்கள் வாழ்ந்த மாதிரி,வடலி ஓலைகளால் அடைச்ச கூடுகளுக்குள்ளதான் பிள்ளைகளே அவையின்ர அடிப்படைத் தேவைகளுக்காக அனுப்ப வேண்டியதாயிருக்கு.–ஓர் ஆசிரியை கூற்று.

3.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த நான்கு நாள் விஜயத்தின்போது அவர்கள் எங்கெங்கு சென்றார்கள், யார் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்று அரச படையினரால் கண்காணிக்கப்பட்டது.

–நூலாசிரியர் கூற்று–

இவ்வாறு மிக எளிமையாகவும் மிகைப்படுத்தாமலும் பயனுள்ள தகவல்களை(1.ஆசியாவிலேயே அகதிகளுக்கான பெரிய முகாமாகக் கருதப்பட்ட மனிக்பாம் வாழ்க்கை, திறந்தவெளிச் சிறைச்சாலை அனுபவத்தையே அந்த மக்களுக்குத் தந்தது, 2.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் 1569/12 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு

https://www,thehindu.com/news/international/2010-kilinochchi-rape-case-four-former-sri-lankan-solders-convicted/article7739304.ece வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பதிவாகி உள்ளது.) போன்ற பல ஆதாரங்களுடன் தந்திருக்கிறார்.

“கலிங்கத்துப் போரினை  ஒத்த வகையில் முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடுமையின் விளைவாகத் தமிழ் மக்களுக்கு வெகுமதியாகக் கிடைத்தவை எரிந்து கருகிய நிலமும், கனவுகள் கலைந்த இதயமும், உறவுகள் தொலைத்த உறக்கமில்லா விழிகளும், முடங்கிய வாழ்வும், தடம்பதித்த கல்வி வடமிழந்த தேராய் ஆனதும்  தான்” என்ற அணிந்துரையும் , “துப்பாக்கி  வேட்டோசையும், வெடிகுண்டுகளின் அதிர்வும் ஓய்ந்தனவே தவிர, யுத்த முடிவு என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் மலரச் செய்யவில்லை. பிரச்சினைகள் ஓய்ந்து விட்டன என்ற  மன நிம்மதியைத்  தரவில்லை..” என்ற என்னுரையும் எமக்குக் கூறுவது என்ன? எமது ஒட்டுமொத்த வரலாற்றை அல்லவா..?

நாங்கள் வரலாற்றை படிப்பது வரலாற்றிலிருந்து பாடம் படிக்கவே. அன்றி மீண்டும் வரலாற்றுக்குள் செல்வதற்கு அல்ல.. ஆயினும் வரலாற்றிலிருந்து  நாம் பாடம் படிக்கவில்லை. உண்மையில் ‘வாழத்துடிக்கும் வன்னி’ என்ற இந்தச் “சமூகவியல் கட்டுரைகள் சமுதாயத்திற்கு ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல பாடமுமாகும்” என்று ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். இந்த வரலாற்றுப் பதிவு எல்லோராலும் படிக்கப்பட வேண்டும்.

வன்னி மக்கள் மட்டுமல்ல ஏனைய இலங்கைத் தமிழ் மக்களும் வாழத்துடிக்கும் நிலையில் இந்த வரலாற்றுப் பதிவு வாசிக்கப்பட்டு இந்த வரலாற்றிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். அவ்வாறு அமையுமானால் எமது சமுதாயத்திற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் வன்னி மக்கள் தொடர்பாக.. மட்டுமல்ல இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என்பது  உறுதியாகும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அணிந்துரையில் “இந்த நூல்  எமது சமுதாயத்திற்கும் அரசிற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் வன்னி மக்களின் அவலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்பது சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

குறிப்பாக அரசிற்கு விழிப்புணர்வா..?அரசு தூங்குகிறதா..?தூங்குவது போல பாசாங்குசெய்கிறது.

தூங்குகிறவன் போல நடிப்பவனை, ஏமாற்றுபவனை எழுப்ப முடியாது.அதற்காக நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை, கோரிக்கைகளை, உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடாது.இருக்கவும் முடியாது.

தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கவலையுடன்  பின்வாங்கக் கூடாது.நம்பிக்கைதானே வாழ்க்கை.ஆனால் அந்த நம்பிக்கையை வெறும் வாய்ச் சொல்லில் வைக்காமல் செயலில் காட்ட வேண்டும்.”சொல்லைப் பிடித்து வாழாதே..செயலைக் கருதி வாழ்” என்பதற்கேற்ப செயற்பட வேண்டும்.பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருப்பதா..? நம்பிக்கையோடு செயற்படுவோம்.

“பலரைச் சிலகாலமும் சிலரைப் பலகாலமும் ஏமாற்றலாம்.ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்பது அனுபவ வாக்கு.இது எங்கள் தலைமைகளுக்கும் பொருந்தும்.ஏனெனில் அவர்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும்.ஆனால் எங்கள் தலைமைகள்… நூலின் நிறைவுக் கட்டுரையில் இது அவர்களுக்கு(வன்னிக்குச் சென்று வந்தது) ஒரு புதிய அனுபவம்.இந்த அனுபவம் யுத்தத்தின் பின்னரான அவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டுமா?, என்று சிந்திக்கத் தூண்டியிருந்தது என்று முடித்திருக்கிறார்.

சிந்திக்கிறார்களா..?

நிறைவாக, இந்த நூல் இலங்கை தமிழ் மக்கள் வாசித்து விழிப்புணர்வு அடைய வேண்டிய ஒரு முக்கிய நூல் என்றும் குறிப்பிடக் கூடிய ஒரு வரலாற்று ஆவணம் என்றும் குறிப்பிடுவது பொருத்தமானதே..

 தொடர்புகளுக்கு: நூலாசிரியர் 94 7722 79021

pmanikavasagam@gmail.com

 ந.பார்த்தீபன்.

ஓய்வுநிலை உபபீடாதிபதி.

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி.

Exit mobile version