ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது? வெளிவிவகார அமைச்சு ஆய்வு

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியுள்ள நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் அது குறித்து ஆராயப்படவுள்ளதால், அதில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளது.

இது குறித்த செயல்முறையிலுள்ள நடைமுறைசார்ந்த விடயங்களை வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து – அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையிட்டு திட்டமிடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனிவா தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது, பகுப்பாய்வு செய்வது போன்ற செயற்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு தேவையாகவுள்ள நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதி பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுச் சபையின் 76 ஆவது கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகி இரண்டு வாரங்களுக்குத் தொடரும்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டில் இலங்கையில் ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே புதிதாக நிதி ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான பொறிமுறைக்கு 12 புலனாய்வாளர்களை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமிக்கவுள்ளது. உண்மைகளைக் கண்டறிதல், தகவல்களைச் சேகரித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பவற்றுக்காக இவர்கள் 4 தடவைகள் கள விஜயத்தை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆதாரங்களைத் திரட்டும் இந்தச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், செய்மதிப் படங்களைப் பெற்றுக்கொள்வது, அவற்றைப் பகுப்பாய்வு செய்வது என்பவற்றுடன் ஆதாரபூர்வமான தகவல்களின் காப்பகம் ஒன்றை உருவாக்குவதும் உள்ளடங்குகின்றது.

இருந்தபோதிலும், இதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதில் அதிகளவு நெருக்கடியை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.