Tamil News
Home செய்திகள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை சந்திக்க நீதித்துறையினருக்கு தடை

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை சந்திக்க நீதித்துறையினருக்கு தடை

சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளரை, தலைமை நீதியரசர் உட்பட நீதித்துறை அதிகாரிகள்  சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசிவூல், 2011இல் வெலிக்கடை சிறைச்சாலையில் றொசான் சானக கொலை செய்யப்பட்டமை மற்றும் 2012இல் நிகழ்ந்த ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் என மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஐ.நா. அறிக்கையாளர் நீதித்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவது, நீதித்துறையில் தலையீடு செய்யும் முயற்சி என்றும், இந்தச் சந்திப்பை நடக்காமல் தடுக்குமாறும் அவர் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை நீதி அதிகாரமற்ற நபர் ஒருவர் நீதித்துறையில் தலையீடு செய்ய அனுமதிப்பது, அரசியலமைப்பின் 111சி முதலாவது பிரிவை மீறும் செயல் என தினேஸ் குணவர்த்தனவும் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் தலைமை நீதியரசர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளை, ஐ.நா. அறிக்கையாளருடன் சந்திப்பிற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதி அமைச்சின் செயலாளரிடம், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அகமட் ஜவாட் கோரியுள்ளார்.

Exit mobile version