Tamil News
Home செய்திகள் ஒரு நாடு இரு தேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை கோத்தபயா ராஜபக்ஸ

ஒரு நாடு இரு தேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை கோத்தபயா ராஜபக்ஸ

உலகின் பலம்வாய்ந்த நாடுகள், எம்மீது ஆதிக்கம் செலுத்துவதை தாம் நிராகரிப்பதாகவும், ஏனைய நாடுகளிடம் தாம் நட்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று(13) நடைபெற்ற ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி கருத்தை வெளியிட்டார். இச்சந்திப்பின் போது, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி சுதந்திர இந்திய-பசுபிக் வலய எண்ணக்கரு குறித்து ஜப்பானுக்குள்ள அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு ஸ்திரத் தன்மை போன்றன பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கோத்தபயாவிடம் தெரிவித்தார்.

கோத்தபயா கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக தாம் முன்னின்று செயற்படுவதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்க அரசியல் செயற்பாடுகள், குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, பொருளாதர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியம் இலங்கைக்கே உரித்தானது என்பதை மறந்து பல வருடங்களாக இந்து-பசுபிக் கடற்பிராந்தியம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றமையை கவனிக்க வேண்டும். சர்வதேச சட்டத்திற்கமைய, இந்தக் கடற்பரப்பு இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இதனை ஏற்றுக் கொள்வதற்கும் மதிப்பளிப்பதற்கும் இப்போது சந்தர்ப்பம் வந்துள்ளது.

ஹொங்கொங்கில் நடைபெற்றதைப் போன்று ஒரு நாடு இரு தேசம் என்னும் விடயத்தை இலங்கையில் நடைமுறை்படுத்த பலம் வாய்ந்த நாடுகள் அழுத்தம் பிரயோகிக்கக்கூடாது என்றும், பிரிட்டன் தேர்தலில் பங்குபற்றிய கட்சியொன்று இத்தகைய சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படும் என கூறியிருந்தது என்றும் கோத்தபயா ராஜபக்ஸ, ஜப்பான் நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version